விசும்பும் மழைத்துளி
கடலம்மா கருவுறும்போதே என்னை
மேகப் போர்வை போட்டு
வானில் வளர விட்டவள் .
குந்தியம்மா கூட ,
தன்பிள்ளை கர்ணனை
அவன் இறப்பின் தருவாயில்
தன்மடி சேர்த்தாளாம்.
நானும் எனதன்னை
மடிசேர தீராத
ஆவல் கொண்டேன் .
ஆதலின் ....,
வானிலிருந்து
மழையாய்
மண்ணுக்கு
இறங்க முற்பட்டது முதல்,
கூவத்தின் முகப்பில் மூப்பெய்தி
மடியும்வரை வடிவமிழந்து
கெட்டழிவேனென்று கனவிலும் எண்ணவில்லை.
எல்லாம் உன்னால் தானே ..!மானுடா..!
உன்னில் குருதியோட்டம் நிகழவும் ,
பசும்புல் துளிர்விடவும் ,
உழவினார் கை உயரவும் ,
ஏன்?
விழைவதூம் விட்டோம்
என்பாற்குமாகவே (துறவி)
விசும்பின் துளியாகி
நிலம் நோக்கி இறங்குகிறேன்.
என்னைப் பார்த்தாகிலும் கிழிறங்கி வருதலிலும்,
தன்மையாய்,தண்மையாய்,
அரவணைப்பதிலும் தான்
ஆனந்தம் என்று அறிவாயா ...நீ..!
நதியின் மடி சேர்ந்த என்னை,
புனிதம் என்றெல்லாம்
ஆராதனை செயக் கூடவேண்டாம் ,
அணைகட்டி,சிறைபிடித்து ,
ஆதாயம் தேடி,ஆதாரம் தேடிவிட்டுப் போ,
ஆனால் மொழி பேதம்பேசி,
இனம் பேசி,சினம் பேசி ,
சுயநலத்தில் மூழ்கி,சகோதரனின்
உரிமை பறிக்காதே.
உனது நலம் கருதியே
என்னை மண்ணில் புதைக்கிறேன்.
புதிதாய் முளைத்தெழும் நீயும்
என் பிள்ளை தானடா ...!
சேமித்து வையென்று
உனக்குச் சொல்லவும் வேண்டுமோ ?
நானே உன் அன்னையும் ஆனதில்
பாதுகாத்து ,சேமிப்பதுன் கடனன்றோ..?
நெகிழிப் பைகளில் நாறிப்புதையுண்ட
என் புகுந்தவீட்டின் நதிநாளங்களைத்
தூர்வாறு ..,அது உன் வீடன்றோ?
அதற்கு முன் உன்சகோதரனுக்கு
தாகம் தீர்க்கும் உரிமையை கொடு.
துளியாய் நான் விழுந்து ,
மண்ணில் நதியாய் மாறிப்பின்
உன்னுயிரில் குருதியை ஓட்டுவதில்
எனக்கேதும் சுயநலம் உண்டா..?
மகனே..! குடும்பத்தோடு
கூடித் தூய்மை செய்..'
நாமொன்றிய வீடு [நதி] நலம்பெறட்டும்,
ஆதலினால் ஞாலம் நலம்பெறட்டும்,
உயிர்களனைத்தும், நல்லுருப் பெறட்டும்,
இதற்காகவே விசும்பி விழுகிறேன்,
இதைமட்டும் சொல்லிச் சொல்லியே விழுகிறேன் ..