300 ரூபா பத்தல

300 ரூபா பத்தல..........

பட்டுப்போன மூங்கில்வெட்டி
பனையோலை மேலகட்டி
ஓட்டக் குடிசையில
ஒண்டியாய் வாழும்
ஓணாண்டி கதகேளு.....


கூலி வேலைசெஞ்சு
கூழ் குடிக்கும் குலத்தவன்
குத்தகைக்கு நிலமெடுத்து
குறும்பயிர் நாலுவச்சு
அரைவயிறு மூனுநாளும்
குறைவயிறு மீதிநாளும்
ஆண்டுதள்ளும் விவசாயி
ஆண்டு தள்ளும் விவசாயி.....

சூரியன் முழிக்கும்முன்னே
சுறுசுறுப்பா விழிசெழுந்து
காளைமாடு ரெண்டுபூடி
எட்டுமுறை ஏரோட்டி


பத்துப் பண வட்டிக்கு
பத்தாயிரம் ரூபா பணம்வாங்கி
நட்டுவைக்க நாத்துவாங்கி
வேகாத வெயிலுல
வெந்துபோக வேலைசெஞ்சு
பாதி உசுர்போக
மீதி உசுர்சாக

கொட்டிஊத்தும் வேர்வையெல்லாம்
கொளமா நிறைஞ்சு நிக்க
வரிசை மாறாம நாத்திட்டு
வாய்கால் வகுந்தெடுத்து
வாரிவாரி நீர் எறச்சு
பயிருக்கு பசிக்குமின்னு
குத்தாலக் குடிசவீட்ட
அடமானம் அஞ்சுமாசம்
வீட்டோட மானமும்.....

மூனுமூட்ட ஒரம் வாங்கி
முக்கால்வயல் வச்சபின்னே
முடிஞ்சுபோச்சு மூட்டையெல்லாம்
மூணுமாசம் முழிச்சிருந்து
வரப்புமேல உக்காந்து
வாய்க்காத் தண்ணியில
வாயக் கொப்புழிச்சு
வரகுக்கூழ் குடிக்கையிலே

வச்சகண் வாங்காம
கன்னிக் கதிரெல்லாம்
மணிமணியா மாலையோடு
வயசுக்கு வந்தபுள்ள
வெளியவர வெக்கப்பட்டு
தலைகுனிஞ்சு நிக்கறாப்ல
பச்சப் பயிரெல்லாம்
பால் நிறைஞ்சு நிக்கயில...
அவன் கூழ் திரிஞ்சு போனதென்ன??

வர்ற காசுல
வட்டிய கட்டிட்டு
வீட்ட திருப்பிர்லாம்னு
வானத்த பாத்து
வார்த்த ரெண்டு பேசயிலே ....

பூப்பூக்கும் புஞ்சவனத்தில்
பூகம்பம் வந்ததென்ன??
ஈச்சமரக் காட்டுல...
இடியிறங்கிய கதையென்ன??
தாலிக் கயிறு
தானா அருந்ததென்ன ??

ஆத்துத் தண்ணி
அடியோட வத்திப்போக
ஊத்துத் தண்ணி
உசுரையே கொத்திபோக
வந்த தண்ணி வத்திப்போக
நொந்துபோய்க் கண்ணீர்வர
பால்நெறஞ்ச கதிரெல்லாம்
தூள் நிறைஞ்சு போனதேனா??


வட்டிக்கு குடுத்தவன்
தினம் வெட்டிக் கொல்லுறான் ....
குடியிருந்த குடிசைவீடும்
குடிமுழுகிப் போயிருச்சே ...

வரண்டுபோன காட்டுல.....
வைக்கப்புல் அறுத்தெடுத்து
வாய்கூவி வித்தாக்க
குத்தகைக்கு பணங்கொடுக்க
முன்னூறு ரூபா பத்தல......
முடிவென்ன சொல்றது
இங்க வாழ்க்கையே முடிஞ்சுபோச்சே ........


~தமிழ்நேசன்.

எழுதியவர் : தமிழ்நேசன் (யோகேஷ் பிரபு இ (7-May-15, 10:18 pm)
சேர்த்தது : யோகேஷ் பிரபு இரா
பார்வை : 68

மேலே