சில கவிதைகள்

விரட்டப்படும்
பிச்சைக்காரி
திருடிவிட்டுப் போனாள்.

உள் நுழைந்த ஒரு
ஈயோடு மூடப்படுகிறது
பண்டக் குடுவை.

சொட்டுச் சொட்டாய்
விழுகிறது சாயம்.

இப்பொழுதும் அவன்
அந்த சட்டையை
மாற்றியிருக்கவில்லை.

இன்றும் சனி
கிழிக்கப்படாத
ஒரு நாட்காட்டியில்.

வடையின்
நெஞ்சத்தையாவது
பிழிகிறது
அந்த சாவுச்செய்தி.

தொலைக்காட்சியில்
நடிகையின் ஆட்டம்
நழுவுகிறது ஒருவரின்
கோப்பை.

சிலர்
இந்தியாவை மாற்றும்
எல்லா திட்டங்களையும் தீட்டினர்
சில்லறை பாக்கி வாங்கும் வரை.

ஒரு தேநீர் வாங்கப் போனேன்
சில கவிதைகள் கிடைத்தன.

சீக்கிரம்
எழுத வேண்டும்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (10-May-15, 7:59 pm)
Tanglish : sila kavidaigal
பார்வை : 107

மேலே