லிப்ட்டில் எங்கள் பயணம்
யுவனாகிய நானும் சோம்பலும்
பத்தாவது மாடியில் ஏறிக்கொண்டோம்..
இருவரும் வேலைக்கு செல்லும்
கணவனும் மனைவியும் வெறுமையையும்
மோதலையும் கூட்டிக்கொண்டு
எட்டாவது தளத்தில் ஏறிக்கொண்டனர்.
ஏழாவது தள எழில்மிகு யுவதி
வேண்டா வெறுப்பாக கொஞ்சம்
வெறுப்பையும் ஏற்றிக்கொண்டாள்.
குழந்தைகள் சிலரும்
அடையாளம் தெரியாத சில மனித விழுமியங்களும்
ஐந்தாவது தளத்தில் ஏறிக்கொண்டனர்.
தரை தளத்தில் நாங்கள்
சோம்பலையும்
வெறுமையையும்
மோதலையும்
வெறுப்பையும்
லிப்டிலேயே அலைய விட்டுவிட்டு
குழந்தைகளையும்
கொஞ்சம் முயற்சியையும்
கொஞ்சம் புத்துணர்ச்சியையும்
கொஞ்சம் மகிழ்ச்சியையும்
கொஞ்சம் புன்னகையையும்
அழைத்துக்கொண்டு வெளியே சென்றோம்.