உன் சிரிப்பின் துளி

உன் சிரிப்பின் துளி
=========================================ருத்ரா

உன் சிரிப்பின் துளி
விழுந்தால் போதும்
இந்த சஹாராக்கள் எல்லாம்
ரோஜாத்தோட்டங்கள்.

உன் ஒரு சொல் போதும்
ஒரு கல் எறிந்த மாதிரி தான்
கவலைகளின்
எல்லா அண்டங்காக்கைகளும்
சிதறி ஓடும்.

உன் பார்வை விரியல்களில்
இமைத்திரைகள்
சற்று உயர்ந்தால் போதும்
வானம் கவிழ்ந்து கிடக்கும்.

உன் முகவெளிச்சம்
பளீரிட்டால் போதும்
நிலவுகள் கூட
"ஃபேசியல்" செய்து கொள்ள‌
அழகு நிலையங்களின்
முகவரிகள் தேடும்.

உன் நடையே
எந்தக் கொம்பனான
பரத முனிவரையும்
கலவரப்படுத்தி விடும்.
எந்த அபிநயத்தை முத்திரையை
இனி எழுதுவேன் என‌
முடங்கிப்போக வைத்து விடும்.

காளிதாசன்களும் வைரமுத்துக்களும்
சொல்லுக்கு பஞ்சம் வந்ததென‌
உன் குழறல் மொழிக்கும்
யாப்பிலக்கணம் தேடி வருவார்கள்.

ஆத்தே..ஆத்தே என்று
உன் கொலவரியில் சுருண்டவர்களும்
கசாப்பு செய்யப்பட்டது
அறுவாள் போல வளைந்த
உன் புருவங்களால் தானே

கருப்பையில் முதன் முதல்
மூச்சு திறந்த நுரையீரலும்
காதலுக்கு ப்ரோக்ராம் செய்யப்பட்ட‌
பூச்செண்டுகளைத்தானே
உனக்காக
சுருட்டி வைத்திருக்கிறது.
ஒரு பதினாலு வருடத்தவத்தோடு.

இந்த பூமியை
பஸ்பமாக்காமல்
தடுக்கும் ஓசோன் மண்டலமே
காதல்.
அதன் பனித்துளி முத்து
படுத்திருக்கும்
படலமே உன் இதயம்.

=================================================

எழுதியவர் : ருத்ரா (14-May-15, 2:42 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : un sirippin thuli
பார்வை : 110

மேலே