பழக்கம் தோஷம் அல்ல
ஆறரை மணி பஸ்சு.....
தாத்தா
அப்படிச் சொல்லித்தான் தெரியும்
அது ஆறரை மணிக்கெல்லாம்
வந்துவிடுமென்பது....
தண்ணீர் இறைக்கச் செல்லும்
அப்பாவும் எப்பொழுதாவது
கேட்பதுண்டு... அப்பேருந்தின்
இனிசியலாகியிருந்த
பெயரைச் சொல்லி......! அவர் காலத்திய
வருகை நேரம்
ஆறேமுக்காலாகியிருந்தது....
இனிசியல்கள் எனக்குப்
பழக்கமில்லையாதலால்....
பேருந்தின் முதலாளித் தாத்தாவின்
பெயரோடு அழைத்துக்கொள்வது
வழக்கம்....
அப்போதைக்கு அவனாகியிருந்த
பேருந்து வரும்
நேரம் ஏழு......
கீரைக்கட்டுகளோடு இன்னமும்
ஆறரைக்கெல்லாம்
வந்துவிடும் தாத்தாவிற்கு....
இன்னமும்.. அது
ஆறரைமணி பஸ்சு தான்....

