நில் கவனி ஓடு
வாழ்கை பந்தயத்திடலில்லை
ஓடச்சொல்லி யாரும்
துப்பாக்கி வெடிக்கவும் இல்லை
ஆனாலும்
பார்வையாளர் எவருமின்றி
எல்லோருமே
ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
ஒரே திசை நோக்கி
ஒருவரை ஒருவர்
முந்திக்கொண்டு
ஒருவர் காலை ஒருவர்
வாரிவிட்டுக்கொண்டு
போன வேகத்தில்
திரும்பி வருகிறீர்கள்
தளர்ந்து போன நடையோடு
களைத்து மூச்சுவாங்க
ஒருவரை தோளை
ஒருவர் அணைத்துக் கொண்டு
ஒருத்தருக்கொருத்தர்
ஆறுதல் சொல்லிக்கொண்டு
நீங்கள் ஓடிய பாதையில்
ஒன்றுமே நகரவில்லை
உங்களைத்தவிர
பந்தய எல்லைகளும்
வகுக்கப்படவில்லை
பின் நீங்கள் மட்டும்
எதை நோக்கிஓடினீர்கள்
எங்கிருந்து திரும்பி வருகிறீர்கள்