கனவே கலைந்து போ பாகம்- 19 துப்பறியும் திகில் தொடர்
................................................................................................................................................................................................
முன் கதைச் சுருக்கம்
காவல் துறை உயரதிகாரி ஆனந்த் மறு விசாரணை செய்கிறார். புதிய தகவல்கள் வெளி வருகின்றன....
..............................................................................................................................................................................................
ஆட்டோ டிரைவரிடம் இரண்டாம் கட்ட விசாரணை. அப்படியே இன்ஸ்பெக்டர் மூர்த்தியிடம் சில உத்தரவுகள்....தூள் கிளப்பினார் ஆனந்த்.
ஆட்டோ டிரைவர் வரும் போதே அலுத்துக்கொண்டு வந்தான், “எத்தனை தபா கூப்பிடுவீங்க சார்? ”
ஆட்டோ டிரைவருக்கு என்ன சாப்பிட பிடிக்கும் என்று கேட்டு பீட்ஸாவும் லஸ்ஸியும் வாங்கி வரச் செய்தார் ஆனந்த்.
இதற்கிடையில் முதல் சடலத்துக்கு அருகில் கிடந்த சூட்கேஸை மேஜை மேல் வைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல பிரசாத்தை அந்த அறைக்குள் அனுப்பினார் இன்ஸ்பெக்டர் மூர்த்தி!
பிரசாத்தின் நடவடிக்கைகளை கண்ணாடிச் சுவர் வழியாக கண்காணித்தார் ஆனந்த்!
உள்ளே நுழைந்த பிரசாத் சூட்கேஸை பார்த்ததும் குழம்பினான். பக்கத்தில் போய் கை படாமல் ஆராய்ந்தான். அப்படியே துள்ளி பின்னால் வந்தவன் மூர்த்தியை தேடி ஓடினான் !
ஆனந்த் டேபிளில் தாளம் போட்டார். பிரசாத் குற்றவாளி என்றால் சூட்கேஸை கண்ட மாத்திரத்தில் வெளியே ஓடிப் போயிருப்பான்.....!
ஆட்டோ டிரைவரிடம் முன்னர் பதிவு செய்யப்பட்ட டேப்பை போட்டுக் காட்டினார் ஆனந்த். "தங்கச்சிய கூட்டிட்டு வரணும்னாங்க"- ன்னு பொதுவா சொல்லி இருக்கீங்க. யோசிச்சு சொல்லுங்க, இந்த வார்த்தைகளை சொன்னது யாரு? பெண்ணா? அந்த ஐயாவா?”
சட்டென்று வந்தது பதில், “நந்தினியம்மாதாங்க!”
ஆனந்த்துக்கு மனதில் ஒரு சந்தேகம். தங்கச்சிய கூட்டிட்டு வரணும் என்று பிரசாத் தன் தங்கையை குறிப்பிட்டு அழைத்து நந்தினி போயிருந்தால்...........?
அதற்குத்தான் இந்த கேள்வி!
இதிலும் பிரசாத் ஜெயித்து விட்டான்!
“அப்புறம்... முக்கியமான, முக்கியமில்லாத உப்புப் பெறாத சம்பவம் ஏதாவது? ”
“சார், என் ஆட்டோ டேமேஜ் ஆயிடுச்சி! அதுக்கு ஏதாவது பணம் வாங்கித் தாங்க சார்! ”
“என்ன டேமேஜ்? எப்படி டேமேஜ்? ”
“சார், மேம்பாலத்துல போகும்போது அந்த சார் ஆன்னு கத்தினார். நந்தினியம்மாவும் ஆன்னு கத்தினாங்க. அப்புறம் அந்த சார் மேம்பாலத்துல இருந்து விழத் தெரிஞ்சார். என் ஆட்டோ பாலன்ஸ் தவறி மேம்பாலத்து கம்பியில மோதி டேமேஜ் ஆயிடுச்சி. எனக்கும் முழங்கையில சிராய்ப்பு. அந்த சார் சுதாரிச்சிகிட்டார். நான் கண்ணாடி வழியா பார்க்கும் போது அந்த சார் அந்தம்மாவோட மேல் கையை பிடிச்சிருந்தார். அந்தம்மா ஆட்டோ கம்பியை பிடிச்சிருந்தாங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகலியேன்னு அந்தம்மா பதறிப் போய் கேட்கிற குரல் கேட்டது. ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல; கவலைப்படாதீங்கன்னு இவர் சொன்னாரு! ”
“ இதை ஏன்யா முன்னாடியே விசாரிச்சப்ப சொல்லல? ”
“ஹி...ஹி.. முன்னாடி யாரும் சாப்பாடு வாங்கித் தரலையே? ”
“இல்ல, எனக்கொண்ணும் புரியல ! அந்த சார் ஆன்னு கத்தினார். அந்தம்மாவும் ஆன்னு கத்தினாங்க- என்ன சொல்ல வர்றீங்க? ”
ஆனந்த் காட்டிய முகபாவம் ஆட்டோ டிரைவருக்கே சிரிப்பு வந்தது!
“சார், அவர் பயத்தில் ஆன்னு கத்தினார்; அந்தம்மா வலியில் ஆன்னு கத்தினாங்க! ”
“நீங்க என்ன நினைச்சீங்க? ”
“வந்து......சொல்ல கூச்சமா இருக்கே? ”
“அப்ப கண்டிப்பா சொல்லணுமே! ”
“அய்யா சில்மிஷம் பண்ணி அம்மா செல்லமா தள்ளி விட்டாங்களோன்னு நினைச்சேன்! ”
“ ம்..ம்...நாட் எ பேட் கெஸ் ! நடக்கிற ஒண்ணுதான் ! என்ன, கேர்ல் பிரண்ட் அவ்வளவு பலமா தள்ளி விட மாட்டாங்க ! ”
“ வேற என்ன பேசினாங்க? ”
“ வேற யாரைப் பத்தியோ பேசினாங்க; கண்ணு முன்னாடி என்ன காரியம் பண்ணிட்டா! இனி இவளை சும்மா விடமாட்டேன்னு நந்தினியம்மா பயங்கர கோபமா பேசினாங்க! ”
ஆட்டோ டிரைவர் கிளம்பியதும் சப்-இன்ஸ்பெக்டர் காந்தன் வந்தார்.
“சார், ஆட்டோவுல சீட்டுக்கு அடியில இந்த நசுங்கிப் போன சிரிஞ்சும் ஓரத்துல சீட்டுல குத்திட்டு இந்த ஊசியும் கிடைச்சது! ”
? ! ? ! ? ! ? !
தொடரும்