என்னுடல் கண்ணீர் தேக்கம் காய்ந்து விட்டது

அதே பழைய புதுப்புடவை.
அதே அறை.
வரிசை மாறாமல் அமர்ந்த அதே சொந்தங்கள்.
அசல் புன்னகை;
போலிப் பொன்னகை.
சகுனமோ என்னவோ? அறைக்குள் அடைக்கப்பட்ட சகோதரி
பழகிப்போன பழைய நாணம் .
இன்றும் அதே மணப்பெண் வேடம்

பழைய தேநீர்க் கோப்பைகள்;
பருகும் புதிது உதடுகள்.

புது உதடுகளிலும் அதே பழைய வார்த்தைகள்
“சொல்லி அனுப்புகிறோம் “
இதுவென் செவி கேளாத வார்த்தைகள் இல்லை:
அமாவாசை ஒன்றும் நிலவுக்கு புதிதில்லை
பார்த்து சென்ற எவரும் தூதனுப்பியதாய்
இதுவரை என் நாட்குறிப்பில் குறிப்புகள் இல்லை.

இதில் கருமவினை ஏதுமில்லை;
என் கருமேனி செய்த வினை.
காந்தி நோட்டுகள் செய்யும் வினை

கருநிறத் தோல்,
கலையாத பெண்மை,
காசுகளை சேர்த்து ப் பிழைக்காத தந்தை,
கருணையிலாக் கடவுள்,
இதில் எது என் தவறு.

எத்தனை இரவுகளைத்தான் தூக்கத்தால் கழிப்பது.
எத்தனை இரவுகளை ஏக்கத்தில் கழிப்பது.
இந்த சகாராவில் சாரல் தூவதோ
எதோ ஓர் கார் மேகம்!!
இந்த இருள் பகலின் இமை திறக்கதோ
ஓர் சூரியன்!!
இம்மலர் வாடி விடும் முன்னே கூடாதோ
ஓர் வண்டு!!

மனம் பார்த்து மணம் முடிக்கும் ஆண் இங்கு இல்லையோ?
பணம் பார்த்து மணம் முடிப்பதில் என்ன நியாயமோ?
பணம் வாங்கி உடல் கொடுப்பவள் வேசி என்றால் ?
தனைத் தர பணம் கேட்பவன் வேசனன்றோ?

அழுது அழுது
என்னுடல் கண்ணீர் தேக்கம் காய்ந்து விட்டது
இனி என்னுடலில் வியர்வைக்கும் உப்பு நீர் இல்லை.

சூரியன் இல்லா உலகில்
இந்த இரவாவது விடியுமென
எத்தனை முறைதான் முகத்தில் கோலம் தீட்டுவது
நித்திரை தொலைத்து ஏமாறுவது

இத்தனை இரவுகளாய் சலிக்காமல் வந்த திருமணக் கனவு
இப்போது வாவென்று வற்புறுத்தினாலும் வருவதில்லை

என் கட்டில் தொட்டில் கனவுகள் எல்லாம்
கனவாகவே கலைந்திடுமோ
என் கர்ப்பப்பை கரு சுமக்காமலே
தீயினில் கனன்றிடுமோ

வண்டுகள் நுகரா பூக்கள்
இவ்வுலகினிலேது என்னும் கவிகளே
அது பொய் தானே.

கந்தன் முதல் கர்த்தன் வரை வேண்டி விட்டேன்
எல்லாம் காரை சிலைகள் தான் போல
வரம் ஏதும் தரவில்லை
இனி சூடத்திற்க்கும், மெலுகிற்கும்
செலவு செய்வதாய் உத்தேசம் இல்லை

என் இளைய ஆண் வர்க்கமே
அழகு என்பது உடல் நிறமல்ல
படியுங்கள் திருக்குறளை
நிறத்திற்கும் மனதிற்கும் கோர்வை இல்லை
படியுங்கள் உளவியலை
காட்சிப்பொருள் நாங்கள் அல்ல
பெண் பார்க்க வரும் முன்னே முடிவெடுங்கள்.
அழகியவள் வேண்டுமெனுமுன்னே
கண்ணாடியில் ஒரு முறையாவது உங்கள் முகம் பார்த்திடுங்கள்

எழுதியவர் : மு.ஜெகன் (2-May-15, 3:04 am)
Tanglish : intrum athey vedam
பார்வை : 454

மேலே