மூழ்கிப் போகும் முன் முத்தமிட வா

உதிர்ந்து கிடக்கும் உன் நினைவுகளை
கோர்த்துக் கொண்டிருக்கிறேன் !
விழிகளில் உலாவுகிறாய் நீ !
விழி மூட மனமின்றி
தூக்கம் தவிர்க்கிறேன் !
செவிகள் உன் குரலையே
மொழிந்து கொண்டிருக்கிறது !
உச்சரித்துச் சிலிர்க்கிறது
உதடுகள் உன் பெயரை !
நீ கழற்றி வீசிய சட்டை அணிந்து
உன் வேர்வை வாசம் சுவாசித்து
உயிர்த்தெழுகிறேன் நான் !
நீ அருகிருக்கும் போது நான்
அறியாமல் போன காதல் !
சிக்கி முக்கி கல்லாய்
உரசிக் கொள்கையில்
பொறி கிளம்ப நீ மூட்டும்
வார்த்தை நெருப்பில்
தீ குளித்த தினங்களில்
பூமி பிளவாது புன்னகைத்து
நின்றது என் சுவாசங்களில்
முத்தமிடும் உன்
காதலை கண்டு தானோ !
தலையணையில் முகம் புதைத்து
தனிமையில் மரணித்து
உன் நினைவுகளின் பிரபஞ்சத்தில்
நீந்திக் கிடக்கிறேன் !
என் கனவுகளின் கந்தர்வனே
கண்களின் கரை உடைந்து
முகமெல்லாம் குளமாக நான்
மூழ்கிப் போகும் முன்
முத்தமிட வா !

எழுதியவர் : thilakavathy (7-May-15, 1:19 am)
சேர்த்தது : thilakavathy
பார்வை : 97

மேலே