கனவே கலைந்து போ பாகம்- 18 துப்பறியும் திகில் தொடர்

முன் கதைச் சுருக்கம்

ஆகஸ்டு இருபதாம் தேதி இரவு இறந்து போனது நந்தினி என்று தெரிய வருகிறது...

................................................................................................................................................................................................

அதிகாலையிலேயே பிரசாத் விழித்துக் கொண்டான். மனப்பாரம் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது.
பிரியமானவர்களின் மரணம் அவனுக்குப் புதிதல்ல; தம்பியும் தாய் தந்தையும் அவன் கண் முன் இறந்ததைப் பார்த்தவன்தானே?

பார்க்கக் கூடாத மரண கோலங்களை பார்த்தாயிற்று; சில சமயம் தற்கொலை செய்து கொள்ளவும் தோன்றும்... அப்போதெல்லாம் அவனை தடுத்துப் பிடித்தது இள வயது இனிய நினைவுகள்தாம். நெட்டி முறித்து தீர்க்காயுசோடு இரு என்று நெற்றியில் பொட்டிட்ட அம்மாவின் நினைவு; நெஞ்சில் படுக்கையிடும் அப்பா; அண்ணனுக்கு கொடு என்று திண்பண்டங்களை சேர்த்து வாங்கும் தம்பி... ! மனிதன் உயிர் வாழ்வது உணவால் மட்டுமல்ல; நினைவுகளால்.... இனிய நினைவுகளால்.... தொட்டில் காலத்து நினைவுகள் !

"எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்" பார்த்தான். தமிழ்நாடு தேர்வாணையம் போலிஸ் வேலைக்கு அழைத்திருந்தது. உடனே விண்ணப்பித்தான்.

ஏதோ புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது! பீடையெல்லாம் தொலைந்து எண்ணெய்க் குளியலில் குளித்து வந்தாற் போல் சூரியன்!

பத்திரிக்கை ஆபிசில் இருந்த வேலைகளை முடித்து விட்டு பொது அறிவுப் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடமிருந்து ஃபோன்!

ஆவலோடு தடயவியல் துறையை அடுத்த காவல் நிலையம் சென்றான். மூர்த்தி அமர்ந்திருந்தார். நந்தினி வந்து விட்டாளா? நந்தினி பற்றி சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்தான்.

“ வா பிரசாத், ” உணர்ச்சியற்று வரவேற்றார் மூர்த்தி. “ உங்க எல்லோரையும் மறு விசாரணை செய்யச் சொல்லிட்டார் சார். ஆகஸ்டு இருபது அன்னிக்கு ஓட்டல் குருபிரசாத் கிட்ட இறங்குனதா சொன்னியே? ஏன்யா ஒரு அழகான பொண்ணு ஒரு ஆம்பளைய துணைக்கு கூப்பிட்டா, நீயும் நானும் இப்படித்தான் பாதியில விட்டுட்டுப் போவோமா? ஏன் அவர் குருபிரசாத் கிட்ட இறங்குனாருன்னு கேட்கலேன்னு எங்க ஏசி என்னைக் குடையறார்! ”

ஏசி ஆனந்த்தை தேடிச் சென்றான். கரடு முரடான ஆபிசரை தேடி வந்தவனை கல்லூரி மாணவர் போல் ஜில்லென்றிருந்த ஆனந்த் ஆச்சரியப்படுத்தினார்!

“ ஓ, நீங்கதான் பிரசாத்தா? நீங்க கொடுத்த துப்புதான் கேஸூக்கு உயிர் நாடியா இருக்கு! ” வஞ்சமில்லாமல் புகழ்ந்தார்.

“ சார், நான் ஹோட்டல் குருபிரசாத்ல தான் சாப்பிட்டிட்டிருந்தேன். அப்பத்தான் நந்தினி ஃபோன் பண்ணாங்க. உடனே கிளம்பிட்டேன். அதுல அந்த சூட்கேஸை எடுக்க மறந்துட்டேன்! ”

“ எந்த சூட்கேஸ்? ”

“ என் ரூம்மேட் பாலா நாடகம் போடுறவன். நாடகத்துல அவனுக்கு பொம்பளை வேசம். ஊரில இருந்து வர்ற ஆன்ட்டி தன்னோட சூட்கேஸைத் திறந்து ஒவ்வொரு பொருளா பார்வையாளர்களுக்குக் காட்டி வசனம் பேசணும். அதுக்காக கற்பகா காம்ப்ளக்ஸ்ல சொல்லி சூட்கேஸ் ரெடி பண்ணேன். பொம்பளை வேசம் போட தேவைப்படுற விக், சேலை, ஜாக்கெட்- இந்த ஜாக்கெட் வேற மாதிரி இருக்கும் - செயின், வளையல், அமுக்குத்தோடு, மேக்கப் சாதனங்கள், அது தவிர மூணு செட்டு லேடீஸ் டிரஸ், டவல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, பிரஷ், பேஸ்ட் எல்லாம் அந்த சூட்கேஸ்ல வச்சி எடுத்து வந்துட்டேன். அதத் தான் எடுக்க இறங்கினேன். ”

“அப்புறம் என்ன பண்ணீங்க? ”

பிரசாத் தயங்கினான். “சார், அப்ப எனக்கு கொஞ்சம் மெண்டல் பிராப்ளம் இருந்தது. அந்த மாதிரி சமயங்களில அதிகமா நடமாடாம மேன்ஷன்ல முடங்கிடுவேன். ஒரு மாதிரி அழுகின வெங்காய வாடை அடிக்கும்... ! ”

“ ஹோட்டல் குருபிரசாத்ல அழுகின வெங்காயம் யூஸ் பண்றாங்களா? ”

“ இல்லை சார், அப்படி ஒரு பிரமை எனக்கு வரும்! அதனால திரும்பவும் நந்தினிய நான் பார்க்கப் போகல; அது மட்டுமில்லாம அக்காவும் தங்கையும் பல வருஷம் கழிச்சு பார்க்கிற போது நாம எதுக்குன்னு தோணிச்சு. நான் பஸ்ஸேறி மேன்சன் போயிட்டேன்! ”

“ சூட்கேஸை பாலா கிட்ட கொடுத்துட்டீங்க! ”

“ அப்படித்தான் நினைக்கிறேன்! ”

“ நினைக்கிறேன்? ”

“ பாலா சூட்கேஸ் பத்தி எதுவும் கேட்கல. கொடுக்கலைன்னா கேட்டிருப்பானில்ல? ”

“ அது சரி, ப்ரியம் அபார்மெண்ட்ல இருந்து பட்டினப்பாக்கம் போற ரூட்டுல ஹோட்டல் குருபிரசாத் எப்படி வந்தது? ”

“ சார், சுத்து வழியில போனோம். ப்ரியம் அபார்மெண்ட்ல இருந்து பாரிஸ் கார்னர் போய் பட்டினப்பாக்கம் போனோம். நந்தினிதான் அப்படி போகச் சொன்னாங்க! ஒரு வேளை தங்கச்சி பாரிஸ் கார்னர்லயோ, மெரீனா பீச்சுலேயோ நின்னுட்டிருந்தா? ”

“ ம்...ம்.. ஏதோ எட்டு வயசுக் குழந்தைய தேடுற மாதிரி தேடி இருக்கீங்க...ஓ.கே ” என்ற ஆனந்த் சற்று நிறுத்தி மேலே பேசினார்.

“ பிரசாத், இங்க பாருங்க! இது கொலை கேஸ்! ப்ரியம் அபார்மெண்ட்ல இருந்து ஹோட்டல் குருபிரசாத் வரை நடந்த எல்லாத்தையும் சொல்லுங்க? சிலது முக்கியமில்லாத மாதிரி இருக்கும்; சொல்லணுமான்னு தோணும்! ஆனா எனக்கு எல்லாம் தெரியணும்! ப்ளீஸ்.. ! ”

பிரசாத் யோசித்தான்.

“சார், குருபிரசாத் முன்னாடி ஒரு மேம்பாலம் இருக்கே, அங்க எனக்கு ஒரு விபத்து நடக்க இருந்தது...! ”

ஆனந்த் புருவம் மேலே சொல் என்றது.

“ஆட்டோ நல்லபடிதான் போச்சு; என்ன ஆனதுன்னு தெரியலை. திடீர்னு என் உடம்பு ஆட்டோ விட்டு முக்கால் வாசி வெளியே வந்துடுச்சு. மேம்பாலத்திலிருந்து விழத் தெரிஞ்சேன். இருபதடி உயரம்; கீழே ஃபுல் ஸ்பீடுல டிராபிக்.. ! நல்ல வேளை! நந்தினிதான் கை கொடுத்தாங்க! ”

பிரசாத்தை வேறொரு அறையில் உட்காரச் சொன்னார்.

டாக்டர் மேனகா வந்தார்.

“ ஆனந்த், நந்தினியோட ஒரிஜினல் சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு ! நந்தினியோட வயசு என்னன்னு சொல்லுங்க, பார்ப்போம் ! ”

“ இருபத்தெட்டு, இருபத்தொம்பது இருக்கும் ! ”

“ இல்லே! நாற்பத்தி நாலு ! சடலத்தோட இடுப்பெலும்பும், முதுகெலும்பும் வயசு நாற்பதுக்கு மேல காட்டுனது. அதான் சர்ட்டிபிகேட் கொண்டு வரச் சொன்னேன். ”

ஆனந்த் சுதாரிக்குமுன்.... அடுத்த தாக்குதல்........ !

“ நந்தினியோட கைப்பைல பிரௌன் சுகர் படிஞ்சிருக்கு! சுஜாதா உடம்புல கிடைச்ச போதைப் பொருள் இருந்த பாட்டில் இவ கைப்பைல இருக்கு! ஒரு மயக்க மருந்து கிடைச்சிருக்கு! முதல் சடலத்துல இருந்த மயக்க மருந்து இதுதான்! இது கூட கொஞ்சம் தீக்குச்சியும் இருக்கு ! ”

“ ஐயோ, மேடம்! கொஞ்சம் சுதாரிக்க விடுங்க! ஹிரோஷிமா, நாகசாகி மேல அணுகுண்டுக்கு பதிலா உங்களைத் தூக்கி போட்டிருக்கலாம்.. ! விளைவு ஒரே மாதிரிதான் இருக்கும்.. ! ”

“ வெவ்வெவ்வே.. ! ”

“ சரி, சரி....தீக்குச்சியா ? வெறும் தீக்குச்சி ? தீப்பெட்டி? பீடி, சிகரெட்? ”

“ அதெல்லாமில்ல! ”

“ பிரயோஜனமில்லையே? ”

டாக்டர் மேனகா அகன்றதும் உறைபனியில் மாட்டியதைப் போல் அப்படியே உறைந்தார் ஆனந்த் !



தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Apr-15, 3:31 pm)
பார்வை : 348

மேலே