அவன் மெல்ல அவளாகிப் போனான்

பத்து மாதம் சுமந்த அன்னை
பெரு வலியுடனும்
பேருவகையுடனும்
பெற்றெடுத்தாள் அவனை..!

பந்து மட்டையுடன் மைதானமே
கதியென்று அவன் நண்பர்கள்..
பல்லாங்குழியும் மரப்பாச்சியுமாய்
வீட்டிலேயே முடங்கினான் அவன்..!

மீசை அரும்பிட காளையென
துள்ளித் திரிந்தனர் அவன் தோழர்கள்
மென் புன்னகையும் புது வெட்கமுமாய்
அன்ன நடை பயின்றான் அவன்..!

ஈன்ற பொழுதினும் பெருவலி கண்டாள்
தன் மகனை மாற்றான் என அறிந்த
அவன் அன்புத் தாய்..!

நட்ட நடு நிசியிலே - கெட்டதொரு
கனவு கண்ட வேளையிலே
பிழையென வடித்த சிலையாய்
மெல்ல... மெல்ல....
அவன் அவளாகிப் போனான்..!

பள்ளியின் சேர்க்கைப் படிவம் முதல்
மீந்தன கழியும் கழிவறை வரை
தன் இனம் காணாத அவள்,
தன்னுளே தன்னை..
ஒளித்து வைத்துகொண்டாள்..!

திருநிறைச் செல்வியையும்
சுமங்கலித் திருமதியையும்
ஒன்றாய் எண்ணும் சில மானுடரின்
உடற்பசிக்குத் தான் விருந்தாகி தன்
வயிற்றுப்பசி விரட்டினாள்
திரு"நங்கை" என்னும் அவள்..!

நவீன காலத்தின் பெரு வளர்ச்சியில்
இன்று தன்னை கொஞ்சமே..
கொஞ்சமாய் வெளிப்படுத்துகிறாள்
சமூக ஆர்வலராய்..ஊடக மங்கையாய் ..
கவிஞராய்..அரசு ஊழியராய்..
பேறு காலம் பார்த்திடும் ஓர் தாயாய்..!

கூன் குருடு செவிடு நீங்கிப்
பிறந்த அவள் - பேடு நீங்கிப்
பிறக்கவில்லை...அவ்வளவே...!

அரிதினும் அரிதாய் மனிதப் பிறவி
கொண்டவர்கள் அனைவரும்
கலியுகத்தில் மனிதர்களாய் இல்லை..

ஆனால்,
தன் பிறவிப் பயனறிந்து வாழ்ந்திடப்
போராடும் நம் தோழி அவளுக்குத்
தந்திடுவோம் நம் அன்பும் ஆதரவும்...!!!

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (7-May-15, 12:38 pm)
பார்வை : 1100

மேலே