தண்ணீர்ப்பந்தலில் தேவதை

தண்ணீர்ப்பந்தல்
பன்னீர்ப்பந்தல் ஆனது,
நிழலுக்கு
நீ ஒதுங்கியதால் !

===================

நீ
தண்ணீர் குடித்த
தண்ணீர்ப் பந்தல்
வாட்ஸ் அப் இல்
வைரல் ஆனது !

===================

கொளுத்தும்
கோடையில்
நீ
நடக்கும் பாதைகளில்
தண்ணீர்ப் பந்தல்கள்
தேவையில்லை !

===================

நீ குடித்த
டம்ளரில்
குடித்தால் .....
நீர் மோரும்
சர்பத் ஆகும் !

===================

காற்று
வாங்கிக் கொண்டிருந்த
ஒரு தண்ணீர்ப் பந்தல்
உனது
வருகைக்குப் பிறகு
வியர்த்துக் கொட்டியது !

===================

எனக்கும்
ஒரு தண்ணீர்ப் பந்தல்
வைக்க ஆசை ....
அரசியல்வாதியாய்
அல்ல,
உன் போன்ற
தேவதைகளை
ரசிக்கும்
அழகியல்வாதியாய் !

===================

இலவசமாய்த்
தண்ணீர் தருவதால்
அது
தண்ணீர்ப் பந்தல் ...
இலவசமாய்
புன்னகை தருவதால்
நீ
புன்னகைப் பந்தல் !

===================

நீ
கப்பிக் குடிக்க
மாட்டாயா
என்கிற ஏக்கத்தில்
அந்த
பிளாஸ்டிக் டம்ளர் !

உனது
இடுப்பில்
ஏற்றிக் கொள்ள
மாட்டாயா
என்கிற ஏக்கத்தில்
அந்த
பிளாஸ்டிக் குடம் !

===================

நீ
நின்று கொண்டிருந்ததால்
தண்ணீர்
தீர்ந்த பின்பும்
சேவை
செய்து கொண்டிருந்தது
ஒரு
தண்ணீர்ப் பந்தல் !

===================

அண்ணாந்து
நீ குடித்த
நீர்,
உனது மேவாயில் வழிந்து
கழுத்தில் பயணிக்கும்போதே ,
"மோட்சம் மோட்சம் "
என்று கத்தி
மூர்ச்சையானது !

===================

நீயங்கே
நின்று கொண்டிருந்தாய் ....
"தண்ணீர்ப் பந்தலில்
தென்றல் "
என்றான் நண்பன் !
" தண்ணீர்ப் பந்தலில்
ஏ சி "
என்றேன் நான் !

===================

தண்ணீர்ப் பந்தலில்
நின்று
ஒரு செல்பி
எடுத்துக் கொண்டாய் ......
தாகம் தீர்ந்தது
தண்ணீர்ப் பந்தலுக்கு !

====================

கண்களின்
தாகம் தீர்க்கும்
நடமாடும்
தண்ணீர்ப் பந்தல்
நீ !

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (17-Apr-15, 6:58 am)
பார்வை : 273

மேலே