அவளுக்குப் பேய் புடிச்சுருக்கு

ஏன்டி கமலா . . சேதி தெரியுமோ நோக்கு. .

என்னடி சேதி. .

நாலாவது வீட்டு சீதா இருக்காளே. அவளுக்குப் பேய் புடிச்சிருக்காம்.

அடப்பாவமே . நல்லாதானே இருந்தா . . என்னடி ஆச்சு.

அது என்னமோடி. . அவ ஆம்படையான் இவளை பொன்னோ பூவோன்னு மகாலட்சுமி மாதிரி பார்த்துன்டன்.

அதுதான் அவளுக்கு கொடுப்பினை இல்லையே.அவளையும் கைக்குழந்தையையும் நிராதரவா விட்டுட்டு ஆக்ஸிடென்ட்ல போய் சேர்ந்துட்டானே. பாவம்.

அவன் இருக்கும்வரை ரெண்டுபேரும் கொஞ்சறது என்ன. குலாவறது என்ன. ஏதோ அவன் இறந்தப்பறம் இவ படிச்சிருக்கிறதால அவனோட வேலையும் இவளுக்கு கிடைச்சது. இன்சூரன்ஸ் அது இதுன்னு ஏகப்பட்ட பணம் கையில கிடைச்சது.

அப்புறம் என்னடி. நல்லாதானே இருக்கா. அவன் ஒண்ணும் அவளை சும்மா விட்டுட்டு சாகலையே. பிறகு அவளுக்கு என்ன குறை.

அப்புறம்தான்டி பிரச்சினையே.வாடகைக்கு வந்த சில மாசத்திலேயே குடியிருந்த வீட்டை விலைக்கு வாங்கினாங்க. அந்த வீட்டோட ராசி அவன் பொசுக்குனு போய்ட்டன்.

ஏன் அந்த வீட்டுக்கு என்ன.

போடி அசடே. . நீ புதுசா இந்த தெருவுக்கு குடித்தனம் வந்ததால நோக்கு தெரியல. ரெண்டு வருசத்துக்கு முன்னால அந்த வீட்டுல வாடகைக்கு இருந்த ஒருத்தி தூக்குல தொங்கிட்டா. சில மாசமா அந்த வீடு காலியாதான் இருந்துச்சு. விசயம் தெரிஞ்சவா யாரும் குடி வரல. இவ புருசன்தான் பேயாவது பிசாசாவதுன்னு எக்காளமா குடி வந்தாங்க. அதோட சீப்பா கிடைத்ததுன்னு விலைக்கும் வாங்கிட்டான்.போயும் சேர்ந்துட்டான்.

அது சரி. . இவ்வளவு நாளா பிடிக்காத பேய் இப்பதான் சீதாவைப் பிடிச்சதாக்கும்.

புருசன் செத்து ரெண்டு மூணு மாசம் எந்த பிரச்சினையும் இல்ல . இப்ப கொஞ்ச நாளாத்தான் இந்த பிரச்சினையே.

அவளுக்குப் பேய் புடிச்சிருக்குனு உனக்கு எப்படி தெரியும்.

என் ஆத்துக்காரர் காலைலை தினமும் வாக்கிங் போவாரு . அவ என் ஆத்துக்காரர் சட்டையைக் கொத்தா பிடிச்சு ஆவேசமாக் கத்தினா. . நான் பதறி அடிச்சு ஓடி வந்தேன்.அவ ஆத்துக்குள்ள போயிட்டா.என் ஆத்துக்காரர் அப்பிராணியா கிழிஞ்சு போன சட்டையையே பேயறைஞ்ச மாதிரி வெறிச்சுப் பார்த்துண்டிருந்தார். .

அடப் பாவமே. . உன் வீட்டுக்கார்ட்ட என்ன ஏதுன்னு கேட்டியா. .

கேட்டேன்டி. . இவர் அந்த வழியா போகும் போது எதேச்சையா நியூஸ் பேப்பர் இன்னும் வரலையே.உங்காத்துக்கு வந்துடுத்தான்னு கேட்டிருக்கார். வரலைன்னு சொன்னவ திடீருன்னு முறைச்சுப் பார்த்துட்டு கத்தின்டே இவரோட சட்டையை புடிச்சின்டு பேய்க்கத்தல் கத்தியிருக்கா.நல்ல வேளையா நான் போனதால உடனே ஆத்துக்குள்ள போயிட்டா.

போனா என்னடி. அவள்ட்ட போய் என்ன ஏதுன்னு நாக்கைப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டுருக்கலாம்ல.

நானும் அப்படித்தான் நினைச்சேன்.என் ஆத்துக்காரர்தான் பாவம் வுடுடி.அவளுக்கு ஏதோ பிரச்சினை என்றார்.நோக்கு தெரியாதா என் ஆத்துக்காரர் இரக்க சுபாவம் பிடிச்சவர்.அதோட வெளியே தெரிஞ்சா நமக்கும் அசிங்கம்னு சொல்லிட்டார்.

அப்புறம் என்ன ஆச்சு.

நான் விடுவேனா. அவளைப் பற்றி அவ வேலை பார்க்குற ஆபீசுல விசாரிச்சேன். அவா சொன்னதைக் கேட்டா நீ இன்னும் ஆச்சரியப் படுவே.

என்னடி . .

இவ என் ஆத்துகுகாரர்ட்ட மட்டும்தான் இப்படி நடந்திருக்கான்னு நினைச்சா. கூட வேலை பார்க்கிற அக்கவுண்டண்ட் ஏதோ பைல் சம்பந்தமா கேட்டிருக்கார். திடீர்னு கூச்சல் போட்டு கூர்மையான பென்சிலால அவரோட கன்னத்துல குத்தியிருக்கா. மனுச்சனுக்கு கன்னத்துல ஓட்டை விழுந்து ஒரு வாரமா டிரீட்மென்ட் எடுத்திருக்கார்.

அடப் பாவமே.

அது மட்டுமில்லடி. கேசியரை செருப்பால அடிச்சிருக்கா. .
உதவி மேனேஜரை தலை முடியை புடிச்சி டேபிள்லயே முட்டு முட்டுனு முட்ட வச்சிருக்கா.

ஏன்டி. உன் புருசன்தான் இரக்க சுபாவம். நல்லவர்னு சொல்லுற.அவர் பாவம்முனு உட்டுட்டார். அவளோட ஆபீசுலயுமா அவ மீது நடவடிக்கை எடுக்கல.

அதையும் விசாரிச்சேனே. சம்பந்தப் பட்டவங்களே பாவம் புருச்ன் இல்லாத போண்ணு. பேய் புடிச்சிருக்கறதாலதான் இப்படி நடந்துகிட்டா.அதனால அவ மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்.

பாவம்டி அவ. இது எங்க போய் முடியப் போகுதோ. ஏதாவது சாமியார்ட போய் காட்டலாம்.யாராவது எடுத்து சொல்லி கூட்டிப் போலாமே.

அடிப் போடி இவளே. இவ சீமியாரையே கல்லால அடிச்சாலும் அடிப்பா. இவளை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தனும். .

ஆமாக்கா. . அடடே குக்கரை அடுப்பில வச்சேன். பேச்சு வாக்குல மறந்துட்டேன்.நான் வர்றேன்கா. . .

* * * * *
அம்மா வயிறு பசிக்குதும்மா. சீக்கிரம் நூடுல்ஸ் கொண்டாம்மா. .

இதோ வந்துட்டேன்டா செல்லம். . இந்தா சாப்பிடு.

ம். . ம். . ம். சூப்பரா இருக்கு.
அம்மா நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா. .

என்னடா செல்லம். . இன்னும் நூடுல்ஸ் வேணுமா.

அது இல்லம்மா. . ஆனா உன்ட்ட கேட்கவும் பயமாயிருக்கும்மா. .

சும்மா கேளுடா செல்லம். .

பக்கத்து வீட்டு கோபி உங்கம்மாவுக்கு பேய் பிடிச்சுருக்குன்னு சொல்றாம்மா.

அவனுக்கு யாரு சொன்னா.

அவங்க அம்மா அப்பா பேசிட்டிருந்தாங்களாம். நீங்க கூட அவனோட அப்பா சட்டையைப் படிச்சு கிழிச்சிட்டீங்களாம்.

ஆமாம்பா. . அம்மாவுக்கு பேய்தான் புடிச்சிருக்கு.சில மிருகங்கள்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கத்தான் எனக்கு பேய் புடிச்சிருக்கு.

எனக்கு பயமா இருக்கும்மா.

பயப்படாதேடா. அந்தப் பேய் நல்லங்களை ஒண்ணும் செய்யாது.

அப்படியாம்மா. . அவ்வளவு நல்ல பேயாம்மா அது.
அம்மா. . .அம்மா. . அந்த பேயோட பேரு எனேனம்மா. .

க ற் பு





*=*=*=*=*=*=*=*=*=*

கற்புக்கரசிகளுக்கு இந்த படைப்பு ஒரு எளிய சமர்ப்பணம்.

-------மணியன்----------


*=*=*=*=*=*=*=6=*=

எழுதியவர் : மல்லி மணியன் (18-Apr-15, 1:04 pm)
பார்வை : 357

மேலே