உளியின் கதையும் ஒரு பூவன விதையும்
ஏக்க நதியின் கரையோரம் சிதைந்த
ஏழையின் கனவுகள் போல்
ஓடி ஓடிக் களைத்த- ஒரு
குதிரையின் குளம்புகள் போல்
தேய்ந்துபோன உளிகள்.....
காய்ச்சிக் காய்ச்சி
தட்டித் தட்டி
தேய்ந்துபோன உளிகள்..!
எத்தனை பாறைகள் உடைத்தன
எத்தனை கருங்கற்கள் கொடுத்தன
எத்தனை சிற்பங்கள் வடித்தன
எத்தனை சரித்திரம் படைத்தன
இன்று இவைகள்
மரித்தன.
இவற்றைப் பழக்கிய கைகள்
எப்படியெல்லாம் உழைத்தன
ஏனின்று இளைத்தன-மனம்
களைத்தன?
உளியின் கதை தேயும்போது
உதிரத்தாலே
உழைப்பவன் கனவு
மலர்ந்திட வேண்டும்
உழைப்பவன் கனவு
மலரும் போதுதான்
உலகம் அழகிய
பூவனமாகும்.
இனி ஒரு உதயம் தோன்றும்
ஈரப்பனித் தூவும் உதய வேளையில்
உரிமைகள் அந்தப்
பூவன விதைகளை ஊன்றும்..! (1992)
("ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும் " நூலிலிருந்து )