மழையென்பது யாதென - கே-எஸ்-கலை
முழு உலகமும்
ஓரணியாய் திரண்டு
மூன்றாம் உலகப் போரைத்
தொடங்கியிருந்த
அன்றைய நாளில்...
====
நெல் தின்று
பழகியவனெல்லாம்
கல் தின்னப் பழகியிருந்தான்!
====
கோதுமை தின்று
கொழுத்தவனெல்லாம்
கோது தின்னப் பழகியிருந்தான் !
====
பல ஆயிரம்
அடிகளைத் தாண்டி
ஆழ்துளைக் கிணறுகள்
தோண்டியும்
தோல்வி வென்றிருந்தது !
====
புழுதிப் பேரலையின்
தாண்டவத்தில் தாக்குண்டு
சக்கரம் பூட்டிய கப்பல்களில்
புலம்பெயர்ந்துக் கொண்டிருந்தார்கள்
ஓரிரு கண்டத்தவர்கள்...
====
செம்மரம்
வெண்மரம் ஏதுமற்ற
அந்த சாலையோரத்தில்
அனாதையாய் நிற்கும்
ஒற்றைச் சவுக்கு மரத்திற்கு
ஏழடுக்கு பாதுகாப்பும்...
“தொட்டாலே சுடு” என்ற
கட்டளையையும்
பிறப்பித்திருந்தது
அன்றைய அரசாங்கம் !
====
மலட்டு
மரப் பூங்காக்களில்
நெகிழிப் பழங்களைக்
கடித்து
நெஞ்சு வலியோடு
திரும்பிக் கொண்டிருந்தது
அன்றைய
அணில் குஞ்சொன்று !
====
ஆசிரியர்
எவ்வளவு சொல்லிக்கொடுத்தும்
எப்படியிருக்குமென தெரியாமல்
அம்மாவிடம்
திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டிருக்கிறாள்
அன்றைய சிறுமியொருத்தி....
"மழையென்பது யாதென !"
==========
(தலைப்பு வழங்கி எழுதச் சொன்ன தோழர் thaagu அவர்களுக்கு நன்றி)