மாதவியே நீதி கொடு
கணிகைகுலம் பெற்றெடுத்த கண்ணகியே! காவியமாய்
மணிமேன்மை கலைதன்னை மடியினிலே ஈன்றவளே!
மாதவிநீ! ஒழுக்கத்தின் மகுடமாய் நின்றபோதும்
பாதகிநீ என்றுன்னை பழிசுமத்தச் செய்துவிட்டாய்!
படிதாண்டாப் பத்தினிதான் பழிக்கவில்லை; கண்ணகியின்
குடிகெடுத்தக் குற்றம்தான் குத்தியது நெஞ்சுக்குள்!
நடனத்தைக் காணவந்து நடுசபையில் உனைக்காக்க
மடையொத்த மனம்தாண்டி மதியிழந்து உன்னழகில்
மாசத்துவன் பெற்றமகன் மயங்கிவரும் வேளையிலே
பேசத்தான் மறந்துவிட்டாய்! பேச்சினிலே மயங்கிவிட்டாய்!
கொஞ்சுவது தவறென்றும் குலவுவது பிழையென்றும்
நெஞ்சத்தில் அறிந்தாலும் நிலைமறந்து கண்ணகியின்
மஞ்சத்தை அபகரித்தாய்; மலர்விழிகள் கண்ணீரில்
துஞ்சுவதை மறந்துதினம் துடிப்பதனை மறந்துவிட்டாய்!
கட்டியவன், மனையாளை கணப்பொழுதும் நினையாமல்
ஒட்டியுனை உறவாடி உலகத்தை மறக்கையிலே
ஆளவந்த மணவாளன் ஆசையென தாசையென
வாழவந்த உறவிழந்தும் வைத்திருந்த பொருளிழந்தும்
மானமிழந் தாலுமெனை மணம்புரிந்த தெய்வமவன்
காணவர வேண்டுமென கண்ணீரில் தவம்புரிந்த
தூயவளை நினைக்கையிலே துக்கத்தில் அடைபட்டேன்!
நீயவளின் வாழ்வழித்த நிலையென்னி உடைபட்டேன்!
சோலையாக அவனிருக்க தோள்களினை இறுக்குகின்ற
மாலையாக நீயிருந்தாய்; மயக்கங்கள் தீர்ந்துவெறும்
பாலையான பின்புஅவன் பக்கத்தில் துணையாய்,மனை
யாளிருந்தாள் நீயில்லை யாதென்று நான்சொல்வேன்!
பெருநாட்டு வணிகனென பெயரெடுத்து பிழையிழைத்து
பிறநாட்டில் சென்றவனின் பேருயிரைத் துறப்பதற்கு
வழிகாட்டி நின்றவளே! வனிதைகுல தேவதையே!
பழியேற்றுக் கொண்டதுயார்? பாண்டியனின் அரசன்றோ!
கோவலனை ஈர்த்தெடுத்த கூர்விழியின் பார்வையிலே
சாவவனை ஈர்ப்பதற்கும் சக்தியினை நீ!கொடுத்தாய்!
பொன்,வைரம் என்றுபல பொருளுந்தன் சுற்றத்தார்
கண்ணகியை ஏமாற்றி களவாடிப் போகையிலே
மாணிக்கச் சிலம்பிரண்டை மட்டுமவர் விட்டுவிட்டு
போனதினால் மிச்சமென்ன? பூமகளே! கொஞ்சம்கேள்!
வாணிபனின் உயிரழித்தார், மதுரைமா நகரெரித்தார்,
பூநகையாள் கண்ணகியின் புன்னகையும் சேர்த்தழித்தார்!
பல்கோடி பொருளீட்டி பாரெங்கும் புகழ்பெற்று
கொல்லனவன் சதியொன்றில் கொள்ளையனாய் பிடிபட்டு
துடிக்கையிலே; கண்ணகிக்குத் தூதனுப்ப முடியாமல்
வெடிக்கையிலே நீ!வந்து வீண்பழியை சேராமல்
தடுத்திருந்தால், தலைவன்மேல் சகதியெனப் பட்டபழி
துடைத்திருந்தால் நிறைந்திருப்பேன்! துன்பமின்றி மகிழ்ந்திருப்பேன்!
மெய்யென்றே நம்பியதை வேந்தனவன் ஆணையிட
செய்யாத குற்றத்தால் சிரம்தந்து மாண்டத்துயர்
காட்சியினை எண்ணிவிட்டால் கண்களிலே கூர்செய்த
ஈட்டியினை எறிந்ததுபோல் என்நெஞ்சம் குமுறுதம்மா!
மனையாளின் காற்சிலம்பை மறைத்தவனைப் பிடிப்பவற்கு
கணையாழி கொடுப்பதற்கும் காத்திருந்த மன்னனவன்
தனியாளாய் சிலம்போடு தவித்தவனைப் பிடித்துவர
பணியாளை அனுப்பியதில் பழியேதும் இல்லையம்மா!
கொண்டுவரச் சொன்னதொன்றே கொற்றவனின் ஆணையதை
கொன்றுவரச் சொன்னதாக குதுகலமாய் சென்றவர்கள்
புரிந்துவிட்டக் குற்றம்தான் பொன்மதுரை தீயினிலே
எரிந்ததம்மா,காதினிலே ஈயத்தை வார்த்தவர்கள்
இழைத்துவிட்டக் குற்றம்தான் இல்லயெனில் மன்னனவன்
அழைத்தவனைக் கேட்டிருப்பான் அரும்பெருமைக் காத்திருப்பான்!
சீரழிந்த வாழ்வுதனை செப்பனிடு வேனென்று
கூறிநமை மனம்தேற்றி கூட்டிவந்த நாயகனைக்
காணவில்லை என,வழியில் கண்டவரைக் கேட்டுஅடிப்
போனவழி யெல்லாம்,மனம் புலம்பி,விழி அழுதபடி
தேடிதினம் திரிய,துயர் சேதிவந்து செவிமடலை
மூடும்படிச் செய்தவனின் முகம்காண ஓடியவள்
மாண்டுவிட்ட நயகனின் மலர்மேனி கண்டு,வெறி
பூண்டுவிட்டக் கோலத்தில் புறப்பட்டு, நீதியினைக்
கொன்றுவிட்ட மன்னனவன் குலம்காண வேண்டுமெனக்
கண்ணீரைத் துடைத்து,புயல் காற்றைப்போல் பாண்டியனின்
பொன்னவக்கு வந்துநின்று போர்க்கொலம் கொண்டு,குழல்
பின்னாமல் அரசனவன் பெரும்பிழையை எடுத்துரைத்து
நின்றநிலை யாராலே? நெஞ்சத்தால் நீதிகொடு!
கண்ணகியின் கண்ணீரை காணஒரு தேதிகொடு!
உண்மையினை அறியாமல் உயிர்பறித்த அரசென்ற
பெண்பழியால் தன்குலத்தின் பெயரழிந்து போனதென்ற
செய்தியினைக் கேட்டவுடன் சீர்பெற்ற பேரரசன்
பெய்துவிட்ட மழைபோல பேரதிர்வில் வீழ்ந்ததனை
எழுதகையில் அழுகின்றேன்; இத்தனைக்கும் காரணமாய்
தொழுதவுனை எழுதுகிறேன்! தூயவளே மன்னிப்பாய்!
வனத்தீயைப் பார்த்துள்ளேன்; வனப்பினால் தீயிட்டு
வணிகனவன் வாழ்க்கையினை வழிமாறச் செய்தவளே!
அன்றங்கு இட்டதீயும் அணையாமல் பொங்கிவந்து
பொன்மதுரை நகரெரித்துப் பொசுக்கிவிட்டுப் போனதைப்பார்!
தீயிட்டு எரிந்தவடு தெரியாமல் போனாலும்,
நீயிட்டு எரிந்தவடு நினைவுக்குள் மாறலையே!
கொண்டுவா! என்றவனைக் கொன்றுவிட்டு வந்தவரைக்
கொன்றுவிட்டு வந்திருந்தால் கோபுரத்தில் சிலைவைத்து
நின்றுநான் வணங்கிடுவேன்; நீயதனை செய்யாமல்
இன்றுநான் அழுவதற்கு இடங்கொடுத்துச் சென்றுவிட்டாய்!
உருவங்கள் ஒத்தாலும் உள்ளங்கள் வேறென்ற
கருத்துரைக்க வந்தயிரு காற்சிலம்பு மட்டுந்தான்
உருப்படியாய் மிச்சமிங்கே; உன்பிழைதான் நெஞ்சத்தில்
உருத்துதம்மா; நெஞ்சத்தி உண்மையினை சொல்லிவிட்டேன்!
தவறாக எண்ணாதே! தாயே!என் மாதவியே!
எவராக இருந்தாலும் இதையேதான் சொல்லிடுவேன்!
புத்தியின்றி நானொருவன் புலம்பவில்லை, குரல்வலிக்கக்
கத்தவில்லை; இதுவுன்னைக் கவலைகொள்ள வைத்திருந்தால்
சத்தியமாய் அதுவெந்தன் தவறல்ல; இதுவரையில்
பொத்திவைத்து பொறுக்காமல் புறம்தெறித்த வலியல்லோ!
கவியன்புடன்
தேன்மொழியன்,