கொன்று விடுங்கள் இல்லையேல் -கார்த்திகா
யாருக்கும் பிரச்சனை
வாராது....
அடுத்த அடி
சறுக்கவில்லை...
இனி வழியில்லை!
மீள்வதற்கான மறுதலிப்பில்
விலகாமல் விட்டுச் செல்கிறேன் ..
அம்மா !!நினைத்தவுடன்
கண்ணீர்த் திரைக்குள்
அழுத்துகிறாள்...
வாழ்வு முடியும்
வரை அப்பா
தேடிக் கொண்டிருப்பார்!
என் சின்னத் தம்பிக்கு
தலை வாரிவிட
என்ன செய்வேன் ?
படித்து பட்டம்
பெறாமலே பறந்து
செல்கிறேன்............
நில் கவனி
அத்தனையும்
அறிந்து செல் -
என் போன்ற அவள்களுக்கு ..
பதியனிட்ட
என் ரோஜா பூக்கும் முன்
புதைந்திருப்பேன்..........
அன்றாடம் கரைந்து
உண்ணும் காகங்களிடம்
சொல்லி வைக்கிறேன்...
என்னைப் பெற்றவர்களையும்
அழைத்துக் கொள்ளுங்கள் ...
புண்ணியங்கள் சேரலாம்
உங்கள் கணக்கில்...
என் மரணத்தைத்
தேடி யாரும் வர வேண்டாம் ..
கதறி அழுதால்
முடிவு மாறிப்போகலாம்..
கண்ணீர்த் துளிகள்
பரிசு என்று
எவரேனும் அனுப்பினால்
என் இறப்பு பொய்த்திடாது.............
பருவம் எய்திய
பதினென் நாளில்
நாலிருவர் சித்ரவதையில்
நிரம்பிய கருப்பையை
நானே அறிந்திடவில்லைதான்!!
முடிந்ததும் கொன்றிருக்கலாம்.............