மழையென்பது யாதென

மழையென்பது யாதென.....
தொடங்கியச் சொற்களுக்கு
அடுத்தடுத்த சொற்களை
கூட்டி மடக்கி
நீட்டி முழக்கி
வரிகளாக முடிக்க
எதிர் வீட்டு ஒட்டக்கூத்தனிடமும்
பக்கத்து வீட்டு அவ்வைப் பாட்டியிடமும்
கடன்கேட்டோ களவாண்டோ
கவிதையெனழுதி
புரட்சிக்கவிஞனென
பட்டம் பெற்றிடலாம்

வேற்றுமொழிச் சொல்லற்று
மாற்றுச்சிந்தனையில்
பொறுப்புக் கூடியெழுதிய வரிகளை
தமிழ் மழையென
பெருந்தன்மைப் படலாம்,

நெற் களஞ்சியத்திலும்
நெசவுக் கூடங்களிலும்
இன்ன பிற
ஆதிக்க கூடாரங்களிலும்
கூலித்தொழிலாளர்களின்
உழைப்பில் சிந்தும்
வியர்வைத்துளிகளை
இலக்கியக் குடுவையிலூற்றி
சித்தாந்தச் சிவப்புமழையென
பொதுவுடைமை ஆற்றலாம்.
,

கற்பு என்றால்
எப்படியென்று வினவும்
இந்தக் கால
கன்னியொருத்தின் நினைவில்
அன்பே ஆருயிரே
உறவே உயிரேயென
வர்ணனை மோகச்சூட்டில்
சகட்டுமேனிக்கு கவியெழுதி
காதல் மழையென
இலக்கியச்சேவை பேணலாம்.

அடைமழை
கான மழை
ஆலங்கட்டி மழை
பனிக்கட்டி மழையென
மழை வகைகளை
பின் நவீனத்துவத்திற்குள் நுழைத்து
கவிதை மழையெனவும்
கும்மாளமிட்டு கூத்தாடலாம்.

யாவுமே கற்பனைப்படுத்தி
மழைக்கவியெழுத எமக்கு மிகச்சுலபமே.

மண் பயனுற (?)
மானிடம் செழிக்க (?)
எழுத்துகள் விதைத்து
கவிதை நீருற்ற விழைந்தப்போது...

மரமென்பது யாதென என
எதிர்கால அபாய மணியாய்
திடுக்கிடும் ஒரு மாயக்குரல் கேட்டு
உடல் வியர்த்து
வீட்டைவிட்டு
சாளரம் வழியாய் என்விழி
வெளியேறி பார்த்தது.

ஒரு வேப்பமரத்தையும்
ஓர் அரசமரத்தையும்
ஒரு கோடாரியால் வெட்டிய
ஒரிரு மனிதர்களை வெட்டிக்கொல்ல
ஒரு மம்முட்டியை
எடுத்துக்கொடுத்தான் என் காத்திர மகன்
ஒருசில மரக்கன்றை
எடுத்துக்கொடுத்தாள் என் பக்குவ மகள்.
ஒரு குடத்துத் தண்ணீரை
எடுத்துக்கொடுத்தாள் என் பொறுப்பு மனைவி.
ஒரு கவிதை
எழுதுவதை நிறுத்திவிட்டேன் நான்.

மழையென்பது யாதென.......
.........................................
.................................................
மரங்கள் வளர்ப்பது கடமையென...



-வியன்

எழுதியவர் : வியன் (2-May-15, 5:04 am)
பார்வை : 114

மேலே