சயனத்தின் நேரம் -தேடல் 2
நடுநிசியில் திடுக்கிட்டு
விழித்த நொடியில்
ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி நின்றதும்
நிசப்தத்தில் சிலநொடி
நின்றது மனமும் ...
வெளிச்சத்தைத் தூண்ட
அருகினில் வைத்த
அலைபேசியைத் தேடி
அனிச்சை செயலாய்
துலாவுகிறது கை ...
இரவு சரியாக மூடப்படாத
குழாயிலிருந்து
சொட்டிக்கொண்டிருக்கும்
நீரின் சப்தம்
மனதுள் சலனத்தை எழுப்ப...
சரியாக தாழிடப்படாத
சன்னல்களின் திரைகள்
காற்றில் அசைகையில்
ஏதோவொரு புது கலக்கம்
என்னுள் திடும்மென எழ ...
கொசுவலைக்கு மேல்
யதேச்சையாய் விழுந்த
பல்லியின் நகர்தல்
பயத்தை மேலும் கூட்ட ...
மெல்லிய விசில் சப்தம்
அருகினில் வர வர
கடமை தவறா சகமனித
கூர்க்காவின் தைரியம்
மெல்ல என்னுள்ளும்
புகுந்து கொள்ள ...
புது தெம்புடன்
எழுந்து கதவை திறக்க
குளிர்காற்று முகம் தழுவி
உயிர்வரை உள் நுழைய
வெப்பத்தில் வெந்தவுடல்
சில்லாகிறது சிலிர்ப்பினில் ...
அதுவரை என்னுள்
உறங்கிகொண்டிருந்த
சுரனையற்ற ஒரு கவிஞன்
சுறுசுறுப்பாகிறானொரு
கவிக்கான கருவை
கவ்விக்கொண்டு ...!
----------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்