அகலா விலகல் -3

புல்நுனியில்
வானம் எழுதும் கவிதை
காலைப பனித்துளி
-புற்களைப்பிய்த்து எனக்கு
அர்ச்சனை செய்து நீ
அன்று சொன்னாய் இப்படி ....

உன் கண்களைப் பார்த்தவாறு
இப்படி நான் சொன்னேன்
"வான வீதியின்
சரிகைப் பொட்டுகள்
விண்மீன்கள் "....

கீழ் கிடந்த முள் ஒன்றெடுத்து
எனைக் குத்தி இப்படி சொன்னாய்
"பூவின் கவலை வழிசல்
செடியின் முட்கள் ......"

பூவிதழ்களை உன் மீது தூவிய
நான் சொன்னேன் இப்படி ,
"பச்சையின் உச்சியில்
பூக்கின்றன மொட்டுகள்
வேர்களின் சிரிப்பாய் ....."

நீ கடித்த கனியொன்றின்
ஒரு பகுதி எனக்கூட்டி
அன்று சொன்னாய் இப்படி ,
"மலர்களின் பிரசவம்
மரத்தில் கனிகள் ...."

"கனிகளின் இறப்பு
கைகளில் விதைகள் --என நான் அன்று முடித்தேன் "


அதேப பூங்காவில்
இன்றென்னை அடிக்கின்றனர்
பித்தன் நானென்று -


திரும்பி வந்து நீ கேட்டால் அளிப்பதற்கு
பூங்காவின்
பூக்களையும் கனிகளையும்
விதைகளையும் செடிகளையும்
பிய்த்து உன் நினைவுகளோடு,
--என் பிறந்த நாளுக்கு
நீயளித்த சட்டைக்குள் திணித்துக்கொண்டு ,
பகலில் வானத்தையும்
இரவில் விண்மீன்களையும்
வெறித்துப் பார்த்துக் கிடக்கும்
என்னை
பித்தன் என்று அடித்து விரட்டுகின்றனர் .


அறியமாட்டார்கள் அவர்கள்
ஒரு மழைபொழிவின்
அகலமெனும் தூரத்தில் நீ
விலகிய நொடிகளில் இருந்து ..
நாம் மீண்டும் சேர்வோமென அறியாமலேயே ..!!.!!

எழுதியவர் : அகன் (23-Apr-15, 10:29 am)
பார்வை : 81

மேலே