நாத்து நட போன ஆத்தா

ஆத்தங்கரை தாண்டி
நாத்துநட போனஆத்தா
அந்தி சாய்ஞ்சிருச்சி
ஆள இன்னும் காணலியே!
நீ சுள்ளிபொறுக்கிவந்து
சுடுகஞ்சி காய்ச்சிதந்து
சுகமா நா கண்ணுறங்க
சோகத்தாலாட்ட பாட்டில்வச்ச!
பள்ளிக்கூடம் போறபுள்ள
பளபளன்னு போகனும்னு
பாதிராவு ஆனாலும்
ஒத்த சட்ட தொவச்சி வைப்ப
அந்திசாம பொழுதுவர
சலிக்காம நீ ஒழப்ப
அலுப்பு தீர தூங்கிடாம
அவசரமா எழுந்துருப்ப!
வெடவெடக்கும் குளுருல நா
ஒடுங்கி சுருண்டு படுத்துருப்பேன்
நா கண்விழிச்சி முழிச்சிடாம
உன் பொத்தல் சேல போத்தி வைப்ப!
ஜானமூட்டு கொட்டாயில
சாணிய நீ எடுத்துவந்து
வாசலிலே நீர்தெளிச்சி
வைகறையை எழுப்பிடுவே!
கரிபடிஞ்ச பானையில
கூழும் நீ கரச்சி வைப்ப
காரணம் நா கேட்டாக்கா
காந்தல்ருசி மணக்குதும்பே!
என்ன பெத்த ஆத்தாவே
நிக்காம உழைக்குறியே
நம்ம களத்துமேட்டு நெல்லெல்லாம்
பாதிவெல காணலம்மா!
உன் ஒத்தத்தோடு அடகுபோச்சி
நீ ஓழச்ச ஒழப்பு வீணா போச்சு
அடுத்த வருச வெதப்புக்குத்தான்
ஒரு குண்டுமணி வெதயெல்லயே!

எழுதியவர் : காமராசன் மண்டகொளத்தூர் (17-May-15, 8:04 am)
பார்வை : 124

மேலே