மலர்மகன் கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

மலர்மகன் கவிதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு,
அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 600 101.
உலாபேசி : 98411 81345


“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வைர வரிகளின் மூலம் உலகப்புகழ் பெற்ற கணியன் பூங்குன்றனார் போல்,
“வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வைர வரிகளின் மூலம் உலகப்புகழ் பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் கவிஞர் மலர்மகன் என்று அறியப்பட்டவர் நூலாசிரியர் கவிஞர் மலர்மகன். இந்த நூலின் மூலம் இனி கவிஞர் மலர்மகன் அவர்களின் தம்பி கவிஞாயிறு தாராபாரதி என்று அறியப்படுவார்.

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. நூலினை வெளியிட்ட இலக்கிய வீதி இனியவன் அவர்களுக்கு பாராட்டுக்கள். கவிதை எப்படி இருக்க வேண்டும்?, எப்படி எழுத வேண்டும்? என்று வளரும் கவிஞர்களுக்கு உணர்த்தும் விதமாக நூல் உள்ளது.

நூலை வாசித்துக் கொண்டே, விமர்சனத்திற்கு மேற்கோள் காட்டிட, படித்த கவிதைகளை மடித்து வைத்துக் கோண்டே வந்தேன். கடைசியில் பார்த்தால் நூலின் பெரும்பகுதி கவிதைகளை மடித்து விட்டேன். விமர்சனத்தில் முழுவதும் மேற்கோள் காட்டி விடக் கூடாது என்பதால் திரும்பவும் மறுபரிசீலனை செய்து மிகவும் பிடித்ததை மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். கவிதைகளைப் படித்துப் பாருங்கள். நீங்களே உணர்வீர்கள்.

கவிதைகளில் தேவையற்ற ஒரு சொல் கூட இருக்காது. கல்லில் தேவையற்ற பகுதிகளை நீக்கிட சிலை உருவாவது போல, கவிதைகளை சொல் சிலைகளாக செதுக்கி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன்.

நூலின் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன், உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதை, முனைவர் தெ. ஞானசுந்தரம், மறைமலை இலக்குவனார், முனைவர் கவிமாமணி குமரிச் செழியன், கவிஞர் முனைவர் இளமாறன் ஆகியோரின் அணிந்துரை ஒளிர்கின்றன. நூல் பற்றிய உயர்ந்த பிம்பத்தை உருவாக்கி விடுகின்றன. பதிப்பாளர் இலக்கிய வீதி இனியவன் இது இவருக்கு புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூடத்தான். எல்லோருடனும் இனிமையாகப் பழகிடும் பண்பாளர் அவரது பதிப்புரையும் மிக நன்று. கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அணிந்துரையும் இடம்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு.

அண்ணன் தம்பி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறுவது போல உள்ளது கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அணிந்துரையில் சிறு துளி.

“உறவால் நாங்கள் அண்ணன் தம்பிகள் ; உணர்வால் நாங்கள் அணுக்கத் தோழர்கள். நான் நோயில் படுத்தால் ; இவர் கண்ணிமையில் பாய் விரிப்பவர். என் உயிரின் மீட்சிக்காகவும், நீட்சிக்காகவும் தனது மூச்சுக்காற்றை வழங்கிக் கொண்டிருக்கும் எனது சுவாச மண்டலம் இவர்”.

ஒரு தாய் வயிற்றில் பிறந்து சொத்துக்காக சுயநலத்திற்காக சண்டையிடும் அண்ணன் தம்பிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.

நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதில் சில துளிகள் :

“என் கவிதை – ஊனமுற்றவனுக்கு ஊன்றுகோலாக உதவுமானால் என் உள்ளம் துள்ளும் ; தூங்குபவனை எழுப்பும் தூண்டுகோலாக அமையுமானால் என் இதயம் மகிழும். நிலைகுலைந்தவனை நிமிர்த்தும் நெம்புகோலாக நிற்குமானால் என் நெஞ்சு நெகிழும்”. நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிகழ்த்திடும் ஆற்றல் இந்த நூலிற்கு உண்டு என்று உறுதி கூறலாம்.

கவிதை வரிகள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களை நினைவூட்டும் விதமாக உணர்வுமிக்க வரிகளாக உள்ளன. பாராட்டுக்கள்.

மொழி!
அன்னைத் தமிழே!
அமிழ்தே உயிரே!
இனத்தைக் கூட்டும்

இதய வாகனம் நீ
உணர்வை ஊட்டும்
உறவுச் சாதனம்!

தமிழ்மொழிப்பற்றுடன் பல கவிதைகள் நூலில் உள்ளன. பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்குக். முதன்மொழி (தேவநேயப்பாவாணர் கருத்தாக்கம்)

தமிழே உலகின் முதல் மொழி !
தமிழா, இதை நீ முன்மொழி!
தமிழே நீ முதல் குடி வழி – இந்தத்
தரணி உனது வழிவழி!
ஆதிமொழியெனும் பேரிருக்கும் – மொழி
அனைத்திலும் தமிழின் வேரிருக்கும்
வேதக்கன்றுகளின் மூலமரம் – மொழி
விழுதுகள் வளர்த்த ஆலமரம்
உலகின் ஒற்றைத் தாய்மொழி – முதல்
உதடுகள் திறந்த வாய்மொழி
உலவிய முதல்கொடி தமிழ்க்கொடி – மனித
உறவுகள் நமது தொப்புள் கொடி.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பன்மொழிகள் ஆராய்ந்து, ஆய்ந்து முடிந்த முடிவாக அறிவித்த உண்மையான உலகின் முதல்மொழி தமிழ் உலகின் முதல் மனிதன் தமிழன் என்ற கருத்துக்களை வழிமொழிந்து வடித்த கவிதை மிக நன்று. இன்றைய வெளிநாட்டு ஆய்வாளர்கள் அறிவிக்கும் முடிவும் இது தான். ஆனால் தமிழன் தான் இன்னும் உணர மறுக்கின்றான்.

கோயில்கள் ,உயர் நீதி மன்றங்களில் தமிழ்மொழி ஒலிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் ஒலித்து வருகிறோம். ஆனால் இன்னும் ஒலிக்கவில்லை என்பதே உண்மை. தமிழர்களும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று விரும்பவும் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்மொழி எப்படி வளரும்?

இறைமொழி!
இறைவன் புகழைப்
பாடுவதற்கு
இன்னொரு மொழி ஏன்?
தேடுவது
தாய்மொழி என்ன
வெறும் உரையா? – வேறு
தனிமொழி என்ன
பரிந்துரையா?
மனிதன் படைத்த
கடவுளுக்கு
மானுடமொழிகள்
தெரியாதா?
மறைமொழி என்னும்
ஒரு மொழி தவிர
மற்றைய மொழிகள் புரியாதா?

இப்படி கவிதைகளைப் படித்து வரும் போது சர்வசக்தி சாமிக்கு சங்கத்தமிழ் புரியாதா? என்ற திராவிடர் கழகத்தின் கோசம் என் நினைவிற்கு வந்தது.

தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா?
என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை மாற்றி யோசித்து தமிழனுக்கு உணர்வு விதைக்கும் கவிதை மிக நன்று.

தமிழனென்று சொல்லுவோம் !

தலைகுனிந்து கொள்ளுவோம்
தன்னை மறக்கவில்லை ; தமிழன்
தமிழை மறக்கின்றான்
அன்னை மொழியை அயல்மொழியில்
அவமதிக்கிறான்.
அரசு ஆணை தமிழகத்தில்
ஆங்கிலத்திலே
அலுவலகம் கோப்புக்கு
அதே மொழியிலேயே !

தூங்குகின்ற ‘தமிழனுக்கு ஒரு பள்ளியெழுச்சி’ பாடி உள்ளார். பாருங்கள். சிந்திக்க வைக்கும் கவிதை.

ஆங்கிலமே பள்ளியெலாம்
ஆட்சிமொழி ஆகிறது
ஆலயத்தில் வடமொழியின்
ஆதிக்கம் – நடக்கிறது
தமிழ்நாட்டில் தமிழ்வீட்டில்
தமிழரவம் கேட்கலையே
தமிழ்மொழியை மறந்தவனே
தமிழ்மகனே எழுந்திருப்பாய்!

பதவி ஆசை பிடித்து அலையும் அரசியல்வாதிகளை சாடும் விதமாக வடித்த கவிதை ஒன்று. நாற்காலி!

உட்காரும் நாற்காலி – அது
ஊழலுக்குத் தொட்டில்
சர்க்காரும் தாலாட்டும்
கனங்களும் பாலூட்டும்
உட்காரும் ஆசனமே – தம்
உரிமைச் சாசனமாய்
தப்பாக எண்ணும் சிலர்
தவறுகளால் பழியேற்கும்!

மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளை சாடி வடித்த கவிதை நன்று.

மதமா? மனிதமா?
மனிதர்களைப் பண்படுத்த
மதங்கள் ; இன்று புண்படுத்தி
வதைக்கலாமா?

இப்படி பல கேள்விகள் கேட்டு வாசகர்களை சிந்திக்க வைத்து விழிப்புணர்வு விதைத்துள்ளார். மரபுக்விதை ,புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை என்று மூன்று பா வடிவிலும் முத்திரைப் பதித்து வரும் நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.



--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (14-May-15, 9:04 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 303

சிறந்த கட்டுரைகள்

மேலே