கொசு - நாகூர் கவி

பயிற்சி ஏதும் பயிலாமலே
முயற்சியாலே ஊசிப்போடும் வித்தைக்காரி
சாதி மத பேதமின்றி
குருதி குடிக்கும் இரத்தக்காட்டேரி...

காற்றாடி நின்றுவிட்டால்
காற்றிலாடி பாடி வரும்
கண்டபடி மேனியெங்கும்
கொசு கடித்தே தீரும்...

காதோரமாய் பாடும்
கை தூக்கினால் ஓடும்
இரவெல்லாம் வாட்டும்
உறவெல்லாம் கூட்டும்...

வெளிச்சம் போட்டு காட்டிவிட்டால்
தேகத்தை பழுக்க வைக்கும்
உன் கையால் உன்னையே
வெளுத்து வாங்கும்...

டெங்கு மூலம்
சங்கு ஊதும்
அங்கமெங்கும் உனக்கு
நொந்துப் போகும்...

கடித்தப் பொழுதில்
அடித்துவிட்டால் உயிரைவிடும்
அடிக்க நீயும் தவறிவிட்டால்
மீண்டும் தேகமயிரைத் தொடும்...

சிறுசு முதல் பெருசு வரை
கொசுவின் இலக்கு
கோபித்து நீதிமன்றம் சென்றாலும்
கொசுமீது போடமுடியாது வழக்கு...!

எழுதியவர் : நாகூர் கவி (29-Apr-15, 9:18 pm)
பார்வை : 381

மேலே