திருவலிவலம் பதிகம் 6

முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 6 ஆம் பாடல்.

தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை:

அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மணம் மிக்ககூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கி ,மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு, தன்னை வழிபடும்
அடியவர்க்கு, நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து
என்றும் இளமையோடு இருக்க அருள் புரிபவனாவான்.

குறிப்புரை:

பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகரத்தாம் போகியாயிருந்து உமாதேவியோடு பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற திருப்பாடலில் உமை பெண்யானையாக, இவர் ஆண்யானையானார் என்ற வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் அகற்றியது.

தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு நரை திரை முதலியன கெட, என்றும் இளமையோடிருக்க அருளினன் என்பதாம்.

புணர்தகை - புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது - கலத்தலை.

குறிப்பு:

திருவலிவலம்:

இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,

இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,

தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.

தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.

சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.

இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.

தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.

கோவிலுக்குச் செல்லும் வழி:

தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.

திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-May-15, 9:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே