மீத்தேன் எமன்

தமிழ் நாடு வறட்சி மாநிலமாக ஆகிவிட்டதும், பெரும்வாரியான விவசாய நிலங்கள் வறண்டுபோனதும், குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுவதும் நீங்கள் அறிந்ததே. அதோடில்லாமல் தண்ணீருக்காக வருடா வருடம் கேரளத்திடமும் கர்நாடகத்திடுமும் நாம் கையேந்தி கிடப்பதும், போராட்டங்கள் செய்வதும், நீதிமன்ற படிகளை ஏறிக்கொண்டு இருப்பதும் இன்றும் நடந்துண்டே இருக்கிறது.

இமயமலையில் இருந்து உருவாகிற சிந்து நீரும் கங்கை நீரும் கிழே உள்ள தமிழகத்திற்கு ஒரு சொட்டுக்கூட வரவில்லை, அதை வடமாநிலத்துக்காரர்களே முழுவதுமாக அனுபவிக்கிறார்கள், மீதி நீர் வீணாக கடலில் கலந்துகொண்டு இருக்கிறது, வற்றாத உயிர் நதிகளெல்லாம் வட இந்தியாவோடு முடிந்துவிடுவதால், தென் மாநிலங்களுக்கு நீர் பற்றாக்குறை என்பது தொடர்ந்து நீடித்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் கடைசி எல்லையான தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

நதிகளை இணைத்து இமய நீர் கன்னியாக்குமரிவரை வருவதற்கு வழிவகுத்து நாட்டை செழுமையாக்க வேண்டிய ஒரு நல்ல கடமையை மறந்துவிட்டு நமது அரசு தமிழகத்தை இன்னும் இன்னும் அழித்துவிடும் செயலை செய்துகொண்டு இருக்கிறது.

விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்துகொண்டு இருக்கின்ற வேளையில், பல போராட்டங்களையும் நம் விவசாயிகள் முன்னெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனாலும் அரசு எதற்கும் செவி சாய்க்க மறுத்துவருகிறது.

நீர் ஆதாரமின்றி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இன்றைய சூழலில், நீர் ஆதாரங்களை உயர்த்துவதற்கு அரசு ஏதாவது செய்யுமா என்றுதான் மக்கள் அன்றாடம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அரசோ மேலும் தமிழகத்தை அழிக்கும் செயல் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது, இதற்கு தமிழகத்திலும் பல கருப்பு ஆடுகள் துணையாக நிற்கிறார்கள் என்பதுதான் வேதனையான விடயம் ஆகும்.

உண்மையான வாழ்க்கை என்பதும், உண்மையான வளர்ச்சி என்பதும் இயற்கையோடு ஒன்றி அதற்கு ஏற்றாற்போல் வாழ்வதாகும், அப்படி வாழத்தான் தமிழ் மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் அரசானது இயற்க்கைக்கு எதிரான காரியங்களை செய்து அழிவினை விலைகொடுத்த்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இயற்க்கைக்கு எதிராக செய்யப்படும் எந்த ஒரு செயல்பாடும் அழிவைத்தான் விளைவிக்கும் என்பதுதான் இதுவரை நாம் அனுபவிக்கும் உண்மையாகும். இயற்க்கை வளத்தை உயர்த்துவதன் மூலம்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் செழிப்பானதாக மாற்ற முடியும்.

இந்தியாவின் கடைசிக்கோடியில் இருக்கின்ற தமிழகம் வறட்சி மாநிலமாக இருக்கின்றது, முப்போகம் விளைந்த மண் இன்று ஒருபோகமே விளையாமல் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிவில் தள்ளி இருக்கின்றது.

இந்த நிலையில் தமிழகத்தை இயற்கையோடு ஒன்றிய ஒரு செழிப்பினை செய்ய வழிவகுக்க முற்படாமல், இங்கே அணு உலைகளை நிறுவுவதையும், ஆயுத தொழிற்ச்சாலைகளை நடத்துவதையும், மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்துவதையும் செய்து, தமிழகத்தின் இருப்பை இல்லாமல் செய்யும் செயலை அரசு செய்துகொண்டு இருக்கிறது.

இயற்கைக்கு எதிரான வாழ்வை தமிழ் மக்கள் விரும்பாத போதும் அவர்களை இயற்க்கைக்கு எதிரான சூழலில் வாழ தள்ளிக்கொண்டு இருக்கிறது நமது அரசு. இது மிகவும் கொடுமையான விடயமாகும். இந்த நிலை நீடித்தால் நமது பிற்கால சந்ததி முகவரி இன்றி அழிந்துபோகும் என்பதுதான் உண்மையாகும். இதை தமிழர்கள் தெளிவாக புரிந்துகொண்டு இயற்க்கைக்கு எதிரான எந்த செயலையும் எதிர்த்தே ஆகவேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளை நாசப்படுத்த அரசு துணிந்துவிட்டது. 6000 அடி ஆழம் துளைகளை இட்டு, அந்த துளைக்குள் பலவகையான நச்சு பொருட்களையும் கெமிக்கலையும் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு GEEC என்ற நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றது அரசு. இதற்காக 690 க்கு மேலான சதுர கிலோ மீட்டர்களை அரசு அந்த நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் 20 லட்சம் ஏக்கருக்கும் மேலான விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு தமிழகம் பாலைவனமாகிவிடும் அபாயச் சூழல் இருப்பதாக மேலும் சில ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அபாயக்கரமான திட்டத்தினால் நிலத்தடி நீர் வற்றிவிடுவதோடு, அது நச்சு நீராகிவிடவும் வாய்ப்பு இருக்கிறது, கடல்நீர் உயர்ந்து எங்கும் உப்புநீர் கலந்துவிடும் அபாயம் இருக்கிறது, அதோடில்லாமல் பூகம்பங்கள் ஏற்படுவதற்கு இந்த ஆழ்துளைகள் வழிவகுக்கின்றன, இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மக்கள் விருப்பமின்றியே அரசு மேற்கொள்ள இருப்பது வேதனைக்குரியதாகும், நாட்டைக் காப்பாற்ற வேண்டிய அரசு பிற்கால சந்ததியின் வாழ்வைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இப்படிப்பட்ட காரியத்தை செய்துகொண்டு இருக்கின்றது.

ஏன் இந்த அணு உலைகளையும், ஆயுதத் தொழிற்ச்சாலைகளையும், மீத்தேன் திட்டத்தையும் வட மாநிலங்களில் செயல்படுத்தாமல் தமிழகத்தை குறிவைத்து செயல்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இயற்க்கைக்கு எதிரான எந்த ஒரு செயலுக்கு பின்னாலும் அழிவு மட்டும்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தும்கூட ஏன் இப்படிப்பட்ட திட்டங்களை யோசிக்காமல் கையிலெடுக்கிறது அரசு என்ற வினாவும் எழுகின்றது. விவசாயத்தை நம்பி இருக்கின்ற மாநிலம் தமிழகம், ஏற்கனவே இங்கே தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது இப்படி இருக்கையில் ஏன் தமிழகத்தின் தலைமீது இந்த திட்டங்களை சுமத்த வேண்டும், கேரளா, கர்நாடகா, ஆந்திர போன்ற மாநிலங்களில் இந்த திட்டங்களை செய்ல்படுத்தக்கூடாதா, இப்படி பல கேள்விகள் மனதில் கிடந்தது கிளறிக்கொண்டு இருக்கிறது.

இவற்றை எல்லாம் பார்க்கும்பொழுது தமிழகத்தைப் பற்றி அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்பதை நீங்களும் புரிந்துகொண்டுதான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இயற்க்கைக்கு எதிரான திட்டங்களை கைவிட்டு இயற்கையோடு ஒன்றிப்போகிற மாற்றுத்திட்டங்களைப் பற்றி இந்த அரசு சிந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

மேலே சைனாவும் பாகிஸ்தானும் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயங்களும் இருக்கின்றன, ஆகையினால்தான் ஆயுதத் தொழிற்ச்சாலைகளையும் அணு உலைகளையும், மீத்தேன் திட்டங்களையும் இந்தியாவின் கடைசி கோடியான தமிழகத்தில் நிறுவப்படுவதாகவும், இந்த தளவாடங்களை இங்கே நிறுவினால்தான் நாட்டிற்கு பாதுகாப்பு என்றும் சில தகவல்களை நானும் அறிந்தேன். இந்த ரீதியில் பார்த்தால் அரசின் முடிவு சரியானதாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கும் பிற்கால தமிழகத்திற்கும் ஆபத்து இல்லாத திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இயற்க்கைக்கு முரணான சூழலில் தமிழ் மக்களை அரசு சிக்க வைத்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை, அதற்குத்தான் இந்தக் கட்டுரை. இயற்கையை சிதைப்பது என்பது மக்களின் வாழ்க்கையை சிதைப்பதே ஆகும், இன்றைக்கு மக்களுக்குத் தேவையான முதல் விழிப்புணர்வே அவர்களுக்கான அடிப்படை வாழ்வாதாரங்கள் அழிந்துபோகாமல் பாதுகாப்பதே ஆகும். அரசும் மக்களின் வாழ்வாதரங்கள் அழியக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவது என்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது, அந்தவகையில் மக்களின் வாழ்வாதாரங்களை நாசமாக்கி அவர்களை நரகத்தில் தள்ளும் இந்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை அரசு கைவிடுவதுதான் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இன்றைய சூழ்நிலையில் மூன்று பக்கமும் ஆபத்து உருவாகிவிட்டது இந்தியாவிற்கு, ஒருபக்கம் சைனாவும், மறுபக்கம் பாகிஸ்தானும் இருப்பதோடு ஒருபக்கம் இலங்கையாலும் ஆபத்து மூண்டு இருக்கிறது. காஷ்மீர் வழியாக ஊடுருவிக்கொண்டு இருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இன்று இலங்கைச் சென்று அங்கிருந்து கடல்மார்க்கமாக தமிழகத்தில் ஊடுருவும் சூழல்கள் நிலவி வருகின்றன. சைனாவும் இந்தியப்பெருங்கடலை ஆக்கிரமித்து இலங்கைவரை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவருகிறது. இலங்கை அரசானது சைனாவிடமும் பாகிஸ்தானிடமும் நட்புறவு கொண்டு இந்தியாவிடம் நரித்தனமான உறவை வைத்துக்கொண்டு இருக்கிறது, இதனால் இந்தியாவிற்கு ஆபத்தான சூழல் தொடந்து நீடித்துக்கொண்டே இருக்கின்றது. பாகிஸ்தானும் சைனாவும் இலங்கையுடன் உறவுகொண்டே இந்தியாவை அச்சுறுத்தத் ஆரம்பித்துவிட்டது.

பூக்கோள ரீதியாகப் பார்த்தால் இலங்கையில் தமிழ் ஈழம் என்ற ஒன்று இருந்தால்தான் இந்தியாவிற்கு மிகவும் பாதுகாப்பு என்பதை இந்தியா இதுவரை யோசித்துக்கூட பார்க்கவில்லை. அன்று விடுதலைப்புலிகள் இருந்தபொழுது சைனா கடலில் இத்தனை ஆக்கிரமிப்பை செய்ய முடியவில்லை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் சக்தியற்றவர்களாக பயந்து இருந்தார்கள். இத்தனை ஏன், மீனவர்கள் தாக்கப்படுவதும், மீனவர்கள் படுகொலைகளும், மீனவர்கள் கைதுக்களும்கூட புலிகள் இருந்தபொழுது இல்லை, அப்பொழுது எல்லாம் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடித்துக்கொண்டு இருந்தார்கள், ஆகையினால் விடுதலைப்புலிகளால் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே மிகப்பெரிய பாதுகாப்பு இருந்தது என்பதுதான் உண்மை.

விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய சூழ்நிலையில் எதிரிகள் இந்தியப்பெருங்கடல் வழியாக நாட்டிற்குள் ஊடுருவும் ஆபாயம் உருவாகிவிட்டது, ஆகையினால் அணு ஆயுதத் திட்டங்கள், அணு உலை திட்டங்கள், மீத்தேன் எரிவாயுத் திட்டங்கள், இன்னும் பல முக்கியத் தளவாடங்கள் தமிழகத்தில் நிறுவுவதற்கு இன்றைய சூழல் உங்கந்ததாக இல்லை என்பது ஒருபுறம் உண்மையாகும்.

ஆகையினால் தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன சமாதானம் சொன்னாலும், மீத்தேன் எரிவாயுத் திட்டத்திற்கு பின்னால் அழிவுதான் நிறைந்து இருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும். அரசு இன்றை பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நாளைய தலைமுறைக்கு சமாதிகட்டும் செயல் ஏற்கும்படியாக இல்லை, ஆகையினால் மீத்தேன் எரிவாயு திட்டத்தில் தமிழம் சிக்கிவிடாமல் இருக்க இப்பொழுதே தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் நமது பிற்கால சங்கதி அடையாளமற்று இல்லாமலும் போகும்.



------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (27-Apr-15, 2:45 pm)
பார்வை : 227

சிறந்த கட்டுரைகள்

மேலே