நிர்வாண மீன்கள்

எளிமையான வாழ்க்கை,
எதார்த்தமான நிகழ்வுகள்,
பெரிய பெரிய கனவுகளோ,
லட்சியங்களோ இல்லாத
இளைஞனாய் இருந்தேன் - திருமணம்
முடியும்வரை.

இன்றோடு விளையாட்டுபோல்
பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது.

இந்த திருமண பந்தம்,
என்னென்ன மாற்றங்கள்,
என் மீது நிகழ்த்தியுள்ளது?

யோசிக்கிறேன்.....!

கண்விழிக்கும் நேரத்தில்
மாற்றமில்லை.
கண்ணயரும் நேரமும்
என் விருப்பமே.
இதில் மாற்றம் வேண்டி - என்னவள்
செல்லச் சண்டை இடுவாளே தவிர,
செங்கொடி பிடித்தாய் நினைவில்லை.

எதுவும் படிக்கலாம்,
எப்போதும் எழுதலாம்,
இது குறைந்த நேரமே என்றாலும்,
குணவதியின் குமுறல் கேட்டதில்லை.

வாசகியாய் சிலநேரமும்,
விமர்சகியாய் பலநேரமும் செலவிட்டாலும்,
எனக்கு ஒருபோதும் திகட்டியதில்லை.

அலுவலக அவஸ்தையோ,
நண்பர்களின் நாசவேலையோ
இல்லை நான் விரும்பியோ
நேரம் தாழ்த்தி வீட்டையும் போது
பயமின்றி உள்ளே செல்லலாம்.

ஆன்மீகப் பயணத்திற்கும்
தடை போட்டதில்லை.

நான், என் தாய்,
தகப்பனிடம் பழகும் பக்குவத்திலும்
பங்கமில்லை.

சில மாற்றங்கள்
என் வயது முதிர்ச்சியாலும்,
அறிவு முதிர்ச்சியாலும்
நிகழ்தவையே.

திருமணம் என்னை
பட்டை தீட்டவில்லை,
மழுங்கிப் போகவும் விடவில்லை.

நான் நானாகவே
இருந்கிறேன்,
அவளும் அவளாகவே
இருக்கிறாள் என்று நம்புகிறேன்.

நாங்கள் இருவரும்,
பெரிதாக ஆசைப்பட்டதோ,
பொறாமை பட்டதோ,
பணத்தை சேர்க்க திட்டம் தீட்டியதோ,
சேர்த்த பணத்தை முதலீடு செய்ததோ,
ஆதங்கபட்டதோ, தோல்வியில் துவண்டதோ,
வெற்றிகளில் வெறி கொண்டு ஆடியதோ,
இல்லையென்று தீர்க்கமாய் கூறுவேன்.

இது சரியான வாழ்க்கை முறையா?
தெரியவில்லை.

ஆனால்,
ஒன்றே ஒன்றை,
நிதம் நிதம் பின்பற்றுவோம்,
அது -
யாருடைய மனதையும்,
எதற்க்காகவும்,
எந்த சூழலிலும்,
தெரிந்தோ,
தெரியாமலோ,
புண் படுத்திவிடக் கூடாது,
என்பதில் கவனம் செலுத்துவோம்.

மற்ற நேரமெல்லாம்,
நிர்வாண மீன்கள் போல நீந்துகிறோம்,
இன்னும் நெடுந்தூரம் நீந்துவோம்..................................!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (16-May-15, 12:31 am)
Tanglish : nirvaana meenkal
பார்வை : 180

மேலே