நீர் என்பது உயிர் வார்த்தை – ஆதி பார்த்தீபன்
நீர் ஒரு தீட்டுத்துணியாய் விரிந்தது
அதை அறிந்தவர்கள்
தொடத்தயங்கினார்கள்
குழந்தைகள் விளையாடத்தொடங்கினார்கள்
நீர் ஒரு மௌனம் என உள்ளிறங்கியது
நீர் ஒரு வாயொட்டும் பசையாக மாறியது
அதை அறிந்தவர்கள்
பேசமுடியாதிருந்தார்கள்
பேசிக்கொண்டிருந்தவர்களோ நிறுத்தமுடியாதிருந்தார்கள் – நீர் போலஇ
நீரொரு விசமென நிறைந்தது
அருந்தியவர்கள் அடிமையானார்கள்
அறிந்தவர்கள் அமைதியானார்கள்
நீரொரு புனிதமென்றிருக்கலாம்
நீரொரு பெண்ணெண்றிருக்கலாம்
நீரொரு வார்த்தை என்றிருக்கலாம்
அதை அறிந்தவர்கள் எழுதத்தயங்கினார்கள்
அறியாதவர்கள் அருந்தி முடித்தார்கள்
நீரொரு குருதியென உருமாற
உள்ளூர
குருதியின் வாசனை கமழ்ந்தது
நீரை நீரென்றார்கள் அறிந்தவர்கள்
அறியாதவர்கள் ஆறு கடல் நதி என்றார்கள்
கிணறெனும் சுவர் வேலிக்குள் நீர் சிறைபட்டுகொண்டது
கவிஞர்கள் அன்பின் கண்ணீரென்றார்கள் நானோ மேலும்
மேலும் நீரைப்பார்த்து சொல்கிறேன்
எனது நீர் என்னை வஞ்சிக்கும்
எண்ணெய்க்கடல்.
- ஆதி பார்த்தீபன்