சிகு புகு சிகு புகு
காலடியில் கிடக்கும்
குப்பபைக்காதிதங்களை
பொறுக்கி சுத்தம் செய்த பின்
கைகளை நீட்டுகிறார்
பிச்சைக்காரர்.
தொங்கும் கைப்பிடிகளில்
கொஞ்சநேரம் கைதிகளாய்
சிலர்.
இருக்கையில் இருந்து
முன் வந்து அவர்
பின் செல்ல
இடம் கிடைக்குமென
ஏமாந்தார் ஒருவர்.
சுமைகளோடு
சில சோக முகங்கள்.
ஆனந்தவிகடன்
மறக்கடிக்கிறது
இறங்கும் இடத்தை.
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
ஒரு செல்பேசியில் பாடல்.
சூடான கடலை சார்
சூடான கடலை சார்.
ஆறியே இருந்தது.
கண் தெரியாதவர்
விற்கிறார்
டார்ச் லைட்.
எல்லோரின்
கண்களும்
பார்க்கின்றன.
இரண்டு
குழந்தைள் மட்டுமே
வேடிக்கை பார்க்கின்றனர்.
ஒரு மூட்டைக் கவிதைளோடு
நகர்ந்துக் கொண்டிருக்கிறது
இந்த மின்சார இரயில்.
--கனா காண்பவன்