உன் பின்னால் நாளும் உறக்கமின்றி அலைகிறேன் உயிரே

நீ தூங்கும் நேரத்தில் உன்
மொட்டை மாடி வந்து
கெட்ட பையனாகித் தழுவிடக் காற்றிடம்
வட்ட நிலவேந்தி பிச்சை கேட்கின்றன
தினம் ஆயிரம் நட்சத்திரங்கள்.......

வட்டுக் கருப்பட்டி மேனியலை
கட்டிக் கரும்பென்றெண்ணி சில
குட்டி எறும்புகள் கை தட்டிக் கும்மியடித்து
தொட்டுப் பார்த்து அவள் விரல்
பட்டுப் பூத்து பறந்து செல்கின்றன......

வெண் பனி படர்ந்திட்ட
கண்மணி கன்னம் சறுக்கி நான்கு
மின் மினி பூச்சிகள் போட்டியிட
தன்னிலை மறந்து அவை நசுக்கப்
பண் எழுப்பிப் புறப்பட்டது காற்று.......

அவள் வளைவுகளில்
இதழ் நெளிவுகளில்
இதயம் தொலைத்த
ஆதவன் சீக்கிரம்
உதயமாகி உமை
உடல் முழுதும் பொன்
உடை புனைந்திட தன் கொடி
உயர்த்திட வெண் மதியிடம்
உண்மைச்சண்டை போடுகிறான்....

உயிருள்ள உயிரற்ற
உருவமுள்ள உருவமற்ற எல்லாம்
உலகில் உன் பின்னால் அலைவதை
உடைத்திட உன் பின்னால் நாளும்
உறக்கமின்றி அலைகிறேன்
உயிரே.......

எழுதியவர் : நஞ்சப்பன் (20-May-15, 10:18 am)
பார்வை : 112

மேலே