மழையென்பது யாதென
ஒரு நொண்டிக் கோழியொன்று
விரைந்து நடக்க யத்தனித்து
வீதிவழி விரைகிறது ...
கார்மேகத்தின் நகர்தலும்
இடிகளின் ஓசையும்
மின்னல்களின் பிரதிபலிப்பும்
அதனுள் சலனத்தை
ஏற்படுத்தியிருக்கக்கூடும் ...!
சொட்டுச் சொட்டாய்யெழுந்து
சோவென பெய்யத்துவங்கிவிட்டது
சிறு மழையோ..
பெருமழையோ...
கொட்டித்தீர்க்கட்டும்
மொத்தமாய் ...
மண்ணின் வாசனை மேலெழும்பி
நாசிக்குள் புது சுகந்தமாய்
நகரும் நொடிகளில்
காது மடல்களைத் தழுவும்
இளந்தென்றல் காற்று
இதயத்தை தித்திப்பாக்குதல்
இயல்புதானே ...
விரைந்து நடக்கவியலாது
மொத்தமாய் நனைந்து
இளஞ்சூட்டிற்காய் அக்கோழி இறகுகளுக்குள் தன் தலையை
இழுத்துக்கொள்ள ...
ஆநிரைகளும்
ஆடுகளும்
திறந்த வெளிக்கொட்டகையில்
தீடீரெனயெழுந்த மழைக்குப் பயந்து
ஒரு ஒரமாய் ஒன்றோடொன்று
ஒண்டிக்கொள்ள ...
மிதிவண்டியை எடுத்துக்கொண்டு
மிக விரைவாயந்த விவசாயி
விளைநிலத்தை நோக்கி
விரைகிறான் விசும்பலோடு .
புயலின் கோரரூபத்தால்
பருவம் தப்பிய மழையின் பிடியிலிருந்து
பயிர்களைக் காக்க
பாவம் என்செய்வானவன்...
எதையும் பொருட்படுத்தாது
எல்லா காகிதங்களையும்
எடுத்து அவசர அவசரமாய்
காகித கப்பல்கள் செய்ய முயல்கிறான்
கிராமத்து சிறுவனொருவன் ...?
இடிமின்னலின்
இடர்ப்பாட்டில்
எங்கேயோ அறுந்து விழுந்த
மின்கம்பியால்
மின்சாரம் முழுவதும்
திடீரென தடைபட ...
மின்தடை விரைந்து சரிசெய்ய
மறவாது கிளம்புகிறான்
மழைக்கால உடையுடன்
என் சக தோழனொருவன்
தன் சகாவுடன்...
ஒவ்வொரு இடமாகத் தேடி
ஓயாது பணிசெய்தும்
தடைக்கான காரணம் புலப்படாது
அறுந்த கம்பிகளின்
அருகினில் அடையும்போது...
மழையின் பேயாட்டம்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொட்டித்தீர்த்தபின் ..
மிச்சமிருந்த நீர்த்துளிகள்
இலைகளை தழுவிக்கொண்டிருக்க ...
இரவின் வெளிச்சங்கள்
இதயங்களுக்கு புரிபடாது போக
அறுந்த கம்பிகள்
அந்த இரு உயிர்களை
அந்த ராத்திரியில்
காவு கொள்கின்றன ...!!
மறுநாள் நாளிதழில்
வெறும் செய்தியாகிவிட்டது
அவர்களின் இறப்பு ?
நேற்று பெய்த மழையில்
காகிதக் கப்பல்களை
விட்டுக்கொண்டிருக்கிறான்
இறந்தவனின் மழலையொருவன்...
அவனுக்குப் புரியுமா
மரணமென்பதும்...
மழையென்பதும்...யாதென ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
( மின்தடை சரிசெய்யும் பணிகளின் போது உயிர்துறந்த , என்சக தோழர்களுக்கு இக்கவி சமர்ப்பணம் )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நல் தலைப்பு தந்த நண்பர் தாகுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
*** குமரேசன் கிருஷ்ணன் ***