அறிந்தும் அறியாமலும்

ஒன்று சொல்கிறது. சொல்லுதல் எல்லாமே சொல்லுதலா என்று ஒன்று கேட்கிறது... தீர்க்க முடியாத விளிம்புகளில் பாதம் நடுங்கும் பின் நவீனத்துவம் போல ஒரு மாயங்கள் மனனம் செய்கின்றன. புனைவுகளின் புதிர் இயக்கக் கொள்கைகளில் நீள்வதுதான் வாழ்வதாகிவிடுகிறது. காணும் காட்சிகளில் எல்லாம் பிழைகள் என்று நம்பும் மதி மயக்க தூர்களில்மெல்லிய மிக மெல்லிய காதலால் செய்து படைக்கப் பட்டது இதயம் தாண்டிய உள்ளுணர்வு...அடிமனதுக்குள் அலை அடிக்கும், அலை அடித்த நினைவுகளில் மனது மாறும் கடிகார பின்னசைவின் தெய்வீக அமானுஷ்யம்.சலனக் கொடிகளில் நழுவும் பாம்பென நம் நினைவுகள் கூட புனைவுகள். விதையான செடிக்குள்ளும் காட்டாறாய் பெரும் பார்வை.. கரும்பாறையில் நீர் கசிவது போலதான், சரி செய்யத் தோன்றுதலே உன், எனது முதல் பார்வை.

பாதை தெரிந்த பாதிகளில் மீண்டும் பாதையாகி போவதுதான் உன் கோபம். யாதும் மறந்த யாதுமாகிய சாது தாண்டிய காடாகி திரிவது தான் என் தாபம். வந்து போன வழி தவறுதலாய் நம் காதல். சொல். ஏதேனும் சொல். அல்லது கேள்.. ஏதேனும் கேள். சூட்சுமக் காட்டுக்குள் பூமியானது தான் பரிணாமம். அண்டவெளிக்குள் ஒன்றுமில்லை பூமி.. பூமிக்குள் ஒன்றுமேயில்லை உயிர். அது தேடுவதும் இல்லை. சாடுவதும் இல்லை. இருக்கும் வரை அனுமதி இருக்கட்டும். இல்லாத வளைவுகளில் இருக்கும் போது பயணிப்பது எதற்கு.

உண்மைகளின் நெருக்கம் சுடுவது போல ஒரு உறைபனி நெடுங்கனவுக்குள் இருப்பதை கட. அல்லது கடக்க விடு.. இரண்டுக்கும் இடையில் தலை விரித்துக் கிடக்கும் கற்பனைகளில் பசி ஏது.

புரிதலின் உச்சமும் குழப்பமே. குழப்பத்தின் மிச்சமே புரிதலே. அறிதலின் அச்சம் தவிர்த்தல் நலமே. நலமான தவிர்த்தலில் முரண்படுதலும் உடன் படுதலே. முரண் பட துணிந்த பின் முகம் பார்த்து அழாதே.. அழ முடிவெடுத்த பின் உடன்படு. கடன் படுதல்தான் வாழ்வு.. யாருக்கு என்பது புதிர். புதிர்களின் சூட்சுமம் கருமம் கடவுளாகவே இருந்துவிட்டு போகட்டும். அகம் புறம் புகுவதும் வருவதும்.. தருவதும் பெறுவதும் ஆதாம் ஏவாள் அல்லது அன்னியப்பட்ட ஒரு கனி.

ஒரு இலையாய் கடந்து விடு...நதி தீராத நினைவுகளில் நானும் கூட வந்து சேரும் ஒரு வளைவு தான். உயிர்க் கலைதலில், நிஜம் கொட்டும் நேசத்தின் புரியாமை. புரிந்த பின் முக்தி, அது யாருக்கு வேண்டும் என்ற புரியாமலும் புது புன்னகை. மிஞ்சிய வாழ்வு சிறக்கும்... உரக்க கத்தி அழைப்பதை விட உறங்கிய பின் அழைப்பதுதான் கவிதை. நான் தொடர, நீ முடிக்க நீ தொடர நான் முடிக்க, முடிக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல் ஊசி இலைக் காடுகளில் வழி மறந்த ஊற்று நீராய் நம் காதலினும் பெருங் காதல்.... சாதல் பற்றிய சிந்தைக்கு இடம் இல்லாத நம் மலை உச்சி இன்னும் இன்னும் காத்துக் கொண்டுதான் இருக்கிறது நமக்காகவும்.

யாத்ரா

எழுதியவர் : யாத்ரா. (20-Apr-15, 4:30 pm)
பார்வை : 184

மேலே