அய்க்கூ கவிதைகள்

முன்னுரையாய் சிற்சில சிதறல்கள்
சுதேசமித்திரன் இதழில் 16-10-1916 ஜப்பானியக் கவிதை என்று தலைப்பிட்டு மகாகவி பாரதியார் எழுதிய சின்னஞ்சிறு கட்டுரையே தமிழ் இலக்கியஉலகில் அய்க்கூ கவிதைகள் குறித்த முதல் விழிப்புணர்வைத் தந்தது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நடத்தி வந்த ‘‘ குயில் ” இதழில் (01-10-167) அய்க்கூ கவிதைகள் பற்றிய செய்திகள் உள்ளதென இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். அதில் மகாகவி பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் எழுதிய அய்க்கூவிற்கும் முந்தைய வகைகளுள் ஒன்றான ஹொக்கு வகையிலான சில கவிதைகளைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் மொழிப்பெயர்த்துப் படித்துக் காட்டினார். பாடலைக் கேட்ட அடுத்த விநாடியிலேயே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மகாகவி பாரதியாரிடம் ‘‘ தமிழில் சங்க இலக்கியத்தில் உள்ள புறநானூற்றுப் பாடல்களைப் போலவே இருக்கின்றன ” என்று கருத்துத் தெரிவித்தாராம்.
தமிழில் ஐங்குறுநூறு , சிந்தடி , அம்மானை , ஆத்திச்சூடி போன்று சுருக்கமான இலக்கிய வடிவங்களோடு ஜப்பானிய அய்க்கூ கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்க இடம்உண்டு
பழமொழி , மரபுத்தொடர் , விடுகதையில் வேண்டுமானால் அய்க்கூ கவித்துவம் இருக்கலாம் ஆனால் அய்க்கூ கவிதைகளில் பழமொழி , மரபுத்தொடர் , விடுகதை இயல்பு இருக்கக் கூடாது.அய்க்கூ கவிதைகளை சரியாக எழுதவேண்டும்.இல்லாவிடில் பழமொழியாக , விடுகதையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.
காலத்திற்கேற்ப வாழ்வின் எல்லா நிலைகளையும் அய்க்கூ கவிதைகள் எளிமையாக , இனிமையாக , அழகாக , உயரியநடையில் பாடி வருகின்றன.இதனால்தான் அய்க்கூ கவிதைகள் வாழ்கின்றன வளர்கின்றன.
பிளித் என்பவர் ‘‘ அய்க்கூ கவிதைகள் என்பது தற்காலிக ஞானம் ” (TEMPORARY ENLIGHTENMENT ) என்று கூறியுள்ளார். அந்தத் தற்காலிக ஞானம் கூட உங்களுக்கு வாழ்வில் நிரந்தர ஞானத்தை வரவழைக்கலாம்.சிறந்த அய்க்கூ கவிதை ஒவ்வொன்றையும் புத்தர் ஞானம் அடைந்த போதிமரமாகப் பார்க்கின்றவர்களில் நானும் ஒருவன்.
படைப்பாளிக்கு வாழ்வியல் , கவிதையியல் , அழகியல் அனுபவக் கூறுகள் ஒவ்வொன்றாக நிறைவடைகிற போது அய்க்கூ கவிதை எழுதத் தொடங்க வேண்டும்.படிப்பாளிக்கு அய்க்கூ கவிதை நிறை வடைகிறபோது கவிதைஅழகியல் இரகசியம் , வாழ்வியல் இரகசியத்தை உணரத்தொடங்கவேண்டும்.
அய்க்கூ கவிதைகளின் கிளைவடிவங்களாக சென்ரியு , லிமரைக்கூ , ஹைபுன் , லிமரிக் சென்ரியு என்று பல வடிவங்கள் உள்ளன.
இந்நூலில் அய்க்கூ கவிதைகளையும் அங்கதச்சுவையும் (satire)நகைச்சுவையும் வாழ்வியல் முரண்களைக் காட்டும் சென்ரியு கவிதைகளையும் சேர்த்தே படைத்துள்ளேன். அய்க்கூ கவிதைகளின் குழந்தைகளில் ஒன்றுதான் சென்ரியு கவிதைகள். பெயர்கள் தான் வேறு வேறு கவித்துவ அழகில் எதை எப்படிப் பாடினாலும் கவிதையாகப் பார்ப்பேன்.ஷேக்ஸ்பியர் கூறியது போல ‘‘ ரோஜாவிற்கு என்ன பெயர் வைத்து அழைத்தால் என்ன?” (ROSE IS A ROSE IS A ROSE )




முதலில் சாதியைப் புதைப்போம்
பிறகு தலைவனையும் புதைப்போம்
சாதிக்கட்சித் தலைவரின் மரணம்

மணமக்கள் பட்டாடையில் பதிக்கபட்ட
வண்ணத்துப் பூச்சிகளின் மரணஓலங்களும்
கெட்டிமேள ஒலியில் காணமல் போனது

நாளைமுதல்
சிறைச்சாலைக்குள் போகவேண்டும்
பள்ளிகள் திறப்பு

திரைப்படக் கல்லூரியில் படிக்காமலே
கதை திரைக்கதையில் சாதனை
என்கவுண்டர் போலிசின் பத்திரிகைபேட்டி

ஏலச்சீட்டு முதலாளி திடீர்மரணம்
மக்கள் கண்ணீர் வெள்ளத்தில்
போன பணத்தை நினைத்து

இன்னொரு சித்தார்த்தன் வரவுக்காக
நம்பிக்கையில் துளிர்க்கின்றன
அரசமரங்கள்

தேவதை வந்திருக்கிறாள்
என்னவளின் காலடிகளைத் தேடிவந்து
விழுந்து வணங்குகிறது கடல்

செயற்கைக் கருத்தரிப்பில்
கவிதைகளும் பிரசவிக்கப்படுகின்றன
திரைப்படப் பாடல்கள்


கடற்கரைஓரத்தில்
தோற்ற காதலர்களின் கண்ணீர்ப் பெருக்கம்
உப்புக் கரிக்கிறது கடல்

மனப்பூர்வமாய் உன்னையே நீ
ஏமாற்றிக் கொள்ளப்போகிறாய்
இன்று தேர்தல்நாள்

காதலி காதலி காதலி
காதல் கைகூடா விட்டாலும்
கவிதையாவது கைகூடும்

பெண்ணில் உடல் தோன்றவும்
மண்ணில் உடல் மறையவும்
பத்தே மாதங்கள்

இளமையில் அவள் வரைந்த
காதல்கோலம் முதுமையில்
கண்ணீராலும் கலைவதில்லை

கருவறையில் வந்த பின்னே
கல்லறைதான் சொந்தமே
இடையில்எல்லாமே தற்காலிகப் பந்தமே

வெறுங்கைதான்
முழம் போடுகிறது
பூக்கடையில்

மீன்தொட்டியைப் பார்த்தால்
மனிதனுக்கு மனஅழுத்தம் குறையுமாம்
மீன்களுக்கு…..?


மடியில் கணம்
கொஞ்சம் கூட பயமில்லை
தொப்பை மனிதன்

மருத்துவமனைகளில் கூட்டம் நோயும்
நோயாளிகளும் அதிகம் கோயிகளில் கூட்டம்
பாவமும் பயமும் அதிகமோ

வரைபடம் இல்லாமலே
வீடு கட்டி முடித்தது
சிலந்தி

சொந்த ஊருக்கு வந்தேன்
எல்லாமே மாறியிருந்தன
மாறவில்லை அம்மாவின் அன்பு

அந்நியநேரடி முதலீடு
கொள்ளையராய்
வெள்ளையர்கள் மீண்டும்

தாத்தா மரணப்படுக்கையில்
பேரனின் கவலையெல்லாம்
தீபாவளி புதுத்துணியை நினைத்து

இந்த உலகத்திற்குப் பொருள்தேவை
மேல் உலகத்திற்கு அருள்தேவை
இருஉலகமும் வேண்டாம் என்பவனுக்கு…?

கட்சித்தலைவர் பிணங்கள் எல்லாம் எழுந்து
ஓட்டுக் கேட்டு ஊருக்குள் வரப்போகின்றன
தேர்தல் அறிவிப்பு


ஆசிரியரைப்
பழிவாங்கிவிட்டேன்
பார்த்தும் வணக்கம் வைக்கவில்லை

சத்தமாக வீண்பேச்சு பேசினேன்
தூங்காமல் ஓட்டவேண்டும்
ஓட்டுநர்

உடைத்தாலும் பலநூறு
பிம்பங்களாய் உயிர்த்தெழும்
முகம் பார்க்கும் கண்ணாடி

ஒருவனே இருவனாய்
சுமைத்தாங்கியாக சுமைத்தூக்கியாகப்
படிக்கட்டுகள்

கணவன் வீட்டிலிருந்து மகளின் கடிதம்
பிரிக்கும்போது லேசாகத்தான் இருந்தது
முடிக்கும்போது கனமானது மனசு

உடைந்த பொம்மைக்கும்
ஒப்பாரி
குழந்தையின் அழுகை

அத்தைக்காரியின் வருகை
நஷ்டம் அப்பாவுக்கு
கஷ்டம் அம்மாவுக்கு

கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு…
பாடலை இரசிக்க மறுக்கிறது
சாணைப் பிடிப்பவன் மனம்


வாழ்த்தின் மகிழ்ச்சி ஒருபக்கம்
காலத்தின் வயது எச்சரிக்கை மறுபக்கம்
இன்று பிறந்தநாள்

ஒலிவாங்கி பொய்வாங்கியாய்
ஒலிப்பெருக்கி பொய்பெருக்கியாய்
அரசியல்மேடையில்

இந்த வீட்டில்
குழந்தையிடம் மட்டுமே
பேசுகிறது பொம்மை

இலக்கணப் பிழைகள்
அதிகமாக அதிகமாக இனிமை கூடுகிறது
மழலைமொழிக்கு

பொறுமையையும் கூடவே
கயமையையும் கற்கலாம்
கொக்கிடம்

‘‘ பிறப்பொக்கும் எல்லாஉயிருக்கும்…’’
வள்ளுவர் காலத்தில்
தனியார் மருத்துவமனைகள் இல்லாதலால்

குன்றிலிட்ட விளக்காய் முன்னேறும் மாணவர்கள்
குடத்திலிட்ட விளக்காய் பள்ளியிலேயே
ஆசிரியர்கள்

நேற்று அப்பாவுக்கு
இன்று எனக்கும் நாளை உனக்கும்
முதுமையும் கைத்தடியும் மரணமும்


வார்த்தைகளை ரொம்பவே
அள்ளிக்கொட்டிவிட்டான்
அகராதியில்

நடிகனுக்குச் சிலை வைத்தால் சாதனையாம்
நடிகைக்குச் சிலை வைத்தால் காமமாம்
சிலையிலும் தொடரும் ஆணாதிக்கம்

வாய்க்குத்தான் கிடைத்தது
வயிற்றுக்குக் கிடைக்கவில்லை அரிசி
செத்த பிறகும்

வல்லரசாகணும் மாளிகைவாசியின் கனவு
நல்லரசாகணும்
குடிசைவாசியின் கனவு

வீட்டுக்கு வீடு சொத்துச் சிக்கல்
உயிரோடு வாழ்கிறது
மகாபாரதம்

கிணற்றில் பலவாளி தண்ணீர்
இறைத்தும் வெளியே வரவில்லை
பால்நிலா வெளிச்சம்

மண்பொம்மை விலை குறைவுதான்
உடைந்தால் கவலை அதிகம்
வாங்க மனமில்லை

வறுமை கூட வசதியானது
அடுப்பங்கரையில் குட்டிப்போட்டுள்ள
பூனைக்கு


உயரிய விருது தரப்பட்டது
எழுத்தாளர் எழுதுவதை
நிறுத்திய பிறகு

நடைபாதை வாழ்க்கை வாசிக்கு
நட்பு அதிகமாகியது
நிலவோடு

வியபாரிகள் சங்கத்திற்குப்
இன்னொரு புதுப்பெயர்
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

மரங்கள் செடி கொடிகள்
பூத் தூவி வாழ்த்துகின்றன
நதியின் நடைபயணம்

இறந்த மரக்கரித்துண்டுகள்
மீண்டும் இறக்கின்றன
கரிஅடுப்பில்

உப்பைத் தின்றவன்
தண்ணீர்க் குடிக்கிறான்
ஆற்றுநீரை விழுங்கும் கடல்

அழகான கவிதையைக் கேட்டிருப்பீர்கள்
அழகான கவிதையைப் பார்த்ததுண்டா
என்னவளைப் பாருங்கள்

ஆலயத்தில்
வெளியே ஒருவன் உள்ளே ஒருவன்
பிச்சைக் கேட்டல்


நேற்று அட்சயகிருதிக்காக நகைகடைக்குப்
பயணம் இன்று அவசரத்திற்காக
அடகுகடைக்குப் பயணம்

முள்ளுக்குக் கிடைத்தது
அழகான எதிரி
ரோஜா

புத்தகமாக வெளியிடுமுன்
கவிதைகளை அவசரமாய் புரட்டிப்
படிக்கிறது தென்றல்

ஆண்டவா ஆகாயக்கூரையை
மாற்று எண்ணிலடங்கா
நட்சத்திர ஓட்டைகள்

நட்சத்திரங்களுக்கு
அழகான போர்வைகள் கொடு
குளிரில் நடுங்கி நெளிகின்றன

இறந்த பூனைக்கு யாருமில்லை
ஆற்றுத்தண்ணீர் புரிந்துகொண்டு
இழுத்துச் செல்கிறது

வாடிய பயிரைக்கண்ட போது
வாடவில்லை விவசாயி
நிவாரணத்தொகை உண்டு

எல்லா நட்சத்திர வீரர்களுக்கும்
விளையாடப் போதுமா
ஒரே ஒரு நிலவுப்பந்து


மழைநீர் சேகரிப்பில்
முதல்பரிசைப் பெற்றது
எங்கள் ஊர்ச்சாலை

உயிருள்ள பொம்மைகள்
பேரக்குழந்தைக்கு
தாத்தாவும் பாட்டியும்

மின்னலாகத்தான் வந்தது
இடியாய் இடிக்கிறது
காதல்

பணிமாறுதல் உத்தரவு
உண்மையிலேயே வருத்தப்படும்
ஒருமணிக்கு வரும் நாய்குட்டி

மன்னனைத் தவிர
மற்ற எல்லாருக்கும் கேட்டது
ஆராய்ச்சிமணிச் சத்தம்

காந்தியைக் கொன்றவனுக்கும்
கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கிறது
வில்லன்கள் தேசத்தில்

நாற்றத்தில்
உயிர்வாழ்கிறது அரசாங்கம்
மதுக்கடைகள்

இன்னொரு காந்தியடிகள் தேவை
விரட்டியடிக்கணும்
உள்நாட்டுக் கொள்ளையர்களை


துடுப்புகளைப் பின்னுக்குத்
தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தது
தோணி

அழவைத்து வாழ்ந்தவனிடம்
அமைதியாய் நெருங்கிறது
மரணம்

எல்லா உயிர்களுக்கும்
ஒரே மாதிரியான கிளைமாக்ஸ்
இறப்பு

எத்தனை எத்தனை மதநெறிகள்
அடங்க மறுக்கின்றன்
மதவெறிகள்

மாற்றமும் ஏமாற்றமும்
அன்று கல்வி நிலையங்கள்
இன்று கல்வி நிறுவனங்கள்

அன்பில்லாத மனைவி
ஊரில் இல்லை குருப்பெயர்ச்சியாம்
உயிரோடில்லை சனிப்பெயர்ச்சியாம்

எழுதியவர் : damodarakannan (29-Apr-15, 4:59 pm)
பார்வை : 271

மேலே