மரங்கள்
ஒருகால் தவத்தில்
ஓராயிரம் உயிர்வாழ
மண்ணில் தவம்செய்யும்
தாடியற்ற முனி நீ ...
ஏழையும் அணிகின்ற
முத்துக்கள்...
செடிகள் ருசிக்கும்
அமிர்தம்...
குளத்தில் விண்மீன்
மேகத்தில் கண்ணீர்
எல்லாம் தருகின்ற
மழைக் கர்ணன் நீ...
நான் சுவாசிக்க
ஆக்சிஜன் படைத்த
பிரம்மாவும் நீ...
ஊஞ்சலாட உன் தோள்...
நான் எழுத நீ...
என் உயிர் எனில் வாழ
உன் உயிர்...
மரப்பலகையில்
ஓர் வண்ணக் காகிதத்தில்
ஒரு வரியைக் கண்டேன்
"மரங்களை வெட்டாதீர்" என்று..
உனக்கும் வலித்திருக்கும் .
குடும்பக் கட்டுப்பாடு
செய்துவிடாதே...
எம் வம்சம் வாழ
உன் வம்சம் தேவை...
எம்மால் நீ
வாழவில்லை என்றாலும்
உன் தவத்தாலேனும்
செழிப்பாயே...
என் முனி...!