வலிப் பதிவு

தாகத்துக்கு நாக்கு நனைக்க தண்ணி இல்ல – அந்த
மேகத்துக்கும் எங்க மேல கருணை இல்ல

அடுப்படியில் ஆக்கித் தின்ன அரிசியில்ல – எங்க
அடிப்படையைத் தீர்த்து வைக்க ஓர் அரசுமில்ல

விதியேன்னு ஓய்ந்திருக்க மனசுமில்ல – நாங்க
வீதியில இறங்கிட்டோம் வேறு வழியுமில்ல

போராடி தீக்கவே முடிவு பண்ணோம் – ஆனா
யாரோடு போராடன்னு குழம்பி நின்னோம்

குத்துமதிப்பா ஒரு திசைப் பார்த்து சத்தமிட்டோம் – நாங்க
செத்துப் பிழைக்கக் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டோம்

கடைமைக்கு விசாரித்து சென்றது அரசுத் துறை – எங்களை
கடுமையாக விசாரித்தது காவல் துறை

ஒளிப்பதிவு செய்து போனாங்க ஊடகத் துறை – எங்க
வலிகளைத்தான் பதிவு செய்ய ஏது துறை?

எழுதியவர் : ரவிகுமார் (6-May-15, 9:30 am)
சேர்த்தது : Ravikumar
பார்வை : 67

மேலே