மழையென்பது யாதென

இந்த வரிகளில்
பெய்து கொண்டிருக்கும்
அதே மழை

வரவேற்க வாய்க்காத
வீடற்றவர்களின்
முகவரிகளையும்,

பசியாற்றும்
அடுப்புகளின்
நெருப்பையும்
கொஞ்சமும் தயவின்றி
அழித்துச் செல்கிறது..

கடைத்தெரு
வண்டிக்காரர்கள்
தீர்க்க வேண்டிய
கடன் வாக்குறுதிகளில்
இரக்கமின்றிப்
பொத்தல் இட்டு
உள்ளே நுழைகிறது.

இரை தேடித் தவிக்கும்
பறவைகளின்
சிறகுகளை நனையவும்
பசியால் காயவும் வைத்து
கூடுகளின் வாயிலில்
விருந்தாளி போல
எட்டிப் பார்க்கிறது.

நோயாளிகளின்
விடாத இருமலாகவும்
அரைகுறை மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாகவும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை,

இதெல்லாம் போக
எப்போதாவது
காகிதக் கப்பல்களைச்
சுமந்தாலும் தவறாமல்
எல்லா நேரமும் இப்படியான
கவிதைகளைச் சுமக்கிறது.

எழுதியவர் : கார்த்திக் (21-Apr-15, 2:58 pm)
Tanglish : mazhai
பார்வை : 580

மேலே