கண்ணீர் பயணங்கள்

''தம்பிக்குட்டி வீட்டுக்கு வந்துருப்பான். விரைவாக வீட்டுக்கு ஓடவேணும். அவன் அழக கண்டு பாடவேணும். நான் இன்புற அவன் முகத்த அடிக்கடி நாடவேணும். அவன் பிஞ்சு கை கால்கள தொடவேணும். அவன் பாதங்களில் என் அன்பு முத்தங்கள இடவேணும். அவன் கழிக்கும் சிறுநீர்த்துளிகள் என் மீது படவேணும். நான் வாங்கிய புதுச்சட்டைய அவனுக்கு போடவேணும். இன்பத்தில மெய்மறந்து நான் ஆடவேணும்.'' என எண்ணிக்கொண்டே பள்ளத்தை நோக்கி வருகின்ற ஆற்றைப்போல் ஆரம்ப பள்ளியிலிருந்து புரண்டோடி வந்தேன்.

''வந்துட்டான் வெளங்காதவன். நீ ஓன் புள்ளய தூக்கிட்டு அந்த அறைக்குள்ள போ! இன்னும் எத்தன நாளைக்கு இவன மேய்க்கப் போறோமோ தெரியலயே....!'' என பாட்டி சித்தியை எச்சரித்தாள். என்னை பார்த்து கண்களால் எரித்தாள். அவள் பேச்சு எனக்கு புரிந்தது. அவள் விடும் மூச்சு அனல் தெரித்தது. வாசற்படியிலேயே அமர்ந்து விட்டேன். ''பொறந்தவுடனேயே அம்மாவ முழுங்கிட்ட, அப்பன் கால எடுத்து ஒட்கார வைச்சுட்ட, ஒன்ன பாத்துக்க வந்த என் மகள அவ அண்ணன் தம்பிகள்ட இருந்து பிரிச்சுட்ட. இப்ப இந்த பச்சக்கொளந்தய பொறந்து மூணு கிளம கூட ஆகாத இந்த பிஞ்சு புள்ளய வஞ்சம் தீர்க்கவா வந்திருக்க? ஒன் கண்ணு பட்டாலே அவன் வாழ்க்கயில மண்ணு போட்ட மாதிரி ஆயிடுமே! நான் என்ன செய்ய..... எமன் கிட்டேயிருந்து தப்பி வந்தாலும், இவன் கிட்டேயிருந்து தப்ப முடியாது போலிருக்கே.....'' பாட்டி புலம்பிக்கொண்டே வீட்டுக்கு பின்புறம் உள்ள கிணற்றடிக்கு சித்தியின் துணிகளை துவைப்பதற்கு சென்றாள். பத்து வயதும் நிரம்பாத எனக்கு அவள் பேச்சு கேட்டதும் பத்திகொண்டுதான் வருகிறது. ஆனாலும் என் புத்திக்கு அழமட்டுந்தான் தெரிகிறது. அப்பாவை பார்த்தேன். ஏதும் கணக்கெடுக்காதவர் போல் சுவர் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டார். முழங்காலை மடித்து என் தலையை அதனுள் புதைத்து வேதனைகளையெல்லாம் கண்ணீரில் கரைத்து வெளியேற்றினேன்.

தரித்திரம் என்பதால்தானோ நான் பிறந்தபோதே என் அம்மா தன் சரித்திரம் முடித்துக்கொண்டாள் போலும். தாய்ப்பாலின் சுவையோ, தாய்ப்பாசத்தின் சுகமோ அறியாமல் வளர்ந்தேன். ஊருக்கு வெளியே ரயில் நிலையத்தில் மணி அடிக்கும் வேலை செய்த அப்பா, எப்படியோ ரயில் விபத்தொன்றில் தன் வலது காலை இழந்தார். அதனால் வேலை துறந்தார். என்னை பராமரிக்க தூரத்து சொந்தமான தன் மச்சாள் முறையென்று இச்சித்தியை திருமணம் செய்து அழைத்து வந்தார். ஆரம்பத்தில் சித்தியும் என் மீது பாசமாகத்தான் இருந்தார். அவர்கள் குடும்பத்தில் ஏதோ குழப்பம். அதற்கும் என் ஜாதகம் தானாம் குற்றம். என் மீது அவர்கள் எல்லோருக்கும் சீற்றம். அப்பாவின் மனதிலும் ஏற்பட்டது மாற்றம். என்னை கண்டால் என் குடும்பத்தார் எல்லோருக்கும் நாற்றம். ஓதுங்கியே போவார்கள்.

சித்திக்கு பிள்ளை பிறக்கப்போகிறது என தெரிந்ததும் சித்தியின் அம்மா, என் பாட்டி வந்து தன் வீட்டுக்கு கூட்டிச்சென்றாள். தம்பிக்குட்டி பிறந்ததும் அப்பா மட்டும் தனியாகத்தான் சென்று பார்த்துவிட்டு வந்தார். நான் கேட்டதற்கு ''பாடசாலை இருக்கு. நீ படிக்கணும்'' என்று தட்டிவிட்டார். அப்பா கொடுக்கும் காசில் சிறிது சிறிதாக சேர்த்து புதுச்சட்டை ஒன்றும் வாங்கினேன். மூன்று வாரம் கழித்து இன்றுதான் தம்பிக்குட்டியை தூக்கி வந்துள்ளார்கள். சித்தியின் முகத்தை பார்த்து அரை வருடங்களுக்கு மேலாக ஆகிறது. தம்பிக்குட்டியின் முகத்தை பார்க்க அரை மணித்தியாலமாக வாசற்படியிலேயே காத்திருக்கிறேன். கண்ணீரும் நின்றது. பசி மயக்கம். உள்ளே செல்ல தயக்கம். பாட்டியை நினைத்து கலக்கம். ஆனாலும் தம்பிக்குட்டியை பார்க்கும் ஆவளும், ஆசையும் எனக்கு மறைந்தபாடில்லை. என் மீது யாருக்கும் வெறுப்பு குறைந்தபாடில்லை.

அமர்ந்தபடியே தலையை நீட்டிப்பார்த்தேன், கண்களுக்கு ஒன்றும் எட்டவில்லை. உள்ளே சென்று ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன், ஏதும் தெரியவில்லை. பூட்டிய அறைக்கதவை தட்டிப்பார்த்தேன், திறந்தபாடில்லை. சுவரில் தலையை முட்டிப்பார்த்தேன், மூன்று தடவைக்குமேல் வலி தாங்கமுடியவில்லை. தம்பிக்குட்டியின் அழுகைக்குரல் கேட்டது. அவனை தூக்கவேண்டும் என ஆர்வம் அதிகமாயிற்று. புத்தகப்பைக்குள் வைத்திருந்த புதுச்சட்டையை எடுத்து வந்தேன். ஜன்னல் வழியே உள்ளே போடலாம் என கைகளை உயர்த்தியபோது ''என்னடா கண்ணா.....! ஏ அழுற? பயமா இருக்கா? அம்மா நா பக்கதுலயே இருக்கே. உன்ன எந்த தீமையும் நெருங்காம நான் பாத்துக்குறேன். எந்த கெட்டதும் உன்ன தொடாம நா காப்பாத்துவே. அழாம தூங்கு ராசா! தூங்கு! ரோ..... ரோ.... ரோ..... ரோ..... ரோ.....'' சித்தியின் குரல் ஒலித்தது. எனக்கு இதயமே வலித்தது. மரத்திலே கனியை கொய்து எடுப்பதுபோல் என் இருதயத்தை பிடுங்கி எடுப்பதாக உடல் துடித்தது. சித்தி தீமை, கெட்டது என சாதாரணமாக கூறினாரா இல்லை என்னைத்தான் உதாரணமாக எடுத்துக்காட்டினாரா என விளங்கவில்லை. பாட்டி கூறியது மீண்டும் என் காதில் எதிரொலித்தது. ''எமன் கிட்டேயிருந்து தப்பி வந்தாலும், இவன் கிட்டேயிருந்து தப்ப முடியாது போலிருக்கே.....'' உண்மையிலேயே குற்றவாளி நான்தானோ என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் இனியும் இங்கு நிற்பது சரியாகத் தோன்றவில்லை.

நிற்காத அடைமழைபோல் வற்றாத கண்ணீருடன் விறுவிறுவென்று ஊருக்கு வெளியே ரயில் நிலையத்துக்கு வந்து எந்த திசையில் போகிறது என்றே தெரியாமல், ஒரு ரயிலில் ஏறிவிட்டேன். பயண ரசீதும் எடுக்கவில்லை. எடுப்பதற்கு பணமும் இல்லை. இந்த ரயில் எதுவரை போகுமோ தெரியவில்லை. என் விதி என்னவென்றே எனக்கு புரியவில்லை. தம்பிக்குட்டிக்காக நான் வாங்கிய புதுச்சட்டையை முத்தமிட்டுக்கொண்டே ரயில் பயணமும், என் வாழ்க்கை பயணமும் இனி கண்ணீருடன் தொடரும்.

கற்பனைகள் யாவும் எனக்கு சொந்தமானவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (16-Apr-15, 8:28 pm)
Tanglish : kanneer payanangal
பார்வை : 319

மேலே