ஆறுதல் தந்தவை

உயிரும் இல்லாமல்
உறவாகவும் இல்லாமல்
உணர்வுக்குள் தேங்கி நிற்கும்
தனிமைக்குத் துணையாகி
இனிமை தந்தது
மார்போடு வைத்திருந்த
தலையணை...

தனிமையில் வெறுமையாய்
வேடிக்கை பார்த்த போது
தூரத்தில் நடந்தபடி
புன்னகை வீசி
புத்துயிர் தந்து போனது
யாரோ ஓர்
குழந்தை...

ஏதோ வேதனையில்
எங்கோ வெறித்து பார்க்க
வேடிக்கையாய் சிரித்தே
அறிவுரை தந்தது
முட்கள் நடுவில்
பூத்திருந்த புது
ரோஜா...

பேருந்து பயணத்தில்
பெருந்துயர் நேரத்தில்
சாளரத்தின் ஓரத்தில்
சாய்ந்திருந்த தலைகோதி
ஆறுதல் தந்தது
சாளரத்து வழிவந்த
காற்று...

வெட்ட வெளியில்
தடுமாறும் நடையில்
இருள் சூழ்ந்த நொடியில்
ஒளி தந்து
வழி காட்டியது
வானில் உலாவந்த
நிலா...

விழியோரம் வழிந்த
கண்ணீர் தூரலின்
காயங்கள் எல்லாம்
தண்ணீர் சாரலால்
ஆற்றிப் போனது
தாகம் தீர்க்கும்
மழை...

உதட்டோடு ஒட்டிக்கிடக்கும்
வெற்றுப் புன்னகையின்
மொழி அறிந்து
நம்பிக்கை தந்தது -நம்
நலம் விரும்பும்
நட்பு மட்டுமே...

எழுதியவர் : இந்திரா (17-May-15, 12:19 am)
பார்வை : 327

மேலே