இதனால தான் சம்மதிச்சேன்

உங்க மாமாவ கூப்டுற சாக்குல
அப்பப்போ வீட்டு வாசல்ல
மனுசன் வந்து நின்னதாலோ..

பட்டாம்பூச்சி காலர்
படபடன்னு பறக்க
இவுக சைக்கிள்ல
போனதாலோ..

வெள்ளிக்கிழம சாய்ங்காலம்
ஆயிரத்தம்மன் கோயிலுக்கு
அழகான ஆலிவ் கலரு சட்டயவே
போட்டுட்டு வந்ததாலோ..

தெருவே திட்டுனாலும்
எனக்குப் புடிச்ச அந்த
வெட்டிவேரு வாசத்த
காத்துல சத்தமா பரவவிட்டதாலோ..

இவர கட்டிக்க
தலையாட்டுனேன்னு
நினச்சிக்கிட்டு கெடக்காரு.
உங்க தாத்தா சொன்னதாலல்ல
நான் சம்மதிச்சசேன்.

நாங்க மட்டும்
என்னவாம்..?

என்னோட சிவாஜி கிருதாவ
தூரமா நின்னுகிட்டு
சூப்பர்னு சொன்னதாலோ

எட்டு மணி பஸ்ஸ
வேணும்னுட்ட இவ
தவறவிட்டுட்டு நின்னதாலோ..

திண்ணையில உட்காந்துட்டு
மூனு மணி நேரமா
பிரிச்சி பிரிச்சி சட
பின்னிக்கிட்டதாலோ..

எல்லா தீபாவளிக்கும்
ஆலிவ் கலர்லயே இவ
ஒரு சேல எடுத்து கட்டிக்கிட்டு
முன்னால நடந்ததாலோ..

நான் இவள
கட்டிக்கிட்டேன்னு
நினச்சிட்டு கெடக்கா..
உங்க பாட்டி சொன்னதாலல்ல
நான் சம்மதிச்சேன்..

இவர்கள் என் காதில்
எழுதியதை விட
ஒரு பெரிய காதல் கவிதையை
காகிதத்தில் என்னால்
என்ன எழுதிவிட முடியும்?
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (8-May-15, 8:41 am)
பார்வை : 89

மேலே