நானும் இருக்கின்றேன்...
ஆரவாரமற்ற அர்த்த சாமத்தில்
இமைகளின் விளிம்புகளில்
நித்திரையற்ற விழிகளோடு
வசந்தமற்ற வாழ்க்கையை
வருடிப் பார்க்கின்றேன்....
நெஞ்சை அடைக்கும் சித்ரவதை
உள்ளத்தில் உறைந்திருக்கும் வலிகள்
இன்னும் எத்தனை காலத்திற்கு?
சலனமற்று விழிகளிலிருந்து வெடித்துச்
சிதறிய கண்ணீர்த் துளிகள் தரையெங்கும்...
காலத்தின் போக்கில் பயணிக்கின்றேன்
கண்மூடி யாகம் செய்ய கானகம் செல்லவில்லை
சித்தர் பூமியில் சிவனை தேடவில்லை
விரதம் கொண்டு விளக்கேற்றவில்லை
கூட்டம் கூட்டி அருள் சொல்லவில்லை
கார்காலத் தென்றலிலும்
கொதிக்கின்ற சோலையாய்...
கவிபாடிச் சென்றாலும்
விரல் தீண்டாத வீணையாய்...
எழுத்துக்கள் நிறைந்திருந்தாலும்
எழுதப்படாத காகிதமாய்...
விதை தூவி கிடந்தாலும்
விளையாத தரிசு நிலமாய்...
தாக்கம் நிறைந்த தரணியில்
தவமாய் வாழ்கின்றேன்...
ஏக்கம் கொண்ட நெஞ்சினில்
எதிர்பார்ப்பின்றி கிடக்கின்றேன்...
நீ இருப்பதினால் நானும் இருக்கின்றேன்...