யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 22 =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

'' கவலைப்படாதே ,முணுமுணுக்காதே
மனம் தளராதே ,இப்போதுதான்
வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன
சிறப்பு பணி இன்னும் ஆரம்பமாகவில்லை
சிறந்த பணி இன்னும் முடிக்கப்படவில்லை ''

அய்யா அப்துல்கலாமின் இவ்வரிகள் என்னை என்றும் என்னுள் செதுக்கும் நெருப்பு வாசகங்கள் சாதனை புரியத்துடித்துக்கொண்டு இருப்பவனின் இதய நெருப்பே மிக உக்கிரத்துடன் எரிந்துகொண்டிருக்கும் எப்போதும் விழிப்புநிலையில் , சரியான சந்தர்ப்பங்களும், நேரங்களும் கைகூடும் போது அவற்றின் வெளிப்பாடு ஆயிரம்கோடி சூரியசூட்டின் உஷ்ணத்துடன் வெளிப்படும் .

இன்று
''தீப்பொறி''தான்
நிச்சயம் ...
வெளிப்படுவேன்
ஓர்நாள் ..!
பெருஞ்ஜுவாலையாக ..

என என்னுள் எரிந்து கொண்டிருக்கிறேன் நான். பல கவிஞர்களும் , அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளும் இன்னும் வெளிச்சத்தை தரிசிக்க இயலாத இரவு மலர்களாய் இருளுள் புதைந்து கிடக்கின்றன , இக்கட்டுரையின் நோக்கமே அவ்வாறான ஆகச்சிறந்த கவிங்கர்களின் தேடலே என்றால் அது மிகையில்லை .

பேயாய் உழலும் சிறு மனமே !
...பேணாய் என்சொல் இன்றுமுதல்
நீயாய் ஒன்றும் நாடாதே
...நினது தலைவன் யானே காண்;
தாயாம் சக்தி தாளினிலும்
...தருமம் என் யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்று உழைத்திடுவாய்
...உரைத்தேன் அடங்கி உய்யுதலால்...

என்ற பாரதியின் சொற்களை நெஞ்சில் தாங்கி , சிறந்த சிந்தனைகளால் , கொஞ்சமும் தயக்கமின்றி நற்கவிகளை நாளும் எழுதிக்கொண்டும் , நமக்கான விடியல் நிச்சயம் ஒருநாள் வெளிப்படும் என்ற தீராத தாகத்தோடு , தேடலோடு கவிபுனையும் தோழி ஒருவரின் கவிகளுடன் பயணிப்போம் இக்கட்டுரையில்,

ஏனென்றால் நான்...... எனும் இக்கவியின் தன்னை பீனிக்ஸ் பறவைகளின் தேவதை என்கிறாள் அவள் , உண்மைதான் கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள்

நிலாமதியில்
விழி அருகில்
கானல் விம்பும்
இராப்பொழுதுகளில்.....,
காததூரம் பறந்து சென்று
களவாக எனை எரித்து
கனவுக் கால்வாய்களில்
கரைத்து விடுகிறேன்...!!!

விடிகின்ற வேளையில்
வடியும் கதிர்க்கீற்றுகளால்
அஸ்தித் துணிக்கைகளை
ஒவ்வொன்றாய் குத்தி எடுத்து
நானாக்கிக் கொள்கிறேன்
எனையே அறியாமல்
அமரமாகி விடுகிறேன்
ஏனென்றால் நான்
பீனிக்ஸ் பறவைகளின் தேவதை,!!

ஒரு இரவு எவ்வாறு விடியும் நமக்கு , இவளின் விழிப்பார்வைக்குள் விழுந்துவிட்டால் இரவின் விடியல் கூட ஒரு சொப்பனத்து நிகழ்வுகளாய் மனதை வருடிச்செல்கிறது உள்மனம்வரை. குயில்கள் கரையும் பொழுதுகளாய் கூவிசெல்லும் ஒரு கவியில் , இனிய ராகத்தின் இசையை அது எழுப்பும் ஓசைகளை உணர்கிறது மனம் மலரின் மெல்லிய பூக்கும் நேசத்துடன் ...

காற்றைக் கிழித்துச் செல்லும்
ஒற்றையடிப்பாதை
ஓநாய்கள் பாட்டிசைக்கும்
உச்சிச்சாம வேளை

சுடலைக் கோவிற் கருவறையின்
கருகிய கருங்காலிக் கதவுகளில்
பக்தனின் வரவுக்காய் காத்திருக்கும்
பிணம் தின்னிக் கழுகுகளின் யாசகம்

ஊமத்தங் குருவிரண்டு
உயிர் தாங்கி ஊடிக்கொள்ள
கடும் முகிலிடை அரைமதி
கல்லறைச் சினுங்கல்கள்

மண்ணில் தொடங்கிவிட்ட
நரிகளின் ராஜ்ஜியம்
விண்ணில் கருமேகத் தாண்டவம்
சாவி மறந்த பூட்டின் வழி
ஓட்டைக் குடில் கிழவியின்
கூகைக் காவியம்

செப்பமிட்ட மூளை மடிப்புக்களோரம்
சிக்கெனத் தைக்கும் கடிகார முட்கள்
செயலிழந்த நியூரோன்கள்
அசைய மறுத்த ஆயிரம் நொடிகளில்
அதுவோர் ஜென்ம விநாடி.

பனிப்போரில் உறைந்த அக்கினிக் கரங்கள்
பின்னிரவுகளின் பிரத்தியோக சொப்பனம்
முன்னாளின் முகம் தொலைந்த பதிவுகள்
முன்னிரவில் பிணைந்த கண்மடல்கள்
மடலிடை மருவிய கூர்வாள்
அறுத்தெறிந்த விழிநீர்த் தாரைகள்
அணை திறந்த நதியாய்
செவியூர்க் குளங்களில் செந்நீர்ப் பெருக்கு

செவிட்டுக் கரைகளுக்கு
தெவிட்டாது சேதி சொல்லும்
முரட்டு அலைகளாய்
விட்டு விட்டு விரட்டிக் கொல்லும்
முடமான வேண்டுதல்கள்
உச்சாணித் தென்னங்கீற்றின்
உயிர் தின்னும் முனகுதல்கள்

இளவேனில் அன்றிலொன்று
சிறகுடைத்து பறந்து செல்ல
பாதச்சுவடுகளன்றி படரும் சலங்கை ஒலி
கொட்டிச் சிதறிய வைரங்கள்
கண்ணீர்த் துளிகளின்
காதோர அணிவகுப்பு

கனவுக்கால்வாயில் தவறிவிழுந்த உறக்கம்
யாமம் முழுதும் தத்தளித்து
மூர்ச்சையற்றுப் போகும் முன்னிரவு
பின்னிரவுக் கொடிய இருள்
பின்னரைக் கோளத்துள் விழிபிதுங்க

உயிர்வாயு கமழும்
வாயுமண்டலம் தாண்டி
கதிரின் காமா'க்கற்றைகளுடன்
இரண்டறக் கலந்து....
நெடிதாய் பரவும்
நேர்மறை கொஸ்மற்றிக் அலைகள்

உயிர்ப்பின் அரவம்
உலகைக் கொட்ட
நனைத்த நிலவு
நடையைக் கட்ட
கதிரவனின் கதகதப்பில்
மெல்லெனத் துளிர்க்கிறது
குயில்கள் கரையும்
இதமான விடிகாலை

என்று முடிகிறது இக்கவி , நிலா என்ற பெயரில் கவி புனையும் இத்தோழியின் கவிகளை வாசிக்க வாசிக்க நெஞ்சுக்குள் ஒரு பரவச நிலை .நிசப்த கீதை...சொல்லும் ரகசிய பாசையில் கரைந்து , கலந்து போகிறேன் நான் . இன்னும் வாசித்துக்கொண்டு , இனி வாசிக்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும்

குருந்த மரத்தடியில்
சிலுவை சுமந்திருக்கும் என்
கிருஷ்ண பரமாத்மா முன்
மண்டியிட்டுக் காத்திருக்கிறேன்...

சில நொடிகளில்
நடைபெற இருக்கும்
நேர்த்தியில்லா
தரிசனத்திற்காய்...

மசூதி நீங்கி
மரநிழல் நாடி
என்னைத் தேடி வரும்
புத்தனின் வருகைக்காய்...

சிறு கணம் கழித்து ஆங்கே
சிறு போர் மூழலாம்
கணப்பொழுதில் நான்
கண்ணனாகலாம்,, காண்டீபன்
ஆகலாம்,.

என் புத்தன் எனக்காய்
பாவமன்னிப்பின்
ஸ்தோத்திரம் ஒன்றை
ஒப்பிக்கலாம்...

இருவருமாய் பரிநிர்வாணமாகலாம்
இல்லை அவன்
பைபிள் ஒன்றை
தந்துவிட்டு நீங்கலாம்...

இறுதியில் நான்
ஓர் அசரீரி கேட்டு
உலகம் துண்டித்து
துகள்களாய் போகலாம்....

சற்றுப் பொறு...
எங்கோ ஒரு நிசப்த கீதை
அருகிருக்கும் அரசமரத்தடியில்
பிரணவ உபதேசம்..!!

கிராமத்து வழக்கு மொழியில் ஒரு உப்புக்காத்து....... சொல்லும் வாழ்வியலின் சூட்சுமங்கள் வரிகளாய் வாசிப்பவரின் இதயத்தை வருடுகிறது மலைச்சாரலின் மென்மையுடன் ...

அதிகாலையில முழிச்செழும்பி
அண்டையில கடன் வாங்கி
உப்பு காத்த குடிச்சுப்புட்டு
ஒழைப்புக்கு போவமுங்க...

சொந்த வலி மறைச்சுப்புட்டு
சோத்துக்கு வழி தேடி
ஆழிக்குள்ள மீனள்ளும்
சோலிதான் வாழ்க்கையுங்க

உக்கிப்போன கட்டுமரம்
உயிர் குடுக்கும் உயிரெடுக்கும்
உச்சி வெய்யில் சுட்டெரிக்கும்
உதிரத்திலும் உப்பிருக்கும்

நாலு மீன வித்துப்புட்டு
ரண்டு மீன காயவிட்டு
நல்ல மீனா செல்லாச்சிக்கு
செஞ்சு வைக்க சொல்லிப்புட்டு

கந்து வெட்டி கடன் வெட்ட
கடைத்தெரு போயிபுட்டு
தென்னைமரக் கள்ளு மெண்டு
தினமொன்றாய் போகுமுங்க

ஐலசா பாடிக்கிட்டு
அயர மீன தேடிக்கிட்டு
என் கனவோட கை வலிக்க
எல்லை எங்க தெரிஞ்சுதுங்க

அறிவு வந்த நாள்முதலா
ஆத்தா எங்க கடல்நாச்சி
கோடு போட்டு வாழும்வகை
கோட்டு போட்ட சாபமுங்க..

ஊரில்லை ஒறவில்லை
உருமைக்கு நாதியில்லை
ஒறவெண்டு சொல்லிக்க
ஒடைஞ்ச கலங்கரை
ஒண்டேனும் இருக்குதுங்க

பெருங்காத்தடிக்கும் அலையும் வரும்
பெயரும் தெரியாம சில பொடியும் வரும்
சாவுக்கும் வாழ்க்கை தந்த
சந்ததியே நாங்கதாங்க

சொல்லச் சொல்ல குறையாது - ஆரும்
சொல்லாத வரலாறு...
இருக்கும்வரை உறவாடு
இல்லண்ணா கருவாடு

தோழியின் கவிகளை வாசிக்க வாசிக்க ஏதோ ஒரு நந்தவனத்திற்குள் நுழைந்து கண்களை மூடிக்கொண்டு சுகமாக மலர்களின் வாசனைகளை பருகியது போல் ஒரு திருப்தி , கவின் என்ற பெயரிலும் , நிலா என்ற பெயரிலும் எழுதும் தோழியின் எழுத்துக்கள் யுகங்களை தாண்டி பயணிக்க வாழ்த்துக்கள் .

'' இவனை நம்பு அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள் , ஆனால் நான் சொல்கிறேன், முதலில் உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை '' அதுதான் வழி , '' எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன , அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து '' நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் '' என்ற விவேகானந்தரின் வாசகத்தை நெஞ்சத்தில் ஏந்தி , ஒரு கிராமத்திலிருந்து புறப்பட்டு கவி பல புனைந்து , பெண்மையின் எழுச்சி நிலைகளை தன் எழுத்தில் வடிப்பதையே உயிர் மூச்சாய் கொண்டு கவி பாடி வரும் தோழி ஒருவரின் கவியோடும் கொஞ்சம் பயணிப்போம்.

எங்க ஊர் திருவிழா... என்ற கவியில் கிராமத்து வாழ்வியலை கண்முன்னே நிறுத்துகிறார் , தன் எண்ணத்தின் ஓட்டத்தில் எழுந்த இனிய ராகங்களால்

உறவுகளை அழைக்க
சென்ற அப்பாவுடனே
சேர்ந்து வந்துவிடும்
அக்கா குழந்தைகளும்...

முன்னிரவே போடுகின்ற
கோலத்திற்கு கிடைக்கின்ற
தம்பி தங்கைகளின்
உதவிகளும் உடன்
உபத்திரங்களும்...

சொல்லாமலேயே பசியறிந்து
வந்ததும் வராமலும்
பெரியம்மா வைக்கும்
இரத்தப் பொரியலும்
போட்டி குழம்பும்...

கோவிலை சேர்வதற்குள்
கூழ்பானையையும்..
விளக்குமாவு தட்டையும்
கைமாற்றி கொள்ளும்
சித்தி மகள்களும்...

கல்யாணம் முடித்துபோன
வயதை மறந்து
பழகிய தோழிவட்டங்களின்
சந்திப்பில் கிசுகிசுக்களும்..
சிரிப்பு சத்தமும்..

பொங்கலுக்கு சுடுஅடுப்பைவிட்டு
காத்திருந்து ஒன்றாகவே
படையல் போடும்
அண்ணிகளாக வைக்காத
அத்தை மகள்களும்..
மாமன் மகள்களும்..

காவலுக்கு வரும் சித்திகளோடும்
அக்காக்களோடும் கூட்டத்தோடு
சென்று வாங்கும் வளையல்களும்...
விளையாடும் ரங்கராட்டினமும்...

இந்த வருடமும்
வரமுடியாமல் வேலைக்கு
சென்று கான்ட்ராக்ட்-ல்
இருக்கும் அண்ணன்களும்...
மாமன்களும்...

இப்படியே நீளும்
நினைவுகளோடு..

நெருங்குவது திருவிழாவிற்கு
குறித்த நாளென்று மட்டும்
எப்படி சொல்ல முடியும்...

பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை கண்டு பொங்கும் தோழியின் கவி பார்வை தீப்பிழம்புகளில் மூழ்கி வார்த்தைகளை கூர்தீட்டிய தாகப்படுகிறது மனதுள் ..இவரின்
பொறுமையை பெற்றெடுத்து பேரிட்டவர்கள் ...என்ற கவி இவ்வாறு பாடுகிறது அவலத்தை ...

பொறுத்து பொறுத்து
தினம் பொறுத்து பொறுத்து
மண்ணும் கண்டதுண்டோ
எமது பெண் இனம் கொண்ட
பொறுமையிலும் பெரிதாய்

எமது தன்னம்பிக்கையை
வேரோடு அறுத்தெறியும் துணிவு
வசைபாடும் நாவை
சுட்டுவிட துணிவதில்லை

எமது கற்பை இழந்ததற்கு தண்டனையாய்
மரணத்தை ஏற்கும் துணிவு
தீண்டிய விஷ நாகத்தின் தொண்டையை
பற்களால் கடித்து துப்பிவிட துணிவதில்லை

அவர்களின் எச்சில் போடும் சத்தம்
எமது பேச்சில் இருப்பதில்லை
எங்களுக்கு சொல்லி கொடுத்து வளர்த்ததும்
அப்படியோ என்செய்வோம் நாங்கள்

ஆயிரம் ஆண்கள் சூழ தினம்
என் வாழ்க்கை பயணம்
அத்தனை பேரின் போதைக்கும்
நான் ஒருத்தியே ..................
இதனுள் எம்இன சிறுமிகளும் அடக்கம்
வேதனை.. பெரும் வேதனை...
நாணத்தில் தலை நிமிர்ந்து
நடப்பதில்லை எம் இனம்

எதற்காக பட்டங்கள் பதவிகள் எமக்கு
கொஞ்சம் கொஞ்சமாக ஓர்
சுய தொழிலை சொல்லி தர
முயல்கிறது உரசி நின்று ஓர் உருவம்
வயது வித்யாசம் இருவரிலுமே கிடையாதாம்
தேடி தேடி வந்து வகுப்பெடுப்பது
அதில் சிறப்பு அட ச்சீ...
நெருங்கிய உறவுகளில் தொடங்கி
ஊர் தாண்டி உலகம்வரை
எமது ஆசான்கள்
வரம் என்பதா...
சாபம் என்பதா...

உடையணிந்து ஈர்த்தது நாங்களாம்
அவர்களின் புத்தியில் ஏற்பட்ட
பிழைக்கு காரணம் தேடுகிறார்கள்
எங்களிடமிருந்தே....
சிரிக்கத்தான் தோன்றுகிறது

மேடையேறி பெண்ணுரிமை பேச்சு
ஒரு சோடாவோடு எமது
உரிமை தாகம் தீர்ந்து போச்சு

மண்ணும் கண்டதுண்டோ
எமது பெண் இனம் கொண்ட
பொறுமையிலும் பெரிதாய்

தாவணி தொட்டவன்
தாடை பழுத்து பற்கள்
உதிர வேண்டாமா

காமம் சொல்லி கேலி செய்தவனை
பெற்றெடுத்த தாயின் கருவறையும்
காரி துப்பிட கேவளபடுத்த வேண்டாமா

இச்சைக்காய் தேகம் சிதைத்தவனை
தீண்டாமை இனமென உலகமறிய
செய்திட வேண்டாமா

நீ பொறுத்து பொறுத்து
உன் சகோதரிகளுக்கும் வழி விடுகிறாயோ
இந்த நாற்றம் மிகுந்த
அசிங்கத்தை மிதித்து
அவளும் நடக்க வேண்டுமா

எதுவரை உனது பொறுமை சொல்லடி
பொறுமையை பெற்றெடுத்து பேரிட்ட பெண்ணே
எதுவரை உனது பொறுமை நீளும்

தன் சுய இச்சைகளுக்காக குழந்தைகளை கூட விட்டு வைக்காத சமூக சீர்க்கேட்டை கண்டு குமுறும் கவி தேடலின் மீண்டும் குரங்காகவே போ என் சபிக்கிறார் மட மனிதர்களை...

மழலைதனம் மாறிடா பேச்சில்
எதை கேட்க நினைத்தாய்

பால் மணம் வீசும் ஆடையில்
எதை தான் நுகர்ந்தாய்

கருவறை அழுக்கு நீங்கா மேனியில்
எதை ருசிக்க துணிந்தாய்

உனது தீரா தாகம் தீர்க்க
சிறு ஊற்று எதற்கு
கடலில் வீழ்ந்து மூழ்கி
செத்து மடிந்திடு

அன்று துளிர்த்த அரும்பிலும்
தேனை தேடிடும் மிருகசாதியே

மிருகமென சொன்னாலும்
அவமானத்தில் கூனி குறுகி
அத்தனை இனமும் அழிந்துவிடும்

நாய்களே.. அட ச்சீ.... நாய்களே
கொழுப்பெடுத்து தினவெடுத்து திரியும்
மனித நாய்களே

வெறி பிடித்த நாய்களில் கூட
இந்த வெறித்தனம் இல்லையே

மீண்டும் குரங்காகவே போ
அதில் இல்லை இந்த வக்கிரம்

மனிதனாய் மாறி
நீ மாண்டது போதும்
குரங்காகவே........
மீண்டும் நீ மாறி போ


மழைக்கான தேடலாய் உசுர கொடுக்கும் சாமி.. என்னும் கவியின் கிராமத்து மண்வாசனையுடன் மழை தேடி உடன் பயணிக்கிறோம் நாமும் ..

பால்காச்சின நெல்லுப்பச்ச
கருவறுந்து காஞ்சி போச்சி
உசுர கொடுக்கும் சாமி
நீயும் வந்து போயேன்

கிணறு நெறைஞ்சி
வயலெல்லாம் ஓடும் கிணத்துமீனும்
அடிமட்ட சேத்துல சுருண்டு
பொதஞ்சி மண்ணா போச்சி
அள்ளி பூசி ஆனந்த கூத்தாட
நல்ல திருநாள் பாத்து
நீயும் வந்து போயேன்

உருப்படி இருந்த
ரெண்டு மாடும் செத்து போச்சி
எளவு சேதி சொல்லுறேனே
ஆதிமுதலில் தொடங்கிய உறவே
நீயும் வந்து போயேன்

வெதைக்கான இருப்பும்
உலையுல வெந்து போச்சி
வெள்ளாமை இல்லாம
பெத்த பொண்ணும் இருப்பா போச்சி

மண்ணேந்தி நிக்குறோமே எசமான்
பிழைக்க வேற வழியாவது வந்து
நீயும் சொல்லி போயேன்

காட்டு தீயா புள்ளைங்க
வயிறு பொசுங்கி போச்சி
கருணை கெட்டு அழாம
வீராப்பா கடந்து போறியே
பாழா போன மழையே
நீயும் வந்து போயேன்


ஒரு கண்ணகியின் ருத்திரம் , ஒரு ஆவேசம் , ஒரு கிராமத்து குயிலின் கானம் , தேடல், இத்தோழியின் கவிக்குள் காண்கிறேன் அதை வாசிக்கும் நொடிகளில் , மணிமேகலை மணி என்ற பெயரில் கவி புனையும் இத்தோழி எழுத்திலும் , வாழ்விலும் மென்மேலும் உச்சத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .

பிறக்கும் பொழுது , எதனையும் கொண்டு வருவதில்லை , இறக்கும் பொழுதும் எதனையும் கொண்டு செல்வதில்லை , இடையில் வாழுகின்ற வாழ்வில் நாம் செய்த நற்செயல்களே , நம்மை இறவாமல் உயிர்க்க வைக்கும் எனும் பொழுது , எழுத்தாளர்களாகிய நாம் , சக மனிதனுக்கு , யுகங்கள் தாண்டி எதைத் தரப்போகிறோம் , தன்னலம் கருதாது தன்னையே அர்பணித்த உள்ளங்கள் தான், நாம் இன்று உயிரோடு வாழ்வதற்கான சூட்சுமம். அவர்களின் தேடல்களே நம்மை உயிர்ப்பித்துகொண்டுள்ளது எப்போதும் , இருக்கும் போது முழுமனிதனாக வாழ ஆசைப்படு , இறந்த பின்னும் உன் பெயர் சொல்ல ஏதோ ஒரு மிச்சமாய் ..

இருப்பது பொய் ; போவது மெய் ;
...என்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்கும் தீங்கதனை
...உன்னாதே ! பருத்த தொந்தி
நம்மது என்று நாமிருப்ப
...நாய் நரிகள் பேய்கழுகு
தம்மதுஎன்று தாம் இருக்கும் தான்

....சித்தன் .....பட்டினத்தார் ....


தோழி நிலா , தோழி மணிமேகலை மணி இருவரும் எழுத்தில் , வாழ்வில் புதிய உச்சங்களை தொட மனப்பூர்வமான வாழ்த்துக்கள் , மறு வாய்ப்பு நல்கிய தோழா் கவித்தா சபாபதிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

அநேக அன்புகளுடன்
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (27-Apr-15, 4:02 pm)
பார்வை : 687

சிறந்த கட்டுரைகள்

மேலே