பொய்மான்கள்
பொய்மான்கள்
==================================================ருத்ரா
நான் உன்னை பார்க்க முற்பட்டேன்.
முகம் திருப்பி
எதிரே உள்ள ரவிவர்மா ஓவியத்தை
உற்று பார்ப்பது போல்
பாவனை காட்டினாய்.
அன்னம் கூட
அந்த "தமயந்தியை" விட்டு விட்டு
உன் மடியில் வந்து உட்கார்ந்து விட்டது
அதன் செய்தியை கேட்டிருந்தால்
அதில் என் புலம்பல் மட்டுமே கேட்டிருக்கும்.
நான் உன்னிடம் பேச முற்பட்டேன்.
அதற்குள் அருகில் உள்ள
உன் தோழியைக் கிள்ளி
கூச்சல் மழை பொழிய விட்டாய்.
அந்த அறை முழுவதும்
சிட்டுக்குருவிகளின்
இன்குரல் பிஞ்சுகள் அடைத்துக்கொண்டன.
அதனுள்ளும்
மயில் கீற்றின் சிறிய கீறலாய்
"என்ன தான் வேணும் உனக்கு?"
என்று
மணிரத்னத்தின் இருட்டுக் கிசுகிசுப்பாய்
கிளர்ச்சி ஊட்டினாயே.
அது போதும் எனக்கு.
"தாவு ராமா தாவு.
இலங்கையைத்தாண்டு
மாமியா செத்துப்போனா
தண்ணி கொண்டு வா"
என்று என் இடுப்புக்கயிற்றை
சுண்டினாலும் போதும்.
அது
ஒரு இனிப்பு மின்னலில்
நெய்த கயிறு அல்லவா.
எந்த மந்திரவாதி
காதல் உயிரை
அந்தக்கிளியில் அடைத்து
ஏழு கடல் ஏழு மலைக்கு அப்பால்
எங்கோ கொண்டு வைத்தான்.
காதல் மானே
போக்கு காட்டிக்கொண்டே ஓடு.
கவலையில்லை.
எங்கு ஓடினாலும்
உன் மேனியின் ஒவ்வொரு புள்ளியிலும்
ஒட்டிக்கொண்டிருப்பது
நான் தானே.
பொய்மானும் நாமே.
அம்பு விடுவதும் நாமெ.
போதும் இந்த விளையாட்டு.
==============================================