காலமெல்லாம் காத்திருப்பான்

உறவினர்களையும் நண்பர்களையும் வழியனுப்புவதற்காக வந்திருக்கும் கூட்டங்கள் ஏராளம். தொலைவிலிருந்து வரும் தன் உறவுகளையும் நட்புகளையும் அழைத்துச் செல்ல வந்திருக்கும் கூட்டங்களும் அனேகம். பயணம் நல்லபடியாக அமையும் என சந்தோஷத்துடன் கூடி நின்று பேசிக்கெண்டிருக்கும் கூட்டங்;களும் தாராளம். எதிர்பாராமல் சந்தித்தவர்களோடு அலவலாவிக்கொண்டிருக்கும் கூட்டங்களுக்கு கும்மாளம். வயிற்றுப்பிழைப்பிற்காக உடல் சக்தியை சத்தமாக வெளிவிட்டுக்கொண்டிருக்கும் வியாபாரிகள் பலர். அவர்களிடம் பொருள் வாங்கி அவர்களை மகிழ்விப்பவர்கள் சிலர். இவ்வாறு இரயில் நிலையம் திருவிழாக்கூட்டம்போல் காட்சியளித்துக்கொண்டிருந்தது. ஆனந்தங்கள் மட்டுமே ஆரவாரஞ்செய்துகொண்டிருக்கும் அந்நிலையத்தில் பயணிகள் அமரும் சீமெந்து ஆசனத்தில் ஒரு மூலையில் வாடிய முகத்தோடு அமர்ந்திருந்தான் இந்திரன்.
அவனது வலது விழி மட்டும் யாரையோ எதிர்பார்த்த வண்ணம் இருந்தது. மறு விழியோ பார்வையிழந்து மூடியே கிடந்தது. திருடர்கள் கவனம் என எழுதப்பட்டிருந்த போர்டுகளை இவன் கவனிக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது. காரணம் இவனிடம் பயணப்பையோ பணப்பையோ ஏதும் இல்லை. ஒரு வெற்றிக்கேடயம் மட்டும் கையில் இறுக்கமாக பிடிபட்டுக்கொண்டிருக்கிறது. அவனிடம் ஒருவரை தொலைத்த ஏக்கம் முகத்திலும், அவரை கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற நோக்கம் அகத்திலும் குடிகொண்டிருந்தது. நீண்டு வளர்ந்த தாடி, மெலிந்த உடல், கிழிந்த உடை, வயதான தோற்றம், மூடப்பட்டு ஒரு கண், இமைக்காமல் மறு கண் என அவனைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தாலும் அவன் அசைவுகள் அமைதியாகவே இருந்தன. பல தூண்களில் கறியால் வரையப்பட்ட பெண் ஓவியங்கள் பல அழகாக காட்சியளித்தன. அப்பெண்கள் அனைவரினதும் வலது கண்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. அவ்வழகிகளின் உருவங்களைப் படைத்தவனை பலருக்கு தெரியாது. அவன் கைகளை கண்டவர்களுக்குத்தான் அது புரியும். அவன் கைகளும் அவனது இடது கண்ணைப்போல் கறுப்பாக இருக்கும். இரயிலுக்காக காத்திருக்கும் பலருக்கு மத்தியில் ஒரு குயிலுக்காக காத்திருப்பவன்தான் இந்த இந்திரன்.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல் தூரத்திலே வரும் ஒரு இரயில் கூவும் சத்தம் அனைவரினதும் தலைகளை தன்னை நோக்கி திரும்ப வைத்தது. துள்ளி எழுந்தவன் ஓடி வருவதற்குள் மேடையை நாடி வந்த இரயில் மெல்ல நின்றது. முதலாம் பெட்டியிலிருந்து “செவ்வந்தி….. செவ்வந்தி……” என ஒவ்வொரு பெட்டியாக தேடிக்கொண்டு வந்தவனால் இறுதிப்பெட்டியை அடைந்தும் தேடியவளை காணமுடியவில்லை. முகத்தில் மலர்ச்சியில்லை. உயிரில் இன்ப உணர்ச்சியில்லை. அவன் கைகளில் பிடிபட்ட வெற்றிக்கேடயம்போல் இருந்தது அவன் மனது இறுக்கமாக! தள்ளாடியபடியே ஒரு தூணருகே சென்று அமர்ந்தான். அருகில் கிடந்த செங்கல் துண்டொன்றை எடுத்து பெண் ஓவியம் வரைந்தான். பாவம் அவளுக்கும் வலது கண் பார்வையற்ற வறுமைக் கண்ணாகவே இருந்தது.
அடுத்த இரயிலுக்கு இன்னும் மூன்றரை மணித்தியாலங்கள் இருக்கின்றன. காத்திருந்த கண்ணுக்கு சற்று ஓய்வு கொடுப்பதற்காக இமை மூடினான். துக்கம் நிறைந்த கண்ணில் தற்போது தூக்கம் ஆழ்ந்திருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு பாடசாலையில் ஓவிய ஆசிரியராக கடமையாற்றியவன் இந்த இந்திரன். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்தவன் ஓர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தான். அவனோடு இணைந்து ஓவியக்கலையும் அவனுள்ளேயே வளர்ந்து வந்தது. தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிகளில் வைத்து விற்றுப்பெற்ற பணத்தில் தனது கல்விக்கு தேவையானவற்றை வாங்கி வந்தான். பல ஓவியங்களுக்கு பரிசில்களும் கிடைத்தன. எங்கு கலையை பயின்றானோ அங்கேயே ஆசிரியனாகவும் உயர்ந்தான். அவனது இலட்சியம் எல்லாம் சர்வதேச ஓவியப்போட்டியில் பங்குபற்றி கேடயம் வெல்வதாகவே இருந்தது. அதை நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு இனித்தது.
ஒரு நாள் இந்திரன் ஓவியங்கள் காவியங்கள் பாடும் அவனது கலைக்கூடத்தில் புது ஓவியத்திற்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அத்தனை படைப்புகளும் நெருப்புக்கு படையலானது. வர்ணங்கள் வாழ்ந்த சுவர்களெல்லாம் கருப்புக் கண்ணீர் வடித்தன. தீ அவனுக்கு தீயவன் ஆனான். விழிகள் பார்த்து பார்த்து வரைந்ததெல்லாம் அக்கினியால் அழிக்கப்பட்டன மட்டுமல்லாமல், இந்திரனின் விழிகளையும் சுட்டெரித்தது. அவனது முகத்தில் பாய்ந்த தீ, அவன் பார்வையையும் கொள்ளையடித்து விட்டது. அவனது கற்பனைகள், கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் அனைத்தையும் வெள்ளையடித்து மறைத்தது. சில நாட்கள் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தான். அப்போது தான் செவ்வந்தியின் குரல் இவனுக்கு முதன் முதலாய் அறிமுகமானது. “வணக்கம்! நாங்கள் அன்னை தெரெசா நற்பணி மன்றத்தில் இருந்து வருகின்றோம்!. உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? உங்கள் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்றாள். “முதலில் உங்களுக்கும் உங்கள் மூலம் நல்வழி காட்டும் அன்னை தெரெசாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பெயர் என்ன?” என இந்திரன் விசாரித்தான்.
“செவ்வந்தி”
பதில் வந்ததும் “நல்ல பெயர். எனக்கென்று இங்கு யாருமில்லை. எனக்கு தேவை என்று இனி ஒன்றும் இல்லை. என் இலட்சியமும் என் கண்களைப்போல் இருளாகிவிட்டது. ஒருவேளை நான் இறந்தால் என் உடல் உறுப்புகளை உபயோகப்படும்படி யாருக்காவது கொடுப்பதற்கு வைத்தியரிடம் கூறியிருக்கின்றேன். அப்படி யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால், தயவுடன் தெரியப்படுத்துங்கள்!” என்றான். உயரச்சென்ற பட்டம் ஏதாவதொன்றில் சிக்குபட்டதும் அதனால் உயர முடியாமலும் கீழே விழ முடியாமலும் தவிக்குமே ஒரு தவிப்பு, அதே போல் தவிக்கும் இந்திரனின் உள்ளத்தை இலகுவாக செவ்வந்தியில் உணர முடிந்தது. சிறிது நேரம் இந்திரனையே இமை மூடாது பார்த்துக்கொண்டிருந்தவள் வைத்தியரிடம் அவனைப்பற்றி விசாரித்துக்கொண்டாள். தினமும் அவனை வந்து பார்த்து நட்பை பகிர்ந்துகொண்டாள்.
“செவ்வந்தி உன்னைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே…………” இந்திரன் கேட்க “சொல்லும்படியாக ஒன்றுமில்லை. உங்களைப்போல நானும் சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்துவிட்டேன். சொத்துக்கள் இருக்கும் வரை சொந்தங்கள் இருந்தன. எல்லாம் முடிந்ததும் உறவுகளும் உறங்கின. இந்த அன்னை தெரெசா நற்பணி மன்றத்திலேயே இணைந்து அங்கேயே படித்து இப்போது அங்கேயே வாழ்கின்றேன்!” இந்திரனின் கண்களில் அக்கினி தேவன் குடிகொண்ட தினத்திற்கு பிறகு இப்போதுதான் வருண தேவன் அவன் கண்களில் மழை பொழிந்தான். அவனை உற்சாகப்படுத்தவதற்காக “இந்திரன் இன்னும் நான்கு மாதங்களில் சர்வதேச ஓவியப்போட்டி தொடங்கப்போகிறது. உனக்கு தெரியுமா?” என திசையை மாற்றியதும் இந்திரனின் முகத்தில் ஓர் எழுச்சி தோன்றி திடீரென மறைந்தது. “ஆம் செவ்வந்தி! கேள்விப்பட்டேன். ஆனால் என்னால் என்னால்……………..” மீண்டும் விழிகளில் மழை. “கவலைப்படாதே இந்திரன். சீக்கிரம் உனக்கு விடியல் வரும். மீண்டும் உன் கண்களில் ஒளி பிறக்கும்!” என்று தன் கண்களை துடைத்துக்கொண்டே எழுந்து சென்றுவிட்டாள்.
சில நாட்களின் பின் “இந்திரன் உங்களுக்கு சீக்கிரம் பார்வை கிடைக்கப்போகிறது. அன்னை தெரேசா நற்பணி மன்றத்திலிருக்கும் ஒருவர் உங்களுக்கு தனது வலது கண்ணை தருவதற்கு சம்மதித்துள்ளார். இனி கவலைப்படாமல் இருங்கள்.” என வைத்தியர் கூறிவிட்டு போனார். இது நிச்சயமாக செவ்வந்தியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என புரிந்துகொண்டான் இந்திரன். “நாளை அவள் வந்ததும் அவளுக்கும் கண் தரப்போகும் அவருக்கும் என் ஆனந்தக் கண்ணீரினால் நன்றிகள் தெரிவிக்கவேண்டும்” என எண்ணினான். ஆனால் அன்றிலிருந்து செவ்வந்தியின் குரலை அவனால் கேட்கவே முடியவில்லை. வைத்தியரிடம் கேட்டபோது “உங்களுக்கு பார்வை வந்த பிறகு நிச்சயம் உங்களை சந்திப்பாள்”. என கூறிவந்தார். ஆபரேஷன் நல்ல படியாக முடிந்தது. வலது கண் பார்வை பெற்றது. இடது கண் மூடியே கிடந்தது. அது இருளும் ஒளியும் நிறைந்ததே வாழ்க்கை என்பதை உணர்த்தியது.
ஓரிரு நாட்களின் பின் “எங்கே டாக்டர் செவ்வந்தி?” இந்திரன் கேட்டான். பதில் சொல்லாம் ஒரு காகிதத்தை நீட்டினார் வைத்தியர்.
அன்பின் இந்திரன்!
உனக்கு நிச்சயமாக பார்வை கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. எங்கள் நற்பணி மன்றத்தால் என்னை இடம் மாற்றம் செய்துள்ளார்கள். எங்கே போவேன் என்று எனக்கே தெரியாது. இதை சொன்னால் நீ மனம் உடைந்து போவாய் என்றுதான் உன்னிடம் நான் சொல்லவில்லை. உனது ஆபரேஷனுக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டேன். சர்வதேச போட்டியில் நிச்சயம் நீ பங்குபற்றலாம். உன் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும். நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன். நீ காண்பதையே நானும் காண்பேன். நீ ஆனந்தக்கண்ணீர் வடித்தால் அது நான் வடிப்பதுபோல்தான். நீ அழுதால் நான் அழுவதுபோல்தான். என்ன புரியவில்லையா? இப்பொது இக்கடிதத்தை வாசிப்பது என் கண்தான்.!
நான் என் இரண்டு கண்களையும் உனக்கு தந்திருப்பேன். நீ வெற்றி பெற்ற பின் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் உன்னை நான் பார்க்கவேண்டுமே அதற்காக ஒரு கண்ணை நானே வைத்துக்கொண்டேன். என்னை இக்கோலத்தில் கண்டால் நீ வேதனைப்படுவாய் என்று தான் நான் உடனேயே அவ்வூரிலிருந்து வெளியேறிவிட்டேன். எதற்கும் கலங்காதே. இலட்சியப் பாதையில் செல். அலட்சியமாய் விட்டுவிடாதே. உன் வெற்றிக் கேடயத்தை பார்ப்பதற்கு நிச்சயம் நான் வருவேன்.
இப்படிக்கு
உன் தோழி
செவ்வந்தி
“ஐயோ……… செவ்வந்தி………….., ஏன் இப்படி செய்தாய்? என் சந்தோஷத்திற்காக உன் வாழ்க்கையையே அழித்துவிட்டாயே…………..! கத்தினான், கதறினான். “இந்திரன் கவலைப்படாதீங்க. நீங்க மனம் உடைந்தால் உங்களால் போட்டியில் பங்குபற்ற முடியாது. உங்கள் இலட்சியம், செவ்வந்தியின் எதிர்பார்ப்பு அத்தனையும் வீணாகிவிடும். முதலில் போட்டியில் பங்குபற்ற ஒழங்குகளை மெற்கொள்ளுங்கள்.” என ஆறுதல் கூறி உற்சாகம் வழங்கி அனுப்பி வைத்தார் வைத்தியர்.
நாட்கள் சென்றன. போட்டியும் நடந்து முடிந்து தீர்ப்புகளும் வந்தன. இந்திரனின் ஆசை போலவே இறுதித் தீர்;ப்பின் ஓசையும் ஒலித்தது. வெற்றிக்கேடயம் இந்திரனின் கைகளில் தவழ்ந்தது. இவன் கண்ணோ செவ்வந்தியை காணவே துடித்தது. தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் இவனிடம் பேட்டி கண்டன. ஒவ்வொரு பேட்டியிலும் தன்னைப் பற்றி கூறியதை விட செவ்வந்தியின் தியாகத்தை கூறியதே அதிகம். அவளுக்காக இரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும் கூறினான். ஓரிரு மாதங்கள் இவனைத்தேடி ஊடகங்கள் வந்தன. பின்னர் எந்த மனம் என்ற ஊடகம் மட்டுந்தான் இவனோடு தொடர்பில் இருந்தது.
கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழிந்தன. இவன் ஓவியம் வடிப்பதையே மறந்தான். அதன் பின் வலது கண் மறைக்கப்பட்ட பெண்ணின் உருவந்தான் அவன் கைகள் தீட்டும் ஓவியம். செவ்வந்தி என்பதுதான் இவன் கூறும் காவியம். மீண்டும் இரயில் வரும் சத்தம் கேட்டு கண் விழிக்கிறான் இந்திரன். இனியாவது மாற்றம் வருமா என நினைத்தவனுக்கு இதிலும் ஏமாற்றமே கிடைத்தது. வந்திறங்கிய எல்லா பெண்களுக்கும் இரு கண்களும் இருந்தன. இறைவனுக்குத்தான் கண்கள் இல்லைபோலும். என்றாவது ஒரு நாள் கடவுள் கண் திறப்பார். அப்போது செவ்வந்தி வந்திருப்பாள். என ஏக்கத்துடன் கையில் செங்கல் துண்டோடு இன்னொரு தூணருகே சென்றான். அவன் வரையப்போகும் ஓவியம் மாறப்போவதுமில்லை. அவளைக் காணும்வரை இவன் மனம் ஆறப்போவதுமில்லை. அவள் வருகைக்காக இவன் காலமெல்லாம் காத்திருப்பான்!
கற்பனைகள் யாவும் எனக்கு சொந்தமானவை
சித்திரவேல் அழகேஸ்வரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
