எங்கள் பாட்டி
தென்குமரி மண்ணிலே
தென்றலாக பிறந்தாள்,
வள்ளியம்மாள் மடியினிலே
மகளாக தவழ்ந்தாள்
எழுத்தை பெறாள்,
எண்வர் பெற்றாள்,
எங்கள் அன்னைக்கே
அன்னையாய் நின்றாள்
வறுமை வாட்டினும்
வயிறு வாடாது கொடுத்தார்
உபசரிப்பில் இவருக்கு
இணையொருவர் இல்லை பார்.
கொல்லாந்தோப்பும், தென்னந்தோப்பும்
விறகு தேடி வருவாள்..
வேப்படியும், புளியடியும்
சருகு அரித்து அமர்வாள்...
கைகள் தேய்ந்து ஓயும் வரை
தண்ணீர் சேந்தி விற்றாள்
எங்கள் அன்னை உயிர் வளர
தன்னுடலும் இற்றாள்
பள்ளி லீவு விட்டு விட்டால்
பிள்ளைகளுக்கா கொண்டாட்டம் ?
பேரப்பிள்ளைகளை எதிர்பார்த்து
எங்கள் பாட்டிக்கன்றோ கொண்டாட்டம் !..
சந்தை சென்று வரும் போது
மிட்டாய் பொதிந்து வருவாள்
பேரப்பிள்ளைகள் தேடி
அதை கொண்டு தர நடப்பாள்
சுள்ளி கூட்டி அடுப்பேற்றி
சுக்கு காபி தருவாள்
ஒண்டியாக மாவிடித்து
புட்டவித்து தருவாள்
மண்ணெண்ணெய் விளக்கொளியில்
கதை சொல்லி சிரிப்பாள்
உறக்கம் வந்து தழுவையிலே
மடியோடு அணைப்பாள்
உடலொடுங்கி போன பின்னும்
சோறு கொண்டு திரிவாள்
தொந்தரவு பல செய்தே
உண்ண வைத்து மகிழ்வாள்
லீவு முடிந்து போகும் போது
அள்ளி அணைத்து அழுவாள்
வியர்வையோடு சுருட்டிவைத்த
பணத்தாளும் தருவாள்
இத்தனை நாள் எங்களை
காத்தாயே மரியம்மா !
இனிமேலே அது போல
ஆதரிப்பது எவரம்மா ?
இருக்கும் வரை உன்னை
நினைத்து பார்த்ததில்லை
ஒருவரும்
இன்று உன்னை
நினைத்து நினைத்து
அழுகிறோமே தினம் தினம்.
நினைவு தினம் ?!
எதற்கு நினைவு தினம் ?
உன் அத்தனை பேரருக்கும்
நினைவே நீதான் தினம்.