ஒரு நாள்ஒரு நொடி
கண்களுக்கு இமை இருப்பதால் இழுத்துப் போர்த்திக் கொண்டு அடம் பிடிக்கின்றது...இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிகிறேனே என்று. காதுகளே.. நீங்கள் மட்டும் ஏன் சீக்கிரமே எந்திரிச்சிரிங்க. காலை(விடியல்) முதலில் தொடுவது செவியைத் தான் போல.
இரகசியமா ஒட்டு கேட்டிருக்கும் போல ஜன்னலோரம் விளையாடிக் கொண்டிருந்த சிட்டுக்குருவி ஜோடி ‘நாளைக்கு 6 மணிக்கெல்லாம் எந்திரிக்கனும்’னு நான் செல்பேசில பேசுனத. செல்பேசியினால் சிட்டுக்குருவிகளுக்கு ஆபத்து என சிட்டுக்குருவிகளின் உளவுத்துறையில் இருந்து அதற்கு தகவல் வந்திருக்கலாம். மறக்காமல் அதே ஜன்னலோரம் வந்து என்னை எழுப்பிவிட்டது அதன் தாய்மொழியில் ஜோடி சிட்டுக்குருவிகளில் ஒன்று மட்டும்.
7:30 மணி காட்டியது கடிகாரம் சாப்பிட உட்காரும் போது. மணியுடன் ஜன்னலோர அதே சிட்டுக்குருவியின் பிம்பத்தை பிரதிபலித்தது கடிகார கண்ணாடி. இக்கடிகாரத்தை பார்த்துதான் என்னை எழுப்பிவிட்டியானு அதன் தாய்மொழி தெரியாததால் என் தாய்மொழியில் எனக்கு நானே கேட்டுகொண்டேன் என் தாய்மொழி அதற்கு தெரியாது என்பதால்.
23.5டிகிரில் சாய்ந்து கொண்டே பயணிக்கும் பூமியைப்போல் கூட்டத்தால் ஒரு பக்கம் சாய்ந்தே வரும் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்(கள்) கல்லூரிக்கு. சீட்டில் சுகமாக உட்கார்ந்து வரும் அவங்களுக்கும் அதே கட்டணம். கடைசி படியில் ஒரு காலின் நுனியும், ஜன்னலோர கம்பியை பிடித்திருக்கும் கைகளை தவிர பேருந்திற்கு வெளியே இருக்கும் எனக்கும் அதே கட்டணமா என கேட்க வாய் திறக்கும். ‘அதனால் என்ன? உன் புத்தகங்கள் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் மடியில் பயணம் செய்கின்றதே’ என மனம் வாயை அடைத்துவிடும். உடம்பை படியில் தொங்க விட்டு மனம் எங்கோ பயணம் செய்யும் அப்பயணத்தில். இறங்கும் இடத்தில் மீண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்.
பொதுவாக நுழைவாயில் தான் தொடக்கம். ஆனால் இங்கு நுழைவாயில் தான் முடிவு... பிரமாண்டத்திற்கு, அழகிற்கு, சுத்ததிற்கு...
கணித ஆசிரியர். மனம் மூளையிடம் ஆலோசனை கேட்கிறது ‘இவரிடம் என்ன பொய் சொல்லலாம்’ என்று. போர்வீரனைப் போல தயாராக உள்ளது வாய்... பொய்க்காக. அவருக்கு தெரியும் எனக்கு இன்னைக்கு தேர்வு இல்லையென்று. அதனால் வீட்டில் சொன்ன அந்த பொய்யை இவரிடம் சொல்ல முடியாது. வலது மூளையும், இடது மூளையும் இணைந்து சட்டென்று சொல்லிக்கொடுத்தது உதடுகளுக்கு. உதடுகள் எதுவும் தெரியாத சிறு குழந்தை போல அப்படியே ஒப்பித்தது “நாளைக்கு பரிட்சைக்கு படிக்க வந்தேன் ஸார்”
நானும் கண்களும் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தோம். மணி பார்க்க சொல்லி கண்களை அடித்தது மூளை. 9:57AM. இன்னும் மூன்று நிமிடங்கள் தான்... தேர்வு ஆரம்பிக்க. கால்கள் தரையில் பரந்தும் ஒரு நிமிடம் ஆனது தேர்வு நடைபெறும் வளாகத்தை அடைய.. இப்பொழுது கால்கள் பறப்பதை நிறுத்தி கண்கள் பறக்க ஆரம்பித்தன. பி.எஸ்சி(பிசிக்ஸ்) தேர்வு எண் 223192.
என் கண்களில் பட அரை நிமிடத்திற்க்கும் மேல் ஆயின.
முதல் தளம், புது வளாகம், அறை எண்:13
கண்களுக்கு முடிந்தது தேடல். இனி கால்களுக்கு தான்.
9:59AM, புது வளாக நுழைவாயில். இன்னும் ஒரு நிமிடம் என்ற மகிழ்ச்சி அடுத்த நொடியே போனது.
“தம்பீ... பரீட்சை இருக்குறவங்க மட்டும் தான் உள்ள போகலாம். இல்லைனா போக கூடாது”- காவலாளி
கணித ஆசிரியரிடம் சொன்ன பொய் பொய்யானது. சொன்னது உண்மையானது. புத்தகம் எடுத்தேன். கனிம வேதியியல். பொழுது போக்கினேன்.
12:58PM.. எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
1:05PM… இன்னும் பார்க்கவில்லை. புது வளாகம் காலியானது என்னை தவிர.
கல்லூரி பேருந்துகள் அணிவகுத்து நின்றன... கிளம்புவதற்கு.
முதல் பேருந்து அருகில் நான்.
ஏழாவது பேருந்தில் ஏறினாள் அவள்.
அவளை கண்ட அந்த ஒரு நொடி தான்.... என் அன்றைய ஒரு நாள்