இன்பமென்று சொன்னவளே

பெற்றவளே நானுந்தன் பெருமையினை சொல்லவில்லை
கற்கவில்லை உனதன்பில் கருதரித்து வந்ததம்மா!
கருவாகி வந்தமுதல் கைகால்கள் முளைத்தமுதல்
உருகொண்டு உயிர்கொண்ட உலகாளும் தெய்வமென
இருவிழியின் நீர்விட்டு இதயத்தால் பூசித்து
நறுமணமாய் வீசுகிறேன் நாளுமுனை பேசுகிறேன்!
வயிற்றில் சுமந்தபோதும் வலியோடு துடித்தபோதும்
இயலாமல் அழுதபோதும் இன்பமென்று சொன்னவளே!
உனதரிய துடிதுடிப்பை ஒருபோதும் நானறியேன்!
இனிதின்பம் என்றவளே எப்படிதான் பொறுத்தாயோ!
அன்பென்னில் பொழிவதற்கா அத்தனையும் நீ!பொறுத்தாய்!
எனையிங்கு ஈன்றெடுக்க இரண்டாயிரம் பிறப்பெடுத்தாய்!
பட்டினியாய் கிடந்தபோதும் பழஞ்சோறு திண்ணபோதும்
பட்டணத்து அரசனைப்போல் பாதுகாத்து வளர்த்தவளே!
வறுமையோடு நாமிருந்த வாழ்க்கையினை இப்பொழுதும்
ஒருநிமிடம் எண்ணிவிட்டால் உயிர்விழியில் நீர்கசியும்!
அப்பொழுதும் குறையின்றி ஆளாக்கிப் பார்த்தவளே
இப்பொழுதும் எனக்கென்று இருப்பதனைக் கொடுப்பவளே!
உறக்கத்தில் கூடயென்னை உன்னுடனே வைப்பதற்கு
இறுக்கமாக என்கையை இணைத்தபடி இமைப்பவளே!
உள்ளத்தில் உனைவைத்தேன்; ஒருபோதும் முதியோரின்
இல்லத்தில் உனைவைக்க இமைப்பொழுதும் நான்நினையேன்!

------------
கவியன்புடன்
தேன்மொழியன்

எழுதியவர் : தேன்மொழியன் (15-May-15, 7:41 pm)
சேர்த்தது : Theanmozhiyan Mohankannayan
பார்வை : 67

மேலே