மனு நீதி
![](https://eluthu.com/images/loading.gif)
கைநழுவிப்போன
காலங்கள்
சொல்லக்கூடும்
பாதைமாறிப்போன
பயணங்களின்
வீழ்ச்சியினை !
துள்ளியோடிய கன்றினை
தேரேற்றிக்
கொன்ற பிறகு
ஆராய்ச்சி மணியடிக்கும்
பசுவிற்காக
என் மகனை
தேர்க்காலில் நசுக்க
நான் தயாராயில்லை
எனவே
எனது ரதத்தினை
ரத்தமேதுமற்ற
கயாவின் பக்கம்
திசை திருப்புகிறேன் !
எவர் காற்சிலம்பாயினும்
பரல்களைச் சரிபார்த்து
தீர்ப்புகளை வழங்குகிறேன்
ஏனெனில்
பதிபக்தி வெறிமிகு
தலைவிரி கோதையால்
இனியொரு முறை
உடைசிலம்புப்
பரல் தெறித்து
நான் உயிரிழக்கத்
தயாராயில்லை !
விளையாட்டாய்
கூட
மாற்றுத் திறனாளிக்
கூனில்
உண்டிவில்லெறிய மாட்டேன்
ஏனெனில் -
அதன் வஞ்சம்
கைகேயியின் வாயினில்
சத்தியமாய் மாறி
எனை
கானகம் அனுப்பக்கூடும் !
இனி
என் பயணங்கள்
காலின் தடம் பார்த்தே
நடை தொடரும்
ஏனெனில் -
இனி எந்த காஷ்யபனின்
கனியையும்
எட்டி உதைத்து
யானைப் பசிவாங்கி
காயசண்டிகையாய்
அட்சயபாத்திரம் தேடி
அலையமுடியாதென்னால் !
வரலாற்றுக் கறைபடிந்த
வேதாளத்தை
சுமக்கிற
விக்கிரமாதித்த முதுகுகளின்
பின்னால்
விடைகாண முடியா
கேள்விகள்
முருங்கை மரமேறும்
ஆவலில் நீண்டு
தொங்கிட ....
நமக்கான கேள்விக்கு
நாமே பதில் .