பூமியில் இரண்டு வெண்ணிலாக்கள்
நடுவான
நட்சத்திரங்களெல்லாம்
நிலவொளியில்
பட்டாளம் கட்டிக் கொண்டு
பஞ்சுப்பொதி மேகங்களோடு
பரபரப்பாக
ஏதேதோ கிசுக்கிசுத்துக் கொண்டிருக்க
எதற்காக இந்த
நடுநிசி
அவசரக் கூட்டமென்று
மழையும்
திகைத்து நிற்க
காற்றும்
கதைக்கேட்கும்
ஆர்வத்தில்
போகும் பாதை மறந்து நிற்க
தொண்டை செறுமி
முறுக்கு மீசை சூரியனும்
தன் வருகையை
அவ்வப்போது
பதிவு செய்துக் கொண்டிருக்க
பஞ்சபூதங்கள்
நாண்கு மட்டும்
பரபரப்பாய்
கூடிக் கூடிப் பேசிக்கொள்வது
எதைப் பற்றியோ என்று
நிலம் சற்றே
நிமிர்ந்து பார்க்க....
அவ்வளவு தான்!
அத்தனை சப்தங்களும்
அடங்கிப்போயின
பூமி நிமிர்ந்ததில்
தெரிந்த
'உன் இரு விழிகள் '
பார்த்து
இரண்டு குளிர் நிலவுகளோ
அவை
என்றெண்ணி..
ஓகோ!!
இதற்குத் தானா
இப்பெருங் கூட்டம்
பூமி அலட்டலாய்
உன் பக்கம் திரும்பிக் கொள்ள
மீண்டும் ஆரம்பமானது
'பூமியில் இரண்டு வெண்ணிலாக்கள் '
பற்றிய சந்தேகம்...