படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - காத்திருப்பு

அன்னை தந்தை தம்பி என‌
அழகான என் குடும்பம்
ஆழியிலே அடித்துச்செல்ல
ஏனோ என்னை மட்டும் விட்டுச்சென்ற
காரணம் தான் தெரியவில்லை...

மறுவாழ்வு மையமென வந்தோரை வாழவைக்கும்
மகராசன் வீட்டுக்கு ம‌ருமகளாய் அழைத்துச்செல்ல..
அங்கு பெறாமல் நான் பெற்ற‌
பிள்ளைகள் தான் ஏராளம்..
அனைவரையும் ஒரு நாள்
அரசனாக்க ஆசையுண்டு..

இப்போது கடலுக்குள் சென்றிருக்கும்
என்னவனின் வருகைக்காக இசையோடு காத்திருக்கேன்...
வலையெடுத்து போனவனை காணாமல் பாத்திருக்கேன்....
காற்றிடமும் மழையிடமும் சேதிசொல்லி அனுப்பிவிட்டேன்..

கடலுக்குள் போகின்ற சொந்தங்களே..!
அவனுக்காக ஒரு ஜீவன்
காத்திருக்கும் சேதி மட்டும்
மறக்காமல் சொல்லிடுங்கள்...
அவன் திசை மாறிச் சென்றிருந்தால்
என் திசை நோக்கி தள்ளிடுங்கள்....

அவன் நலமோடு வந்துசேரும்
சேதி வரும் வரை
கனவுகளோடு காத்திருப்பேன் கரையினிலே....

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-May-15, 5:45 pm)
பார்வை : 143

மேலே