மதிக்காத நாய்கள்மயங்காத ஞானம்
வாழ்க்கையில் தடைகள்
***வருகிற பொழுது
****வளைந்து கொடுக்காதே -மனமே
****தளர்ந்து படுக்காதே
பூக்களின் மணமோ
***பொசுக்கிடும் நெருப்போ
****பொருட்டாய் மதிக்காதே -எதிலும்
****பொறுமை இழக்காதே
மதிப்பவர் மதிக்கட்டும்
மிதிப்பவர் மிதிக்கட்டும்
உன்னில் மட்டும்
உறுதி கொள்ளுவாய்
பழிப்பவர் பழிக்கட்டும்
பழகுவர் பழகட்டும்
உண்மை கொண்டே
உலகு வெல்லுவாய்
நடப்பது நடக்கட்டும்
கிடைப்பது கிடைக்கட்டும்
நம்பிக் கையைத்
தினமும் கொள்ளுவாய்
உடைவது உடையட்டும்
உடையதும் தொலையட்டும்
வெம்பி நின்று
அழுதல் தள்ளுவாய்
உன்பலம் அறியா திருப்பது ஊனம்
சம்பளம் விரும்பித் திரிவது ஈனம்
சரித்திரம் படைக்கும் திறமது வேணும்
அடுத்தவன் குறைக்கே அழுததும் போதும்
மதிக்கத் தெரியா மனிதர் உறவினும்
எரிக்கும் நெருப்பை எடுத்தல் சிறப்படா
விதிக்குப் பயந்து விலகி ஒதுங்குதல்
விரிந்த அறிவைக் கருக்கும் எனவுணர்
கும்பிடும் நிலையோ
***குனிந்திடும் தலையோ
****கொண்டுத் திரியாதே - எவனும்
****குரைக்கக் கரையாதே
நம்பியே தொடங்கு
***நலிவுறல் தவிர்த்து
****நயந்து பணியாதே -பிறரின்
****நடிப்பில் மயங்காதே